கடைசி புத்தகம் தீக்குச்சி பற்ற வைத்த நெருப்பு கொஞ்சம் தான் அணைந்திருந்தது. சரி, அதே தீக்குச்சி நெருப்பின் வெப்பத்தில், இன்னொரு புத்தகம் படித்து விடலாம் ன்னு எண்ணி தேடி கொண்டு இருந்தபோது புத்தக கண்காட்சியில் வாங்கிய பதவிக்காக புத்தகம் கண்ணில் பட்டது. படிச்சிருவோம் ன்னு எடுத்து படித்தும் முடித்து விட்டேன். வாங்க, நேராக புத்தக விமர்சனத்திற்கு போய்விடலாம்.
பதவிக்காக
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்
விலை: 300 ரூபாய்
பக்கங்கள்: 382
புத்தகம் அறிமுகமானது எப்படி:
தமிழ் நாவல் படிக்கும் எவருக்கும் தெரிந்த ஒருவர், இயக்குனர் சங்கரின் ஆஸ்தான திரைக்கதை ஆசிரியர், சுஜாதா தான் இந்த நாவலின் ஆசிரியரும் கூட. புத்தக கண்காட்சியில் நான் வாங்கும் புத்தகங்களுள், கண்டிப்பாக ஒரு சுஜாதாவின் ஒரு நாவலும் இருக்கும். சுஜாதாவும் பல துப்பறியும் நாவல்களை எழுதி உள்ளார். மறுபடியும் துப்பறியும் நாவலா? யார் டா இவன், சரியான பைத்தியக்காரனா இருப்பான் போலயே நீங்கள் நினைப்பது இங்க வரைக்கும் கேக்குது. பதறாதீங்க. பதவிக்காக நாவல் சுஜாதாவின் அரசியலை ஒட்டி எழுதப்பட்ட நல்ல நாவலுள் ஒன்று என்ற சமூக ஊடகம் வாயிலாக அறிந்த நான், இந்த புத்தகத்தை இந்த புத்தக கண்காட்சியில் வாங்கி விட்டேன். என் உறவினரும் இதை தான் வாங்க நினைத்து இருந்ததாய் சொன்னது, அப்பாடா ஒரு நல்ல நாவலை தான் வாங்கி இருக்கோம் என்ற மனதிருப்தியை தந்தது.
விமர்சனம்:
எப்படி ராஜேஸ்குமார்க்கு ஒரு விவேக், விஷ்ணு முக்கியமான கதை மாந்தர்களோ, சுஜாதாவிற்கு கணேஷ், வசந்த். சுஜாதாவின் துப்பறியும் நாவலுக்கு கணேஷ், வசந்தை விட்டால் வேற யாரும் அவ்வளவு செட் ஆக மாட்டார்கள். முன்னரே சொன்னது மாதிரி, இது துப்பறியும் நாவல் இல்லை. அதனால இங்க கணேஷும், வசந்தும் இல்லை. பரவால்ல போகட்டும். சரி சரி மோரை ஊத்து, அதுல பூனை கிடக்குதான்னு பாப்போம் ன்னு நினைச்சிகிட்டயே பக்கங்களை திருப்பினேன்.
சுஜாதாவின் பலமே, நாவல் ஆரம்பித்த ஒரு சில பக்கங்களுள், படிக்கிற நம்மளையும் உள்ளே கொண்டு போயிடுவார். பின்ன சங்கரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது என்றால், இப்படி லாவகமாக கதை சொல்லும் ஒருவர் இருந்தாலொழிய சாத்தியமாகாது. அதற்கு சான்று சுஜாதா இல்லாமால் சங்கர், ஆசான்( சிறிது சிரித்து கொள்ளுங்கள்) ஜெயமோகனுடன் பணியாற்றிய கடைசி சில இரண்டு படங்களில்( ஐ, எந்திரன் II ) சங்கர் சற்றே சறுக்கி இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். சுஜாதாவின் சாப்ட் சங்கி தனங்களை விட்டு பார்த்தால், சுஜாதாவை போல் சுவாரசியமாக நாவல் எழுதும் ஒருவர் இந்த உலகில் இல்லை என்பேன் நான்.
இந்த பதவிக்காக நாவல் எழுதி 32 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது படிக்கும் போதும், அவர் எழுதிய எழுத்துக்களை நிகழ்கால அரசியல் நிகழ்வுகளோடு பொருந்தி பார்க்க இயலுகிறது.
கதை ராமராஜபுரம் தொகுதியில் ஆரம்பிக்கிறது. அப்படி ஒரு தொகுதி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்றால் இல்லை. ராமராஜபுரம் ன்னு ஒரு கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம் தொகுதியில் வருகிறது. இந்த ஆராய்ச்சிலாம் விட்டுவிட்டு கதைக்குள் போகலாம்.
ராமராஜபுரம் தொகுதி இரவு பன்னிரண்டு மணிக்கும் பரப்பாக அனலை கக்கிக்கொண்டு இருந்தது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை. இப்போ இருக்குற மாதிரி சுலபமாக ஏமாத்திட கூடிய மின்னணு இயந்திரங்கள் அப்போது இல்லை. வாக்கு சீட்டு மட்டும் தான். அடுத்த அடுத்த சுற்றுகளில், சோழர் பரம்பரையிலிருந்து ஒரு MLA ன்னு சொல்ற மாதிரி சுயேச்சை வேட்பாளர் தன்ராஜ் முன்னணியில் இருக்கிறார். கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகி விட்டது. இந்த வெற்றி தான் கதையின் கரு. இந்த வெற்றி எப்படி தன்ராஜை ஆளும் அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்கிறது, அதன் பின்னால் வரும் வலிகள், வேதனைகள், தமிழ்நாடு சந்திக்க போகும் அரசியில் இருண்ட காலத்திற்கு எப்படி அடிகோலுகிறது என்பதே மீதி கதை.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவ்வளவு சுலபமாக யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். அம்மையார். ஜெயலலிதா இறந்த பிறகு, முதல்வர் இருக்கைக்கு ஆசைப்பட்டு, சபதம் போட்டு(மூணு முறை), தியானம் பண்ணி, கால்ல குப்பறக்கடியாய் விழுந்து, கூவத்தூர் உல்லாச விடுதிகளில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுக்கொரு கோஷ்டியாய் அடித்து கொண்டு இருந்தார்கள். யார் டா தமிழ் நாட்டின் முதல்வர் என்ற பள்ளி வினாக்களுக்கு கூட, "வீ ஆர் வைட்டிங்" ன்னு பதில் சொல்ல வெச்ச மாதமது.
இப்படி பட்ட நிகழ்வுகளை மீண்டும் ஓட்டி பார்த்தால் எப்படி இருக்கும், அதுவே பதவிக்காக. சுயேச்சை வாக தேர்ந்து எடுக்கப்பட்ட தன்ராஜ், ஆளும் அரசிடம் இருந்து வந்த அழைப்புகளை மறுத்து, வெளியில் இருந்து ஆதரவு தெரிவிச்சாலும், அரசியில் என்ற பலமுனை காந்தம் எப்படி தன்ராஜை ஆளும் அரசியலில் விழ வைத்து, ஆளும் கட்சியின் ஒரு கோஷ்டியை கவிழ்த்து, இன்னொரு கோஷ்டியை ஆட்சியில் அமர வைத்தது, மீண்டும் அந்த கோஷ்டியை மறுபடியம் ஆட்சியை இழந்தது என்ற வளைய நிகழ்வுகளுக்கு எப்படி தன்ராஜ் காரணமாக இருந்தான் என்பதையும் பல துணை கதைகளுடன் வேகமா விரட்டுகிறார் சுஜாதா.
தன்ராஜ் சந்திக்கும் பழைய காதலியின் உறவும், முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஒருவர் பண்ணிய சல்லாபமும், எப்படி பின்னாடி அவர்களை தொரத்தியது, எப்படி அதுவே அவர்களை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றியது ன்னு கதை நகர்கிறது.
முன்னரே சொன்ன மாதிரி, கதைக்குள் நம்மை சீக்கிரம் விழ வைத்து, பின்னர் ஆர்வத்தை தூண்டுகிறார். கதை நிகழ்வுகள், நிகழ் காலத்தை ஒத்தே இருப்பதால், நாமளும் சுலபமாக கதையை பொருத்தி பார்க்க முடிகிறது.
தம்பி, போதும் டா. புல்லா நல்லதா சொல்லிட்டு இருக்க. அவ்வளவு நல்லாவா இருக்கு ன்னு கேட்டா, ஆம், அரசியல் வேடிக்கை விளையாட்டுகளை ரசிப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல தீனி. என்ன, கடைசி முடிவு தான் எனக்கு சரியாய் படல. ஹீரோ வந்து சுபம் ன்னு போட்டு முடிச்சாதானே கதை நல்லா இருக்கும். ஹீரோ பாட்டுக்கு, போங்கய்யா யோவ், உங்க புளியோதரையும் வேண்டாம் உங்க பொங்கச்சோறும் வேண்டாம் ன்னு கதையை விட்டு திடீர்னு விலகிட்டாப்ல.
இன்றைய அரசியல் நிலவரத்தையும், கதையும் வைத்து சிலப்பதிகார வரியை நான் மேற்கோள் காட்டுவது அவசியம்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
பொருள்: ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்.
சங்க கால பொருள்: கர்மா இஸ் பூமராங் டா வெண்ண மவனே
அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.
தெளிவுடன் தேர்வு செய்யுங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினரை!
அன்புடன்
-பிரபு கந்தசாமி