Saturday, August 20, 2022

ஆந்திர/தெலுங்கானா பயணக்கதைகள் - நாள் 1

ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டு இருந்த ஒரு பயணம். சென்னையை தாண்டிய ஆந்திராவின் பயணம், பெங்களூரை தாண்டிய ஆந்திராவின் பயணம் என்பது ரொம்ப நாள் யோசனை. தென்னிந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை ஓரளவு சுற்றி முடித்த எங்களுக்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானா எப்போதும் திட்டமிட்டு தள்ளிப்போகிற ஒன்றாககவே இருந்தது. அதனால் இந்த முறை ஆந்திர-தெலுங்கானா மண்ணை தொட்டுபார்த்திடுவோம் என்ற ஒரு நம்பிக்கையோடு கிளம்பினோம். சுதந்திர தின விடுமுறையோடு கூடுதலாக ஒரு நாள் விடுமுறையை வெள்ளிக்கிழமை எடுத்துக்கொண்டு பயணிப்போம் என்ற முடிவுக்கு வந்தோம். 

எங்களின் பயணத்திட்டம் ரொம்ப எளிது. எது பார்ப்பது, எங்கே தங்குவது என்ற எந்தவொரு திட்டமே இல்லாமல் பயணிப்பதுதான் எங்களின் திட்டம். நான், அருண் மற்றும் சங்கர்கணேஷ் மூவரும் தான் பயணிக்க போகிறோம். 

நான், அருண் கடலூரிலிருந்து கிளம்பி, சென்னை சென்ட்ரலில் பொள்ளாச்சியில் இருந்து வரும் சங்கர்கணேஷை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு மேலே செல்வது தான் ஆரம்ப திட்டம். பயணம் மேற்கொள்ளும் நாட்களோடு, எங்கிருந்து தொடங்குவது என்பது மட்டுமே நாங்கள் போட்ட சில திட்டங்கள்.

கடலூரில் இருந்து சென்னை செல்லும் போது, தனியாக செல்லாமல் BlaBla(Car Pooling App) மூலமாக யாரையாச்சும் ஏற்றி சென்று சென்னையில் விட்டால் பாதிக்கு பாதி டீசல் செலவு கைக்கு வந்து விடும் என்று முந்தின நாள் மாலையில் சென்னை செல்ல பதிவு போட்டு, ஒரு பெண் தான் குடும்பத்தாருடன் சென்னை போக வரேன்னு சொல்லி, கடைசி நிமிடத்தில் வராமல் போக, நானும் அருணும் மட்டும் சென்னைக்கு அன்று காலை 4 மணிக்கு கடலூரிலிருந்து கிளம்பினோம். 

எங்களுக்கு முன்பாகவே 6:30 மணிக்கு சங்கர்கணேஷ் சென்னை சென்ட்ரல் வந்துவிட, நாங்கள் 7:30 மணியளவில் அவரை சென்ட்ரலிலிருந்து ஏற்றிக்கொண்டு பயணித்தோம். 

சென்னை சென்ட்ரலை விட்டு வெளியேறிய சிறிது தூரத்தில், ஆசிய மற்றும் இந்தியாவின் ஒரு முக்கிய நெடுஞ்சாலையான NH-16(AH-45) நெடுஞ்சாலையை அடைந்தோம். இந்த நெடுஞ்சாலை முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் என துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு முழுவதுமாக பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நெடுஞ்சாலை நான்கு முக்கியப் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கிறது. நாங்கள் சென்று கொண்டு இருந்தது, சென்னை - கொல்கத்தாவை இணைக்கும் தங்க நாற்கர சாலையில். 

காலை உணவு:

இந்த நெடுஞ்சாலையில் சென்னைக்கு வெளியே ஆந்திராவிற்கு முன்பாக நெறைய உணவகங்கள் இருந்தாலும், இரண்டு முக்கிய உணவகங்கள் A2B  மற்றும் சாய் சரவணா. A2B  உணவகம் சோழவரத்தில் உள்ளது. A2B  போவதற்கான வளைவை மறந்ததால், அடுத்த உணவகத்தை தேடி சென்று, பெரவள்ளூர் சாய் சரவணாவில் நிறுத்தினோம். காலை உணவு நன்றாகவே இருந்தது. 

A2B Restaurant Location : https://goo.gl/maps/KGG21cpYAeKPKgZw9

Saai Saravana Restaurant Location : https://goo.gl/maps/4beukaML7aCymbPn9

சாய் சரவணாவில் சாப்பிடும் போது, பக்கத்தில் பார்ப்பதற்கு என்னவெல்லாம் இருக்கிறது என்று பழைய Blog, youtube பதிவுகளில் தேடும் போது தான், கைலாச கோனா நீர்வீழ்ச்சி நாங்க சாப்பிடும் சாய் சரவணாவில் இருந்து 67km தூரத்தில் இருந்து தெரிய வந்தது. 

சரி, நீர்வீழ்ச்சியில் ஒரு குளியலை போட்டுவிட்டு பயணத்தை சிறப்பாக ஆரம்பிப்போம் என்று கைலாச கோனாவிற்கு கிளம்பினோம். கைலாச கோனாவிற்காக, தங்க நாற்கர சாலையை விட்டுவிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் வழிய சித்தூர் செல்லும் மற்றோரு தேசிய நெடுஞ்சாலையான 716A அடைந்தோம். இந்த 716A தேசிய நெடுஞ்சாலை தமிழ்நாடு எல்லைக்கோடு மாவட்டமான திருவள்ளூரில் ஆரம்பித்து ஆந்திரா மாநிலம், புத்தூர் வரைக்கும் செல்கிறது.

பெரியபாளையம்:

சாய் சரவணாவில் இருந்து பெரியபாளையம் 15km தொலைவு மட்டுமே. பெரியபாளையம் என்றதும், அருண் சிறுவயதில் பார்த்த பெரியபாளையத்து அம்மன் படங்களை நினைவு படுத்தினார். வேப்பிலையை ஆடையாக அணிந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் பழக்கம் இங்கு உள்ளது. அந்த படத்திலும் இந்த வேப்பிலை ஆடை நேர்த்திக்கடனை நாம் பார்த்திருப்போம். வழிநெடுகிலும் அம்மனின் பக்தகோடிகள் மஞ்சள் சேலையில் நடந்து செல்வதை காண முடிந்தது. பெரியபாளையத்து பவானி அம்மன் கோவில் பெரியபாளையம் - சித்தூர் முக்கிய சாலையிலே இருந்தது. ஆடி மாசத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. பக்தர்கள் கூட்டம் வேற அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதனால் பெரியபாளையத்து அம்மனை பிறகு சந்திப்பதாக முடிவெடுத்தோம். 

Periyapalayam Bhavani Amman Temple Location : https://goo.gl/maps/eYyBPbcJ3VB8PigU8

இந்த பெரியபாளையம்-சித்தூர் சாலையின் வழியாகவே திருப்பதிக்கும் போகலாம். சிறிது நேரத்திற்கெல்லாம் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைக்கோடு வந்தது. ஆந்திராவின் வளமையெல்லாம் பார்த்துக்கொண்டு பயணம் தொடர்ந்தது. இரண்டு மாநிலங்களை இணைக்கும் தேசிய சாலை என்பதாலும், திருப்பதி போவதற்கு இதுவும் ஒரு வழி என்பதாலும், இந்த தேசிய சாலை நன்றாக இருந்தது, ஆனால் வேகத்தடைகளும் அதிகம். ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு, கைலாச கோனா நீர்விழிச்சி செல்லும் வளைவை அடைந்தோம். 

கைலாச கோனா நீர்வீழ்ச்சி:

கைலாச கோனா நீர்வீழ்ச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3km தொலைவு செல்ல வேண்டும். நீர்விழிச்சி க்கு முன்பாக பல சாலை அடையாள பலகைகள் பாத்தாலும், அதன் வளைவு வரும் போது அடையாள பலகை இருக்காது. கூகுளை நம்புவதே நன்று. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு வளைந்ததும், ஆந்திரா காவல்துறை சோதனை சாவடி நம்மை வரவேற்றது. வண்டியில் சரக்கு இருக்கிறதா என்ற சில சோதனைகளுக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டோம். நீர்விழிச்சி வண்டி நிறுத்துமிடத்தில் பெரிய கூட்டம் இல்லை. ஆள் ஒன்றுக்கு 30 ரூபாய் நுழைவு சீட்டும், கார் நிறுத்துவதற்கு 50 ரூபாயும் செலுத்தி உள்ளே சென்றோம். 

கைலாச கோனா நீர்வீழ்ச்சி எல்லா பருவநிலைகளிலும் நீர் கொட்டும் ஓர் நீர்வீழ்ச்சி. பெரிய அளவில் சடசட என்று நீர் கொட்டாவிட்டாலும், ஒரே சமயத்தில் 4-5 பேர் வரை நின்று குளிக்கும் அளவிற்கு நீர் 40 அடி உயரத்தில் இருந்து கொட்டிக்கொன்டே இருந்தது.  நாங்கள் சென்ற போது பெரிய அளவில் கூட்டம் இல்லாததால் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் நீர்வீழ்ச்சியில் குளித்தோம். நீர்வீழ்ச்சியில் அருகிலேயே சிவன்-பார்வதி கோவிலும், பெண்கள் உடைமாற்றும் அறை ஒன்றும் உள்ளது. 















நீர்வீழ்ச்சியில் குளித்த புத்துணர்வோடு, அடுத்த இடம் தேடியதில், திருப்பதிக்கு அருகே குடிமல்லம் என்ற ஊரில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் பாதுகாக்கப்படும் ஒரு கோவிலை பற்றிய தகவலை அறிந்து அதற்கு பயணத்தை தொடர்ந்தோம். 

கோனா நீர்வீழ்ச்சியிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் 12 கிமீ தொலைவில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை அடைந்தோம். அதே நெடுஞ்சாலையில் 16 கிமீ தொலைவு சென்று, குடிமல்லம் செல்லும் குறுகிய கிராமங்கள் வாயிலாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தோம்.

குடிமல்லம் சிவன் கோவில்:

திருப்பதிக்கு அருகில் இருக்கும் கோவில் இது. மாநில நெடுஞ்சாலைகள் வழியே வளைந்து வளைந்து 6 கிமீகள் சென்றால் வரும் இந்த கோவில் சித்தூர் மாவட்டத்தில் எர்பேடு மண்டலத்தில் உள்ளது. இந்த கோவிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட கிராமங்களுக்கிடையே கூகுள் மேப் உதவியுடன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். கார் நிறுத்துவதற்க்கு 50 ரூபாய் வசூலிக்கின்றனர். 

இந்த கோவிலின் சிறப்பம்சே சிவலிங்கம் ஆணுறுப்பு வடிவில் இருப்பதே. அருணுக்கு ஏற்கனவே இந்த கோவிலைப் பற்றிய தகவல்கள் தெரிந்து இருந்ததால், இலவச வழிகாட்டியாக வந்தார். 

வாசலில் நுழைந்ததுமே, அம்மன், கால பைரவர், முருகர் சிலைகளின் சிறுசிறு மண்டபங்கள் வரவேற்றன. இந்த கோவில் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வெகு சில சிவன் கோவிலில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்களுக்கெல்லாம் முன்னோடி ன்னு கூடச் சொல்லலாம். அதற்கு ஏற்ற மாதிரியே கோவிலின் கோபுரத்தில் விமானம் போன்ற அமைப்பு லாம் இங்கு இல்லை. மேலும், கோவிலின் மூல சன்னதி, மற்ற கோவில்கள் போல் இல்லாமல், நின்று வணங்கும் மட்டத்தில் இருந்து 5 அடிக்கு மேல் கீழே இருந்தது. முன்னதே சொன்ன மாதிரி, சிவலிங்கம் ஆணுறுப்பு வடிவில் இருந்தது. நாங்கள் சென்றது ஆடி மாதம் கடைசி வெள்ளி என்பதால், சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவலிங்கத்தை போட்டோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும், குடிமல்லம் சிவலிங்கம் தொடர்பான பல போட்டோக்கள், விவரங்கள் இணையத்தில் உள்ளன.

கருவறையின் வடிவமும், மற்ற கோவில்களில் உள்ளது போல் சதுர/செவ்வக வடிவில் இல்லாமல், வட்ட வடிவில் இருந்தது. கோபுரங்களில் வரிசைகளில் செதுக்கப்படும் சிற்பங்களும், மற்ற கோவில்களை காட்டிலும் வித்தியாசமாக இருப்பதாக அருண் சொல்லிக்கொண்டு வந்தார். இந்த கோவிலில் இருந்து சிறு தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுவதாகவும், அதன் பொருட்டு பல கிளைக்கதைகளும் இந்த கோவிலைப்பற்றி சொல்லப்படுகின்றன. 




















இந்தியாவில் அகழ்வாய்வு துறையினரால் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான, வித்தியாசமான ஒரு சிவன் கோவிலை பாரத்த அனுபவத்தோடு, அடுத்த பக்கத்தில் இருக்கும் இடங்களை தேடும் போது காலஸஸ்தி 46 கிமீ என்று காட்டவே, காலஸ்ஸ்தியை நோக்கி பயணமானோம். 

சுவர்ணமுகி ஆறு வறண்டு இருந்தாலும், நாங்கள் காலஸ்ஸ்தியை நோக்கி சென்ற மாநில நெடுஞ்சாலைகள் இருபுறமும் இருந்த வயல்வெளிகள் பச்சை பசேலென்று இருந்தன. 300 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைப்பதாகவும், முக்கால்வாசி நிலங்கள் போர் தண்ணீரால் விளைந்து கொண்டு இருக்கின்றன என்று அறிந்து கொண்டோம்.






 




















காலஸஸ்தி:

காலஸஸ்தியை அடைந்த போது, மணி ஒன்றை காட்டியது. காலஸஸ்தியில் பார்ப்பதற்க்கு பெரிய சிவன் கோவில் மட்டுமே இருக்கிறது. சரி, கோவிலை பார்த்துவிட்டு சாப்பிடலாம் என்று கோவிலுக்கு சென்றோம். செல்போன்கள் கோவிலுக்கு தடைச்செய்யப்ட்டு உள்ளதால், வெளியவே அதற்கான பாதுகாப்பு அறையில் பணம் செலுத்திவிட்டு செல்போன்களை கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினாலோ என்னவோ, பெரியதாக சோதனையும் இல்லை. பெரும்பாலானோர் தங்கள் மொபைல்களை கோவில் உள்ளேயும் வைத்து இருந்தனர். 













முன்னரே சொன்னது போல், கோவிலில் கூட்டம் இல்லை. இலவச தரிசனத்தில் சென்றோம். தமிழ்நாடு எல்லை மாவட்டம் என்பதால், இந்த கோவிலிலும் அறிவிப்புகள் தெலுங்கிலும் சேர்த்து தமிழிலும் இருந்தன. வெள்ளிக்கிழமை என்பதால் எல்லா உப தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பாதள கணபதி, சிவன், பார்வதி, உப தெய்வங்கள் என்று பார்த்திவிட்டு அன்னதானத்திற்க்கு சென்றால் பெரிய காத்திருப்பு வரிசை. சரி, வெளியே சாப்பிடுவோம் என்று கோவிலை விட்டு வெளியே வந்து காரில் நெல்லூரை நோக்கி கிளம்பினோம்.

காலஸஸ்திலிருந்து சென்னை-கொல்கத்தா தங்க நாற்கர சாலையை அடையும் மாநில நெடுஞ்சாலை கொஞ்சம் மோசமானதாகவே இருந்தது. சாப்பிடும் நேரம் தாண்டியதால், அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்தது. இந்த 4 நாட்கள் பயணத்தில், மதிய நேரத்தில் ஒரு சாப்பாடு சாப்பிடுவதற்கு ஆந்திரா/தெலங்கானா நெடுஞ்சாலையில் ஒரு சரியான உணவகத்தை மட்டும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் பெரும்பாலும் தாபா ஸ்டைல் உணவகமாகவே இருந்தது. நான், ரொட்டி, நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் போன்ற உணவுகளே தாபாவில் கிடைத்தது. 

நங்கள் சாப்பிட்ட க்ரீன் சில்லீஸ் தாபாவும் நன்றாகவே இருந்தது. தாபாவிலிருந்து சிறிது தூரத்திலேயே தங்க நாற்கர சாலை தென்பட்டது. குண்டூர் போகலாமா, இல்லை நல்லமலா காடுகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று தங்கலாமா என்று யோசித்து கொன்டே இருக்கும்போது, பழைய அலுவலக நண்பன் நரேஷ் நியாபகத்துக்கு வந்தான். குண்டூரை பிறப்பிடமாக கொண்ட அவன், நல்லமலா காடுகள், ஸ்ரீசைலம் போக, குண்டூர் வராமல், நேராக மார்க்கப்பூர் என்ற பகுதியில் சென்று தங்குமாறும், அதுவே ஸ்ரீசைலம் போக நெருங்கிய பகுதி என்றும் சொல்ல, மார்க்கப்பூர் நோக்கி பயணித்தோம். 

Green Chillies Restaurant Location :  https://g.page/green-chillies-family-restaurant?share

ஸ்ரீசைலம் நல்லமலா காடுகள் பகுதியில் இருந்தது. நல்லமலா காடுகள் சாலையில் செல்ல காலை 4 மணி முதல், மாலை 6 மணி வரையே அனுமதி வழங்கப்படும். மணி இரவு 7 தாண்டி சென்று கொண்டு இருந்ததால், நரேஷ் சொன்னபடியே, மார்க்கபூரில் தங்கி, அடுத்த நாள் காலை ஸ்ரீசைலமுக்கு கிளம்புவதாக முடிவு. 

மார்க்கபூரை அடைந்த போது, மணி இரவு 8:30 ஐ காட்டியது. நரேஷ் மார்க்கபூரில் தங்குவதற்கு நல்ல தங்குமிடம், உணவகம் என அனைத்தையும் முன்னரே கூறி இருந்தான். அவன் சொன்னபடியே மார்க்கபூரில் செவன் ஹில்ஸ் தங்குமிடத்தில் காலியாக இருந்த ஒரே ஒரு ரூமை எங்களுக்காக பதிவு பண்ணி, அன்றைய நாளின் பயணத்தை முடித்தோம். 

முதல் நாளின் பயணத்தொலைவு : 660km

முதல் நாளில் நாங்க பயணம் செய்த வழியின் கூகிள் map: 

5 comments: