Saturday, December 14, 2013

கற்றுமறவா காதல்


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று காலை 6 மணிக்கு ஒலித்த கடிகாரத்தின் மண்டையில் தட்டிவிட்டு மெல்ல எழுந்தேன்..!!!

இரு கைகளையும் முன்புறமாக நீட்டி..,  சுவரைத் தடவி தடவியே.., அறையின் அடுத்த மூலையில் இருந்த அந்த டேபிளை அடைந்தேன் . டேபிளின் மீதிருந்த பெட்டியைத் திறந்து.., உள்ளே கைவிட்டு மூக்கு கண்ணாடியைத் தேடி அணிந்து கொண்டேன் . அப்புறம் கண்களை மெல்ல திறந்து பெட்டியின் உட்புறமாக ஒட்டப்பட்டிருந்த விநாயகரின் படத்தில் கண் விழித்தேன்..!!!

ஒரு வருடமாக இந்த நாளுக்காக காத்திருந்த நாட்களை மெல்ல அசைப்போட்டேன்.. இந்த நாள் தரப்போகும் இன்பத்தை நினைத்து உடனடியாக சுறுசுறுப்பானேன் ., டேபிளுக்கு அடியில் இருந்த பக்கெட்டை வெளியே இழுத்தேன். ப்ரஷ் எடுத்து வாயில் வைத்துக்கொண்டு.., சோப்பு டப்பாவும், டவலும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்

குளித்து முடித்து வந்து மணியைப் பார்த்தேன்.. ஏழை காட்டியது... வேக வேகமாக சட்டையை அணிந்துக் கொண்டு இருந்தேன்...

"என்னடா வசந்த்.., கெளம்பிட்டியா..?" என்று தூக்கத்திலிருந்து எழுந்த முத்து கேட்டான்..

"ம்ம்.. ஆமாம்..!! நீ எங்கும் வெளிய போகலையா முத்து ..?"

"போ போ.. நானும் நீ போற இடத்துக்கு தான் வரணும்.. நான் கொஞ்சம் நேரம் கழித்து வரேன்.."

பேண்டை அணியும் போது ஏதோ ஒன்று பாக்கெட்டில் தட்டுப்பட என்னவென்று அறிந்து கொள்ளபேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுப் பார்த்தேன்..!! பாக்கெட் கத்தி..!!

"டேய்.., என்ன டா இது..,"

"பார்த்தா தெரில.., அது கத்தி.."

"அது தெரியுது.. எத்தன தடவ சொல்லி இருக்கேன்.. நீ என்ன வேணும்னாலும் பண்ணு.., யாரை வேணும்னாலும் கொலை பண்ணு.. ஆனா அப்படி போகும்போது என் பேண்ட்ட போடாதன்னு சொல்லி இருக்கேன்ல.."

"விட்றா.. நேத்து ஏதோ அவசரத்துல தெரியாம போட்டுட்டு போயிட்டேன்.. அதுக்கு என்ன இப்போ..? “

"சரி.. போட்டதுதான் போட்டுட்டு போன.. இதெல்லாம் எதுக்கு பாக்கெட்ல வச்சிக்கிட்டே சுத்துற.."

"நம்ம டார்கெட் எப்போ வேணும்னாலும் வெளிய வரும் மச்சி..!!!  நாமதான் அதை கபால்ன்னு புடிச்சுக்கணும்.. புரியுதா..??”

"காலையிலேயே வெறுப்பேத்தாதடா..!!"

"யப்பா.., சாமி.., இனி வைக்க மாட்டேன் டா.. தயவுசெய்து இப்ப போடா.."

மணி 10- தாண்டி இருந்தது..!!!

எப்போதும் காதலர்கள் குழுமி இருக்கும் பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா.., இன்று நான்கு ஜோடி காதலர்களை மட்டும் உள்வாங்கிருந்தது...!! இங்கு தான் என் காதலி சுமித்ரா வருவாள் என்று அவளுக்காக காத்து இருக்கிறேன்..!!

சுமித்ராவை பார்த்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது..!!! கடைசியாக அவளை நான் வாங்கி கொடுத்த சிகப்பு கலர் சுடிதாரில் பார்த்தேன்..!!
நினைவுகள் பின்னோக்கி ஓடியது..!!

2012, இதே நாள்., மணி காலை 11..!!

பூங்கா முழுவதும் காதலர்களால் நிரம்பப்பட்டிருந்தது..!!! அனைவரும் இந்த உலகத்தை மறந்து வேறு உலகிற்குள் டிராவல் ஆகிக் கொண்டிருந்தனர்..!! நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்..!!

"டேய் வசந்த்.., டேய் .., என்ன டா நான் சொல்றத கேக்குறியா..?? இல்லையா..?? " என்று சுமித்ரா அதட்டினாள்..!!!

"ம்ம்ம்.. கேட்டுக்கிட்டு தான் இருக்கேன் சொல்லு டி.."  என்று அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்த நான் தலையை தூக்காமலே பதில் அளித்தேன்..!!!

"இப்ப என்ன டா பண்றது..?? டாடிக்கு நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சு போச்சு டா.. மூணு நாளா வீட்ட விட்டு வெளிய போகக்கூட விடல.. இப்ப கூட சசி வீட்டுக்கு போறேன்னு சொல்லி தான் உன்ன பார்க்க வந்து இருக்கேன்.."

“நீ கவலைப்படாத சுமி.., நான் தேவா கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.. அவன் எல்லா ஏற்பாடும் பண்ணிடுவான்..!!" நீ வெள்ளிக்கிழமை காலையில உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற வாட்டர் டேங் கிட்ட வந்து நில்லு.. நாங்க வந்து பிக்-அப் பண்ணிக்கிறோம்.."

“உன்ன நம்பி தான் டா இருக்கேன்..” என்று சொல்லிய சுமித்ராவின் முகம் சட்டென்று மாறியது..!!!

"வசந்த்.., ஒரு நிமிஷம் எழுந்துரு..!! அங்க வந்துட்டு இருக்கறவங்க டாடி ஆட்கள் மாறி இருக்கு.." என்று பதறிப்போய் எழுந்தாள்..

என்ன டா இது புது பிரச்சனை என்று நானும் தீவிரமானேன்..!!

பழைய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த என்னை.., செல்போன் சிணுங்கி 2013க்கு கொண்டு வந்தது..!! முத்து காலிங்ன்னு இருக்கவே., அட்டெண்ட் பண்ணேன்..!!

"பொறம்போக்கு.., பன்னாட.., ******.."

அந்த சைடில் முத்து வெறிப்பிடித்தவன் போல திட்டிக்கொண்டு இருந்தான்..!!

“டேய்.., இரு டா.. ஏன் டா என்ன ஆச்சு.. ஏன் இப்படி கத்துற..!!” என்று அப்பாவியாக கேட்டேன்...

“டேய்.. நீ எவள வேணும்னாலும் பார்க்க போ... அதுக்கு ஏன் டா என்ன ரூமுக்குள்ள பூட்டி வச்சிட்டு போன..” என்று சொல்லும்போது தான் உணர்ந்தேன்.., சந்தோசத்தில் கதவைப் பூட்டி விட்டு வந்துவிட்டோம் என்று...!!

“சாரி.., சாரி டா.. இரு ஒரு மணி நேரத்துல்ல வந்துறேன்..” என்று சொன்னவனை இடைமறித்து..

“அதலாம் ஒன்னும் புடுங்க வேண்டாம்..!!! பூட்டை ஒடைச்சிட்டோம்.. வரும்போது புது பூட்டு வாங்கி வா.. திருட்டு பசங்க வேற அதிகமா இருக்காங்க இங்க..”  ன்னு சொன்னவனுக்குசரி டா” என்று சொல்லி கட் பண்ணினேன்..!!!

நேரம் ஆகிவிட்டதே என்று திரும்பி பார்த்தேன்.. என் சுமி அதே.., நான் வாங்கி கொடுத்த சிகப்பு கலர் சுடிதாரில் வந்து கொண்டு இருந்தாள்..!!

ஒரு வருடத்தில் இன்னும் அழகாக மாறி இருந்தாள்..!! என் மனது முழுவதும் எல்லையில்லா மகழ்ச்சியில் கூத்தாடியது..!!!

நேராக வந்தவள்., என்னை கடந்து சென்று நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னால் அமர்ந்திருந்த அதே பெஞ்சில் அமர்ந்தாள்..!!!

ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக பிரமை பிடித்தவள் போல் அமர்ந்து இருந்தவள்.., ஓவென அழ தொடங்கினாள்..!!

நான் பதறிப்போய் ஓடினேன்..!! ஏய் சுமி அழாதடி.., அழாதன்னு சொல்றன்ல.."  என்று ஓவர் டெசிபலில் அலறினேன்..!!

அவளுக்கு ஏதும் கேக்கவில்லை போலும்.. அழுவதைத் தொடர்ந்தாள்.. கண்ணீர் வழிந்தது.. தொடைக்க முயன்று தோற்றேன்..  என் உலகம் நின்று விடும் போல இருந்தது..

இதை பார்க்கவா இத்தனை நாள் காத்திருந்தோம்.., இதை பார்க்கவா ஓடோடி வந்தோம்..  பாவம் என்னை காதலித்த ஒரே பாவத்திற்காக இத்தனை துன்பமும் அனுபவிக்கிறாள்..!!! என்னை நானே வெறுத்தேன்..!!!
 
வெறுப்பில் மறுபடியும் 2012க்கு பயணமானது என் மனது..!!

சுமித்ரா மடியிலிருந்து பதறி போய் எழுந்த என்னை.., "டங்" என்று ஏதோ ஒன்று என் பின் மண்டையில் அடித்தது..!!! அம்மா என்று அலறியபடி விழுந்தேன்..!!! இன்னொருமுறை "டங்" என்று அடித்தது.. ஆனால் இப்பொழுது என் முகத்தில் அந்த அடி விழுந்தது..

மயக்க நிலைக்குச் சென்றாலும்., என் சுமியின் உருவமும்., குரலும் உணர்வில் வைத்தது என்னை..

“டேய்., வசந்தை விடுங்கடா.., அவன் பாவம் டா.. விடுங்க டா.. என்னையும் கொல்லுங்க டா..” என்று அவள் கதறிய போதே அவளை தரதர வென இழுத்து சென்றனர்..!! 

இவர்களை அடித்து.., சுமியை கைப்பிடிக்க வேண்டும் என்று மனது நினைத்தாலும்., உடல் சற்றும் உதவவில்லை..!! மறுபடியும் ஒருமுறை "டங்"..!! இம்முறை முழுதாக மூடினேன் கண்ணை..!!!

இன்று தான் எனக்கு நினைவுநாள்..!! நான் கொல்லப்பட்ட இடத்தை தான் இப்போழுது சுமி கண்ணீரால் நனைத்துக்கொண்டு இருக்கிறாள்..!! அவளை பார்க்கவே.., இறந்தவர்கள் உலகத்திலிருந்து வந்து இருக்கிறேன்..!!

ஒருமணி நேரம் ஆகிற்று..!! அழுது அழுது சுமியின் கண்களும்., முகமும் சோர்ந்து இருந்தன..!!! அவளை ஆற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தவித்தேன்.. பெஞ்சை விட்டு எழுந்தாள்..!!

"வரேன் டா வசந்த்.."

அந்த பெஞ்சைப் பார்த்து சொல்லிவிட்டு பூங்காவின் வாசலை நோக்கி நடந்தாள்.. எவ்ளோ அன்பு வைத்து இருக்கிறாள் என் மீது.. அடுத்த பிறப்பிலாவது உன்னுடன் சேர வேண்டும் சுமி என்று  வேண்டிக்கொண்டு நானும் அவள் போகும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தேன் அவள் மறையும் வரை..!!!

சுமியின் நினைவில் அங்கேயே ரொம்ப நேரம் நின்று கொண்டு இருந்தேன்.. மணியைப் பார்த்தேன்.. 1.15 என காட்டியது.. ஐயையோ.., அந்த பிரபு ஸ்டோர் வேற 2 மணிக்கு மூடிடுவானே..!!! அவன் கடைல தான் பூட்டு நல்லா இருக்கும்..!!! இந்த மேல் உலக டிராபிக்ல எப்புடி 2 மணிக்குள்ள போறது..??? ன்னு யோசித்துக் கொண்டே பறந்தேன்..!!!


-பிரபு நிழல்-


Monday, December 9, 2013

அதிவேகம்


"பஸ்ஸு ஒரு பத்து நிமிஷம் நிக்கும்... டீ.., காபி குடிக்கறவங்க குடிச்சிட்டு வந்துருங்க.." கண்டக்டரின் கரகர குரல் அரைதூக்கத்திலிருந்த என்னை அலட்டி எழுப்பியது.. வெளியே வேறு.., சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.. மழையின் தாக்கமாக பஸ் முழுவதும் குளிர் நிரம்பி இருந்தது.. மழைக்காலம் என்பதால் என்னையும் சேர்த்து ஒரு 10 பேர் தான் பஸ்ஸில் பயணம் செய்கிறோம்.. அனைவரும் போர்வைக்குள் சுருண்டு இருந்தனர்..

"ஒரு தம்மும்..,டீயும் அடித்தால் தேவல" என்று நினைத்துக்கொணடு பஸ்ஸை விட்டு இறங்கி.., இந்த அதிகாலை 2 மணிக்கும் பரப்பரப்பாக  இயங்கிக்கொண்டு இருந்த அமுதா டீ ஸ்டாலுக்குள் நுழைந்தேன்.. "அண்ணா.., ஒரு டீ.., ஒரு கிங்ஸ்".. காசை கொடுத்து விட்டு, கிங்சை பற்ற வைத்துக்கொண்டு அருகிலிருந்த டேபிளில் அமர்ந்தேன்..

ஐயோ.. 10 மணிக்கு அம்மா போன் பண்ணி இருப்பாளே..!! மறந்துட்டோமே என்று செல்லை எடுத்துப்பார்த்தேன்.. அதில் காட்டிய 10 மிஸ்ட் கால்சும், 12 மெசேஜும் அயர்ச்சியை கொடுத்தன.. அம்மா 4 தடவை பண்ணி இருந்தாள்.. அவளுக்கு ஒரு நாளைக்கு 3 தடவை என் கூட பேசாவிட்டால் நாள் ஓடாது.. அவளுக்கு தெரியும் இன்று நான் ட்ராவலில் இருப்பேன் என்று... தூங்கியிருப்பாள்.. காலை முதல் வேலையாக அம்மாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்..!!!

மீதி அனைத்துமே.., வைஷ்ணவியால் பண்ணப்பட்டிருந்தது..!!! "வைஷ்ணவி".. என் உலகம்.., எனக்காக வாழ்பவள்.., என் காதலி.. ரொம்ப நல்லவள்.. காலேஜில் ஒரே வகுப்பில் நான்கு வருடம் என்னுடன் படித்தவள்.. அவளிடம் மொத்தமாகவே 4 தடவை தான் பேசி இருக்கிறேன் அந்த 4 வருடம் முழுவதும்.. கடைசி நாள் வகுப்பின் போது.., அவளே அவள் காதலை தனிமையில் சொல்ல விக்கித்துப்போனேன்.. அன்று முதல் என் காதலியாக  நான் பண்ணும் சேட்டைகளை தாங்கி வருகிறாள்..!! நானும், அவளும் சென்னையில் வெவ்வேறு  ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்தாலும்.. ரெண்டு நாளைக்கு ஒருமுறை பார்த்து காதல் செடிக்கு தண்ணீர் ஊற்றிவிடுவோம்..  வார இறுதியில்., சொல்லவே வேண்டாம்.. அவளுக்கு தான் மெசேஜ் டைப் பண்ணி கொண்டு இருந்தேன்.. "Sry Dear.., Thoongitten.. Morning Bangalore poitu call panra di.. Gud Nit.., Sweet Dreams" ன்னு அனுப்பி விட்டு திரும்பினேன்... 

தூரத்தில் மறுபடியும் கண்டக்டரின் குரல்., 
"யப்பா.. இந்த பெங்களூர் பஸ்ல வந்தவங்களாம் வாங்க... பஸ் கிளம்ப போகுது" ன்னு  உரக்கமாய் அழைத்தது..

ஓடி ஏறியதும்., கண்டக்டர் 
"இந்த பஸ்ஸா தம்பி" ன்னு கேட்க.., 
"ஆமா னே" ன்னு சொல்லிவிட்டு நகர்ந்தேன்.. 
" உங்க பக்கத்துல இருந்தவங்களாம் வந்துட்டாங்களான்னு செக் பண்ணிகோங்க" ன்னு கண்டக்டர் மறுபடியும்  கத்தினார்..!! 
ஒருத்தரும் அவரை சட்டை செய்ததாக தெரியவில்லை.. அவரவர் உறக்கத்தை தொடர்ந்தனர்.. 
நான் தான்.., "அங்க கடைல யாரும் இல்ல னா.. நீங்க கிளம்புங்க" ன்னு உறுதி குரல் குடுத்தேன்.. கண்டக்டர் உடனே டிரைவர் சைடு திரும்பி.., 
"கிளம்பு பா.. குமரவேலு.. நல்லா அடிச்சு ஓட்டு.. 6 மணிக்குள்ள பெங்களூர் போய்டனும்" என்று சொல்லி கொண்டே  அவர் இருக்கையில் சாய்ந்தார்..!!!

பஸ் கிளம்பி அரை மணி நேரம் ஆகியும்.., அந்த வாக்கியம்   "குமரவேலு.. நல்லா அடிச்சு ஓட்டு"..., என் மூளைக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.. "குமரவேல்"... பதினாறு வருட நண்பன்.. ஒன்றாம் வகுப்பில்.., அனைவரும் பதில் தெரியாமல் மிஸ்சிடம் கை நீட்டி அடிவாங்கிக்கொண்டு இருக்கும் போது.., இவன் அந்த மிஸ் கையே கடிச்சிவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டான்.. ரெண்டு நாளைக்கு தலையை பத்தி தான் ஸ்கூலே பேசுச்சு..!!!  மூன்றாம் நாள் வந்தான்.. அவன் பக்கத்துல போகவே பயந்தார்கள்..!! அவனோ நேராக என்னிடம் வந்து என் அருகில் அமர்ந்து.., 
"உன் கிட்ட மிஸ் எதாவது ப்ராப்ளம் பண்ணா சொல்லு.. கடிச்சிறலாம்" ன்னு சொல்லும் போது நானும் அவனை ஒரு வீரனாகவே பார்த்தேன்..

அடுத்த நாளிலிருந்து அவன் என் நெருங்கிய நண்பன் ஆனான்..!! அவன் கூடவே இருப்பதால்.., என்னையும் பார்த்து ஸ்கூலே பயந்தது..!!!  ஒரு கட்டத்தில்.., எல்லோருக்கும் தலையாக மாறிவிட்டான்.. பெரிய வகுப்பு மாணவர்களும்.., எங்கு இவன் கடிச்சிற போறான்   என்று ஒதுங்கியே போனர்...

வகுப்பும், வயசும் ஏற ஏற எங்களது குறும்புத்தனங்களும் நட்பும் இன்னும் அதிகமாகியது..!!! காற்றும் பிரிக்க இயலா நண்பர்கள் ஆனோம்..!!! பதினொன்றாம் வகுப்பில்., என் இரு நண்பர்களின் தந்தைமார்கள் தவறிவிட்டனர்.. அதில் இவன்., குமரவேலின் தந்தையும் ஒருத்தர்..  எல்லோரும் இவனுக்காக கவலைப்பட்டுக்கொண்டு இருக்கையில்.., இவன் மூன்றாவது நாள் அசால்ட்டாக கிளாஸ்க்கு வந்தான்.. 
"அதான் போய்ட்டார்.. இப்ப என்ன டா பண்ணா சொல்ற.. அவர் என் மீது வைத்து இருந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டாமா...??" என்று அவன் கேட்ட விதம் என்னை அவன் ரசிகனாக்கியது..!!! இன்னொரு பையன் 1 மாதம் கழித்தே பள்ளி வந்தான்...

பன்னிரெண்டாம் வகுப்பிலே அவனுக்கு காதல் மலர்ந்து விட்டது... அவனிடம் பிடிக்காத ஒன்றே இதான்.. எதிலும் அவசரம்..!!! அதற்கும் அவன் பதில் வைத்து இருப்பான்.. 
"நீ முந்தவில்லை என்றால் உன்னை ஒருவன் முந்திடுவான் என்று".. அதிலும் அந்த பெண்ணின் அப்பன் ஒரு போலீஸ்கார்..!! பலமுறை அவள் அப்பனிடமே இவன் அடி வாங்கி இருக்கிறான்..!!! இருந்தும் அந்த  தெய்வீக காதல் காலேஜ் பருவத்திலும் தொடர்ந்தது..!!!

அவனும்., நானும் வெவ்வேறு காலேஜில் படித்தாலும்.., தினமும் போன்  பண்ணி அவன் காதலை சொல்லி உயிரை எடுப்பான்.. திடீரென்று நான்காவது வருடம் முடிந்ததும்.., என் வீட்டின் முன் வந்து நின்று என்னை அழைத்தான்..
"டேய் சூர்யா(சாரிங்க.., சூர்யா தான் என் பேரு)., வாடா.. மயிலம் கோவிலுக்கு போகணும்ன்னு...
நான்.., "எதுக்கு டா அங்க போகணும்.. யாருக்காவது கல்யாணமா..?? பொதுவாக கல்யாணம் பண்ண தான் அந்த கோவிலுக்கு போவாங்க" என்றேன்..

 "ஆமா டா எனக்கு தான்.. எனக்கும்., ரூபாக்கும்(அவன் காதலியின் பெயர்.. எனக்கு தங்கை முறையென்று சொன்னான்) தான்" என்று அவன் சொன்ன உடனே நடுக்கம் ஆரம்பித்து விட்டது..

நான் "டேய் என்ன டா சொல்ற..?? ஏன் டா இந்த முடிவு.. அவன் அப்பன் போலீஸ்காரன் டா.. அடிச்சு நம்ம  ரெண்டு பேரையும் உள்ள வச்சிடுவான் டா" என்று எச்சரிக்கை மணி அடித்தேன்..!!!

அவனோ அவன் முடிவில் உறுதி ஆக இருந்தான்..!!! அந்த பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்ப்பதால் இந்த முடிவுன்னு சொன்னான்..!!! அடுத்தநாள்.., கல்யாணத்திற்கும் ரெடி ஆனோம்..

ஆனால்.., அவனது இந்த முடிவு.., அவனுக்கே முடிவாய் அமையும் என்று ஒருபோதும் நான் நினைக்கவில்லை..!!!
நானும் என் நண்பர்கள் 7 பேரும்., அவர்களுடன் 5 பைக்கில் கோவிலுக்கு சென்றோம்..!!!

"வேகமா வாங்க டா  வேகமா" என்று சொல்லியவன் எதிரே வந்த பேருந்தை கவனிக்க தவறிட்டான்..!!!
"டேய், டேய்.., பஸ் டா பஸ் டா" என்று நாங்க சொல்லும் முன்னரே அந்த பேருந்துடன் மோதிய வேகத்தில் அவனும்.., அவளும் சம்பவ இடத்திலே எங்கள் கண்முன்னே இறந்தனர்..!!
நான் பிறந்த போது கதறி அழுததாக என் அம்மா சொன்னார்.. அதன் பிறகு சுமார் 22 வருடங்கள் கழித்து நடுரோட்டில் கதறி அழுதேன்.. ஒரு அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்தது.. அவன் திருமணத்திற்கு வாங்கிய மாலை.., அவன் முடிவுக்காக சாத்தப்பட்டது...!!! 

சிரித்து கொண்டே இருப்பான்.., எங்களையும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பான்.. இன்று எங்களை அழவும் வைத்து விட்டான்.. உலகே வெறுமையான ஒரு உணர்வு..!! இந்த இழப்பிலிருந்து மீளவே எனக்கு மாதம் பல பிடித்தது..!!

"கிருஷ்ணகிரி.., கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி யாராவது இறங்குறீங்களா..??" என்ற கண்டக்டரின் குரல் என்னை நினைவுக்குக் கொண்டு வந்தது..!! ஆமாம்.. இன்றோடு அவன் இறந்து வருடம்., 3 மாதம் ஆகிறது.. அவனை இழந்தபின் இந்த உலகம் என்னை பலவாறாக மாற்றி இருந்தது..!! 

ஒரு உயிரின் இழப்பை அனுபவித்த நான்.., என்னை போல் யாரும் அவர்களது நண்பனை இழந்துவிட கூடாதென்று.., சாலையில் விவேகமான பயணம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நான் ஒரு பயனாக இருக்கிறேன்..

இன்று கூட பெங்களூர்க்கு அதற்க்கு தான் போய்கொண்டு இருக்கிறேன்.. நானும் என்னுடன் வேலைபார்க்கும் என் நண்பர்களும் சேர்ந்து எடுத்த சாலைப்பயணம் தொடர்பான   "அதிவேகம்" என்ற குறும்படம்.., பெங்களூரில் நடைபெறும் தென்னிந்தியா திரைப்பட நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது..!!!


ஆமாம்.. நீங்கள் நினைப்பது சரியே.. கதை என் நண்பனின் கதை தான்... ஆனால் இம்முறை என் நண்பனாக நானும்.., ரூபாவாக என் வைஷ்ணவியும் பயணம் செய்துள்ளோம்...!!!

விவேகமான பயணம் உங்கள் உயிரை மட்டுமல்லாது.., உங்களையே நம்பி இருக்கும் பலரது உணர்வுகளுக்கும் உயிர் தரும்..!!!

-பிரபுவின் நிழல்-