Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Saturday, March 20, 2021

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - புத்தக விமர்சனம்

 என்னடா இவன், வாரம் ஒரு புத்தக விமர்சனம் போடுறானே, இவ்வளவு வெட்டியா இருக்கானா, வேலைக்கு ஏதாச்சும் போறான்னா? புத்தகம் படிச்சிட்டு தானே போடுறான் இல்ல சும்மா மேலோட்டமா படிச்சிட்டு போடுறானா ன்னு கேள்வி கணைகள் நாலா பக்கமும் இருந்து வருகிறதை எனக்கும் தெரிகிறது. 2021 வருடத்தில் ஒரு மாதத்திற்கு 3 புத்தங்கங்கள் கண்டிப்பாக படிச்சியாக வேண்டும் என்ற குறிக்கோள் வைத்து இருந்தேன்(ஒண்ணுமில்ல, போன சில வருடங்களில் வாங்கி படிக்காம வைத்து இருக்கிறதே 30 புத்தகங்களை தாண்டுகிறது, அதான்). இந்த மாதம் கொஞ்சம் அதிகமாகிருச்சு, மன்னிச்சு. வாங்க விமர்சனத்திற்கு போகலாம்.

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை





















ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம்
விலை: 200 ரூபாய்
பக்கங்கள்: 221


புத்தகம் அறிமுகமானது எப்படி: 

எஸ்.ராவின் எழுத்துக்களுக்கு நான் ஒரு மிகப்பெரிய விசிறி. எந்தவொரு பயண திட்டங்களும் இல்லாமல், எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல், வழியில் சந்திக்கும் மனிதர்களின் கூடவே பயணித்து, அவர்களுடன் தங்கி, அவர்தம் வாழ்க்கை சூழ்நிலையை பதிவு செய்யும் அவரின் பயணக்குறிப்புகள் படிக்கவும் சரி, அனுபவிக்கவும் சரி அவ்வளவு அற்புதமாக இருக்கும். பயண கதைகளை அவர் பதிவு செய்யும் போது, உங்களையும் கூடவே அவருடன் கூப்பிட்டு செல்வார். நானும் ஒவ்வொரு முறை பயணம் திட்டமிடும் போது, எஸ்.ராவை போலவே திட்டமில்லாத பயணங்கள் செய்ய வேண்டும், புது அனுபவங்கள் பெற வேண்டும் என்று நினைப்பேன். நம்முடைய அவசர வாழ்க்கையில், அவரை போல் நிதானமாக பயணித்து பதிவு செய்யும் பயணங்கள் எப்போதும் ஒரு கனவே. அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர் ஒரு காதல் கதை எழுதியுள்ளார் என தெரிந்ததுமே, அந்த புத்தகத்தை எடுத்து விட்டேன். காதல் ன்னா, விண்ணை மட்டுமென்ன, இந்த பால்வழி மண்டலத்தையே தாண்டி வரலாம். 

விமர்சனம்:

இந்த காதல் கதையும் ஒரு பயணத்தில் ஆரம்பிக்கிறது. கதையின் நாயகன் குளிரான பனிக்காலத்தில், கர்நாடக மாநிலம் சித்தாபுரா என்ற ஒரு ஊருக்கு பேருந்தில் செல்வதாக ஆரம்பிக்கிறது. கதைக்களமானது சித்தாபுராவிற்கும், கோவில்பட்டி கரிசல் காட்டிற்கும் மாறி மாறி பயணிக்கிறது. சுப்ரமணியன், இல்லை இல்லை, சுப்பி, அப்படி தான் நாயகி சில்வியா கூப்பிடுவாள். 

கோடைவிடுமுறை நியாபகம் இருக்கிறதா, அந்த கோடைவிடுமுறையில் போகும் விடுமுறை பயணங்கள் நியாபகம் இருக்கிறதா. அப்படியான ஒரு கோடைவிடுமுறையில், கிராமத்து ஆண்-பெண் இருபாலர் அரசு பள்ளியில் படித்து இருந்தாலும், பெண் பிள்ளைகளிடம் பேசாத, பழகிராத சுப்பி, மறுபுறம் நகர பெண்பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் படித்த நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும், அசாத்திய குறும்புக்காரி சில்வியா. 

சுப்பி, சில்வியாவை சந்தித்தது, பழகியது, அவளால் பல இடத்தில மாட்டியது என முதல் விடுமுறையில் போதுமென்ற அளவுக்கு பழகிய அவர்கள், பின்வரும் விடுமுறையில் சந்தித்தார்களா, விடுமுறையில் வந்த பிரச்சனைகள் என்ன, இப்பொது யாரை பார்க்க சுப்பி போய் கொண்டு இருக்கிறான் என்பதே மீதி கதை. 

நண்பர்கள் காதலர்கள் ஆனால், அந்த காதலர்களுக்கு இடையில் காலத்தினால் பிரிவு ஏற்பட்டு வேறு வேறு திசையில் பயணித்தால், அவர்கள் வேறு ஒருவரை கல்யாணமும் செய்து கொண்டால், அப்படியாக கல்யாணம் செய்த பிறகு நடந்த வாழ்க்கை சுழலுக்கு அப்புறம் மீண்டும் சந்தித்தால், மறுபடியும் நண்பர்களாய் தொடர்ந்தால். அவ்ளோதாங்க கதை. இதை மாஸ்டர் எப்படி சொல்லி இருக்கார் என்பதே முக்கியம்

எஸ்.ராவை விட்டுவிட்டால் பூமி, பாறை, பாறைக்குள் இருக்கும் கல் , கல்லுக்குள் இருக்கும் மண், மண்ணுக்குள் இருக்கும் மண்புழு, மண்புழுவுக்குள் இருக்கும் உயிர், உயிருக்குள் இருக்கும் உணர்வு ன்னு வருணித்து கொன்டே இருப்பார். சில சமயம் அவருடைய வருணனைகள் அவ்வளவு அழகா இருக்கும். இந்த புத்தகத்திலேயே அவர் கரிசல் காட்டு வெயிலை அவ்வளவு அழகாக வருணித்து இருப்பார். இன்னொருபுறம் வருணித்து வருணித்து படிக்கும் நம்மளையே அயர்ச்சி அடைய செய்து இருப்பார். சினிமாவிற்கு போகும் சில சமயங்களில், நேரம் தவறி முதல் 15 நிமிடங்களை தவற விட்டு இருப்போம். ஆனால் படம் முடியும்போது தவறவிட்ட முதல் 15 நிமிடங்கள் பெரிதாய் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்காது. அதே மாதிரி தான் இந்த புத்தகமும், முதல் 25 பக்கங்களை தாண்டி நீங்கள் கதைக்குள் நுழையலாம். பெரியதாய் ஒன்றும் தவற விட்டு இருக்க மாட்டிர்கள்.

பதின்பருவ காதலில் நீங்கள் வீழ்ந்து இருந்து இருந்தால், அந்த காதலை, முதல் காதலை தவற விட்டு இருந்தால்(நெறைய "தால்" போட்டுட்டேன் போலயே, பரவால்ல), அட குறைந்தபட்சம் காதலை நேசிக்கிறவராக இருந்தால் போதும், அந்த காதல் ஏற்படுத்தும் வேதியல் மாற்றங்களுக்கும், அதன் குறும்புகளுக்கும், அதன் அழகியலுக்கும் நீங்களும் அடிமை என்றால், இந்த புத்தகம் உங்களுக்குள் பல புன்முறுவல்களை கொண்டு வரும்.  

அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.

அன்புடன்

-பிரபு கந்தசாமி

Friday, March 19, 2021

ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள் - புத்தக விமர்சனம்

 தொடர்ந்து நாவல்களா படிச்சிட்டு வர்றோமே, கொஞ்சம் மாத்தி படிப்போம் ன்னு அரசியல் சைடு போலாம் ன்னு பார்த்தால், ஏற்கனவே அரசியல் களம் தேர்தலை எதிர்கொண்டு நெருப்பா எரியுது. ஊடங்களில் வரும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் புரிஞ்சிட்டு படிச்சு பதில் சொன்னாலே போதும். இப்போதைக்கு அதை தொட வேண்டாம் ன்னு மனசு சொன்னாலும், மூளை கேக்கல. சரி மனசுக்கும், மூளைக்கும் தோதுவான ஒரு புத்தகம் ன்னு இதை எடுத்தேன். இந்த புத்தகமும் சும்மா இல்லை. 1990-களில் தமிழக அரசியலை திருப்பி போட்ட படுகொலைக்கான காரணங்களை அதே பதற்றத்தோடு விவரிக்கும் ஒரு புத்தகம். இந்த படுகொலை ஏற்படுத்திய கரும்புள்ளிகள், ஆறாத காயங்கள் இன்னும் அரசியலிலும், தமிழகத்திலும் இருக்கு என்றே சொல்லலாம். சரி வாங்க, புத்தக விமர்சனத்திற்கு போவோம். 


ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்





















ஆசிரியர்: நக்கீரன் புலனாய்வு குழு
பதிப்பகம்: நக்கீரன் பதிப்பகம்
விலை: 225 ரூபாய்
பக்கங்கள்: 192

புத்தகம் அறிமுகமானது எப்படி: 

அரசியல் பேசும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன் நான். அப்பா தீவிர திராவிட பற்றாளர். 15 வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்பொது பார்க்குற மாதிரி செய்தி சேனல்களும், இணைய வசதியும் கிடையாது. ஒரு பரபரப்பு செய்தியை, புலனாய்வு செய்தியை, திரைமறைவுக்கு பின்னால் நடக்கும் செய்திகளை தாங்கி வரும் நக்கீரன், ரிப்போர்ட்டர் புத்தகங்கள் வெகு பிரபலம். அப்பாவும் ஒவ்வொரு வாரமும் மறக்காமல் வாங்கி படிப்பார். அப்பாவினால் நானும். அப்படி ஆரம்பித்த நக்கீரனின் சகவாசம் இன்று தொடர்கிறது. திரைமறைவுக்கு பின்னால் நடக்கும் நிகழ்வுகளை நக்கீரனை போல் வெளிக்கொண்டு வந்தவர்கள் யாரும் இல்லை. ராஜிவ் படுகொலையாய் இருக்கட்டும், வீரப்பனை சந்தித்து அவன் சார்பான செய்திகளை கொண்டு வருவதாகட்டும், ஜெயலலிதா சம்மந்தமான கொடநாடு பங்களா, தருமபுரி பேருந்து எரிப்பு, சந்திரலேகா ஆசிட் வீச்சு செய்திகளாகட்டும், சமீபமாக வந்த பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு செய்திகளாகட்டும் நக்கீரனை மிஞ்ச ஆள் இல்லை இந்த தமிழ் பத்திரிகை உலகத்தில். அப்படியாகப்பட்ட ஒரு நக்கீரனிடம் இருந்து ஒரு புத்தகத்தை இந்த 2021 வருடம் புத்தக கண்காட்சியில் பார்த்தேன். அது தான் ராஜிவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள். ராஜிவ் படுகொலையின் செய்திகளை பல விடீயோக்கள், பதிவுகள், செய்திகள் வாயிலாக படித்து இருந்தாலும், நக்கீரன் வாயிலாக படிக்க ஒரு ஆர்வம். அதான் உடனே வாங்கிவிட்டேன்.

விமர்சனம்:

புத்தகம் அறிமுகத்தில் நக்கீரன் இதுவரை சிறப்பாக கையாண்ட புலனாய்வு செய்திகள் சிறு தொகுப்பாய் கொடுக்கப்பட்டு இருந்தது. அவை அத்தனையுமே தமிழகத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள், தமிழகத்தை ஆட்டி படைத்த நிகழ்வுகள். இன்று பொய்யை மட்டுமே கக்கிக்கொண்டு இருக்கும் ஊடகங்களுக்கு மத்தியில், உண்மையை வெளிக்கொண்டு வர நக்கீரன் எடுத்த முயற்சிகள் சிறப்பு. மாட்டிராத டா கைப்புள்ள ரேஞ்சுக்கு கஷ்டப்பட்டு செய்தி சேகரித்து இருப்பார்கள் போலிருக்கு. 

பக்கங்களும் மாறுகின்றன, காட்சிகளும் விரிகின்றது. 1991 ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி இரவை அப்படியே செய்திகள் வாயிலாக கண்முன்னே கொண்டு வருகின்றது நக்கீரன். ஒரு இளம் தலைவர், இப்பொது ராகுல் மாதிரியே, அப்போதைய ராஜீவ் காந்தி, துடிப்பும், ஆற்றலும் உள்ள ஒரு முன்னாள் பிரதமர். அவருடைய தமிழக வருகையில் கடைசி நிமிடங்களில் நடந்த குளறுபடிகள், அவர் இறந்த போது, தமிழக காங்கிரசு தலைவர்கள் ஒருவரும் அவர் கூட இல்லாமல் ஒருசேர தப்பித்தது, அதை ஒட்டிய கலவரங்கள், அரசியல் நிகழ்வுகள் அவர் படுகொலை வேற ஒருவரால் நடத்தப்பட்டு இருந்தாலும், அதை இயக்கியவர்கள் கூட இருந்தவர்களே என்ற பல்வேறு விதமான சந்தேகங்களை அரசியல் உலகில் கிளப்பி விட்டு இருந்தது. 

இன்றும் பொதுமக்களை நோக்கி, யாருங்கய்யா ராஜீவை கொலை செஞ்சாங்க ன்னு கேட்டால், எல்லோரும் ஒரு சேர, அதுவாங்க, அது இலங்கையில் ஒரு அமைப்பு இருந்துச்சே, தடை கூட பண்ணாங்களே தமிழ்நாட்டுல, ஆங், விடுதலை புலிகள் ன்னு தெளிவாக சொல்லுவார்கள். இது மக்களால் படிச்சு அறியப்பட்ட செய்தி அல்ல. மாறாக, படுகொலையை சார்ந்து ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தங்கள் வசதிக்கேற்றார் போல் அந்த பழியை விடுதலைப்புலிகள் மேல் போட்டுவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 

நக்கீரன் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இந்த படுகொலையை அலசி இருக்கிறார்கள். படுகொலைக்கு பிறகு நடந்த விசாரணைகள், விடுதலைப்புலிகளின் தலையமகத்திலிருந்து வந்த மறுப்பு செய்தி, மேற்கு இந்தியா என்ற அமெரிக்க வார இதழ் அலுவலகத்திற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு, படுகொலையில் இறந்தாலும் உதவிய பாபுவின் கேமரா (இதே மாதிரி தான்  கே.வி. ஆனந்த் இயக்கிய கோ படத்தில் குண்டுவெடிப்பில் கேமரா கொண்டு துப்பு துலக்கி இருப்பாங்க. நாமளும் ஒரு புலனாய்வு புலி தான்) , படுகொலை நடந்த காலத்தில் இந்தியாவில் இருந்த புலிகளின் வெடிகுண்டு நிபுணர் இளையதம்பி கிருபாளன், சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி தொடர்பு, கூட இருந்த வாழப்பாடி, ஜெயந்தி நடராஜன், மூப்பனார் போன்றோரின் தகவல்கள், இலங்கை சென்று விசாரித்தது என ஒரு பெரிய வட்டத்தையே இந்த படுகொலையின் பொருட்டு இந்திய உளவுத்துறையும், சி.பி.ஐ யம் உருவாக்கி இருந்தது. அதை அத்தனையும் நக்கீரன் சேகரித்து கொடுத்துள்ளது. 

மேலோட்டமான விசாரணையில் பார்ப்பதற்கு, விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட படுகொலை மாதிரி தெரிந்தாலும், இது சர்வதேச சதிகளோடு நடைபெற்ற ஒரு மாபெரும் தாக்குதல் என்ற கோணத்தையும் நக்கீரன் வைக்கிறது. CIA அமெரிக்காவின் முக்கிய உளவு துறை அமைப்பு, அது என்றைக்கும் இந்தியாவில் ஒரு நிலையான அரசு அமைவதை விரும்பாது, அதும் இடதுசாரி உடனான கூட்டணி ஆட்சி எனில் அதை விரும்பவே விரும்பாது(ஜோதிபாசுவும், ராஜீவும் கூட்டணி), அதுனாலயே அவர்கள் ராஜீவை கொன்று இருப்பார்கள், அதற்கு அவர்கள் விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி கொண்டார்கள் என நக்கீரன் எடுத்து வைக்கும் வாதம் முக்கியமானது. 

சி.பி.ஐ யின் பல கேள்விகளுக்கு விடைகள் தெரிவதற்கு முன்பாகவே, சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினால், ஏனோ தானோ என்று விசாரித்தது, தொடக்கம் முதல், இறுதி வரை விடுதலைப்புலிகளை தாண்டி சிந்திக்காதது, படுகொலையில் சம்மந்தப்பட்டவர்கள், விடுதலைப்புலியின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற ஒரு புள்ளியை வைத்துக்கொண்டு அதை சுற்றியே விசாரித்தது, கைது செய்தது, இதோடு தொடர்புடைய தமிழக அரசியல்வாதிகளை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வராதது எப்படி பல கேள்விகளை இந்த புத்தகம் உங்கள் கண்முன்னே வைக்கும். 

ஒருவேளை கொகுணகுண்டா துப்பாக்கி சூட்டில், சிவராசனும், சுபாவும்(முக்கிய கொலையாளிகள்/கூட்டாளிகள்) இறக்காமல் இருந்து இருந்தால், இந்நேரம் பல கேள்விகளுக்கு விடை தெரிந்து இருக்கும். பல அரசியல் சூழ்ச்சிகள் தெரிந்து இருக்கும். ஆனால் அரசியல்வாதிகள் அதை வெளிய வரவிடாமல் செய்து இருப்பார்கள் என்பது வேற விஷயம். எப்படி பேரறிவாளன், நளினி இந்த படுகொலை சார்ந்து விசாரணை வளையத்திற்குள் வந்தார்கள், எப்படி கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் நக்கீரன் விவரிக்கிறது.

நக்கீரன் கோபால் இந்த புத்தகத்தை முடிக்கும் முன் இப்படி குறிப்பிட்டு இருப்பார்,

ராஜீவ் படுகொலை... செய்தியாகவும் வரலாறாகவும் மட்டுமே அறியும் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்தது ஒரே ஒரு கோணம்தான்; ஒரு கோட்பாடுதான். அது அந்தப் படுகொலை, புலிகளால் நிகழ்த்தப்பட்டது என்ற அந்தக் கோட்பாடு. ஆனால், கூரை இல்லாத வீட்டில் வாசற்கதவை அடைந்துவிட்டேன், இனி திருடன் வரமாட்டான் என்று நம்புவதைப் போலத்தான் இந்த விசாரணையின் முடிவுகள் நம்பப்படுகின்றன. விடுதலைப்புலிகள் என்ற ஒரே கோட்டில் சென்று இலக்கை எட்டிவிட்டோம் என்று கூறிக்கொள்கிறார்கள். அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. சி.ஐ.ஏ... சந்திராசாமி... காங்கிரஸ்... அ.தி.மு.க. புள்ளிகள்... இன்னும் பல முடிச்சுகள். நக்கீரனின் இந்த விசாரணை வரலாற்றை வாசிப்பவர்களுக்கு மனதில் எழும் அத்தனைக் கேள்விகளும் இன்னும் உயிருடன் இருக்கின்றன.

இன்றும் இந்த படுகொலை பற்றி பேசும் போதுலாம் அரசியலில் ஒரு தீக்கனல் உருவாகுவதை காணலாம். இந்திய அரசியல் வரலாற்றில் நடந்த படுகொலைகளில் இது மிக முக்கியமானது. மற்ற கொலைகளில், காரணம், செய்தவர்கள் பற்றிய ஒரு மேலோட்ட தகவல்களாவது இருக்கும். ஆனால், இந்த படுகொலையில் வேண்டுமென்றே பல தகவல்கள் மறைக்கப்பட்டு, போலியாக செய்திகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கும் இந்த படுகொலை பற்றி தெரிய வேண்டுமானால், இது ஒரு முக்கியமான புத்தகம். படிக்க தவறாதீங்க. 

அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.

அன்புடன்

-பிரபு கந்தசாமி

Sunday, March 14, 2021

பதவிக்காக - புத்தக விமர்சனம்

கடைசி புத்தகம் தீக்குச்சி பற்ற வைத்த நெருப்பு கொஞ்சம் தான் அணைந்திருந்தது. சரி, அதே தீக்குச்சி நெருப்பின் வெப்பத்தில், இன்னொரு புத்தகம் படித்து விடலாம் ன்னு எண்ணி தேடி கொண்டு இருந்தபோது புத்தக கண்காட்சியில் வாங்கிய பதவிக்காக புத்தகம் கண்ணில் பட்டது. படிச்சிருவோம் ன்னு எடுத்து படித்தும் முடித்து விட்டேன். வாங்க, நேராக புத்தக விமர்சனத்திற்கு போய்விடலாம். 

பதவிக்காக
















ஆசிரியர்: சுஜாதா

பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்

விலை: 300 ரூபாய்

பக்கங்கள்: 382


புத்தகம் அறிமுகமானது எப்படி:

தமிழ் நாவல் படிக்கும் எவருக்கும் தெரிந்த ஒருவர், இயக்குனர் சங்கரின் ஆஸ்தான திரைக்கதை ஆசிரியர், சுஜாதா தான் இந்த நாவலின் ஆசிரியரும் கூட. புத்தக கண்காட்சியில் நான் வாங்கும் புத்தகங்களுள், கண்டிப்பாக ஒரு சுஜாதாவின் ஒரு நாவலும் இருக்கும். சுஜாதாவும் பல துப்பறியும் நாவல்களை எழுதி உள்ளார். மறுபடியும் துப்பறியும் நாவலா? யார் டா இவன், சரியான பைத்தியக்காரனா இருப்பான் போலயே நீங்கள் நினைப்பது இங்க வரைக்கும் கேக்குது. பதறாதீங்க. பதவிக்காக நாவல் சுஜாதாவின் அரசியலை ஒட்டி எழுதப்பட்ட நல்ல நாவலுள் ஒன்று என்ற சமூக ஊடகம் வாயிலாக அறிந்த நான், இந்த புத்தகத்தை இந்த புத்தக கண்காட்சியில் வாங்கி விட்டேன். என் உறவினரும் இதை தான் வாங்க நினைத்து இருந்ததாய் சொன்னது, அப்பாடா ஒரு நல்ல நாவலை தான் வாங்கி இருக்கோம் என்ற மனதிருப்தியை தந்தது.

விமர்சனம்:

எப்படி ராஜேஸ்குமார்க்கு ஒரு விவேக், விஷ்ணு முக்கியமான கதை மாந்தர்களோ, சுஜாதாவிற்கு கணேஷ், வசந்த். சுஜாதாவின் துப்பறியும் நாவலுக்கு கணேஷ், வசந்தை விட்டால் வேற யாரும் அவ்வளவு செட் ஆக மாட்டார்கள். முன்னரே சொன்னது மாதிரி, இது துப்பறியும் நாவல் இல்லை. அதனால இங்க கணேஷும், வசந்தும் இல்லை. பரவால்ல போகட்டும். சரி சரி மோரை ஊத்து, அதுல பூனை கிடக்குதான்னு பாப்போம் ன்னு நினைச்சிகிட்டயே பக்கங்களை திருப்பினேன். 

சுஜாதாவின் பலமே, நாவல் ஆரம்பித்த ஒரு சில பக்கங்களுள், படிக்கிற நம்மளையும் உள்ளே கொண்டு போயிடுவார். பின்ன சங்கரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது என்றால், இப்படி லாவகமாக கதை சொல்லும் ஒருவர் இருந்தாலொழிய சாத்தியமாகாது. அதற்கு சான்று சுஜாதா இல்லாமால் சங்கர், ஆசான்( சிறிது சிரித்து கொள்ளுங்கள்) ஜெயமோகனுடன் பணியாற்றிய கடைசி சில இரண்டு படங்களில்( ஐ, எந்திரன் II ) சங்கர் சற்றே சறுக்கி இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். சுஜாதாவின் சாப்ட் சங்கி தனங்களை விட்டு பார்த்தால், சுஜாதாவை போல் சுவாரசியமாக நாவல் எழுதும் ஒருவர் இந்த உலகில் இல்லை என்பேன் நான். 

இந்த பதவிக்காக நாவல் எழுதி 32 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது படிக்கும் போதும், அவர் எழுதிய எழுத்துக்களை நிகழ்கால அரசியல் நிகழ்வுகளோடு பொருந்தி பார்க்க இயலுகிறது. 

கதை ராமராஜபுரம் தொகுதியில் ஆரம்பிக்கிறது. அப்படி ஒரு தொகுதி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்றால் இல்லை. ராமராஜபுரம் ன்னு ஒரு கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம் தொகுதியில் வருகிறது. இந்த ஆராய்ச்சிலாம் விட்டுவிட்டு கதைக்குள் போகலாம். 

ராமராஜபுரம் தொகுதி இரவு பன்னிரண்டு மணிக்கும் பரப்பாக அனலை கக்கிக்கொண்டு இருந்தது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை. இப்போ இருக்குற மாதிரி சுலபமாக ஏமாத்திட கூடிய மின்னணு இயந்திரங்கள் அப்போது இல்லை. வாக்கு சீட்டு மட்டும் தான். அடுத்த அடுத்த சுற்றுகளில், சோழர் பரம்பரையிலிருந்து ஒரு MLA ன்னு சொல்ற மாதிரி சுயேச்சை வேட்பாளர் தன்ராஜ் முன்னணியில் இருக்கிறார். கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகி விட்டது. இந்த வெற்றி தான் கதையின் கரு. இந்த வெற்றி எப்படி தன்ராஜை ஆளும் அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்கிறது, அதன் பின்னால் வரும் வலிகள், வேதனைகள், தமிழ்நாடு சந்திக்க போகும் அரசியில் இருண்ட காலத்திற்கு எப்படி அடிகோலுகிறது என்பதே மீதி கதை. 

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவ்வளவு சுலபமாக யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். அம்மையார். ஜெயலலிதா இறந்த பிறகு, முதல்வர் இருக்கைக்கு  ஆசைப்பட்டு, சபதம் போட்டு(மூணு முறை), தியானம் பண்ணி, கால்ல குப்பறக்கடியாய் விழுந்து, கூவத்தூர் உல்லாச விடுதிகளில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுக்கொரு கோஷ்டியாய் அடித்து கொண்டு இருந்தார்கள். யார் டா தமிழ் நாட்டின் முதல்வர் என்ற பள்ளி வினாக்களுக்கு கூட, "வீ ஆர் வைட்டிங்" ன்னு பதில் சொல்ல வெச்ச மாதமது.  

இப்படி பட்ட நிகழ்வுகளை மீண்டும் ஓட்டி பார்த்தால் எப்படி இருக்கும், அதுவே பதவிக்காக. சுயேச்சை வாக தேர்ந்து எடுக்கப்பட்ட தன்ராஜ், ஆளும் அரசிடம் இருந்து வந்த அழைப்புகளை மறுத்து, வெளியில் இருந்து ஆதரவு தெரிவிச்சாலும், அரசியில் என்ற பலமுனை காந்தம் எப்படி தன்ராஜை ஆளும் அரசியலில் விழ வைத்து,  ஆளும் கட்சியின் ஒரு கோஷ்டியை கவிழ்த்து, இன்னொரு கோஷ்டியை ஆட்சியில் அமர வைத்தது, மீண்டும் அந்த கோஷ்டியை மறுபடியம் ஆட்சியை இழந்தது என்ற வளைய நிகழ்வுகளுக்கு எப்படி தன்ராஜ் காரணமாக இருந்தான் என்பதையும் பல துணை கதைகளுடன் வேகமா விரட்டுகிறார் சுஜாதா. 

தன்ராஜ் சந்திக்கும் பழைய காதலியின் உறவும், முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஒருவர் பண்ணிய சல்லாபமும், எப்படி பின்னாடி அவர்களை தொரத்தியது, எப்படி அதுவே அவர்களை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றியது ன்னு கதை நகர்கிறது. 

முன்னரே சொன்ன மாதிரி, கதைக்குள் நம்மை சீக்கிரம் விழ வைத்து, பின்னர் ஆர்வத்தை தூண்டுகிறார். கதை நிகழ்வுகள், நிகழ் காலத்தை ஒத்தே இருப்பதால், நாமளும் சுலபமாக கதையை பொருத்தி பார்க்க முடிகிறது. 

தம்பி, போதும் டா. புல்லா நல்லதா சொல்லிட்டு இருக்க. அவ்வளவு நல்லாவா இருக்கு ன்னு கேட்டா, ஆம், அரசியல் வேடிக்கை விளையாட்டுகளை ரசிப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல தீனி. என்ன, கடைசி முடிவு தான் எனக்கு சரியாய் படல. ஹீரோ வந்து சுபம் ன்னு போட்டு முடிச்சாதானே கதை நல்லா இருக்கும். ஹீரோ பாட்டுக்கு, போங்கய்யா யோவ், உங்க புளியோதரையும் வேண்டாம் உங்க பொங்கச்சோறும் வேண்டாம் ன்னு கதையை விட்டு திடீர்னு விலகிட்டாப்ல.

இன்றைய அரசியல் நிலவரத்தையும், கதையும் வைத்து சிலப்பதிகார வரியை நான் மேற்கோள் காட்டுவது அவசியம்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

பொருள்: ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும். 

சங்க கால பொருள்: கர்மா இஸ் பூமராங் டா வெண்ண மவனே


அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.

தெளிவுடன் தேர்வு செய்யுங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினரை!


அன்புடன்

-பிரபு கந்தசாமி

Saturday, March 13, 2021

ராஜேஷ்குமாரின் கடைசி தீக்குச்சி - புத்தக விமர்சனம்

அப்பாடா, கடைசியா மறுபடியம் எழுத ஆரம்பிச்சாச்சு. கடைசியா 2019 ஜனவரி 21 ஆம் நாள் புத்தக விமர்சனம் போட்டேன். அதுக்கு அப்புறம் நெறைய புத்தகம் படிச்சாலும், விமர்சனம் எழுத நேரம் கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கலன்னு சொல்றத விட, சோம்பேறி ஆகிட்டேன்னு தான் சொல்லணும். சோம்பறித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் மறுபடியும் விமர்சனம் செய்ய வந்து இருக்கிறேன். 

கொரோனாக்கு அப்புறம் வந்த புத்தக கண்காட்சி. ஏற்கனவே நம்ம கிட்ட படிக்க நெறைய புத்தகம் இருக்கு, ஒரு 10 புத்தகம் மட்டும் வாங்குன போதும்ன்னு போன நான், கடைசில 21 புத்தகங்களோட வந்தேன். சரி, இந்த வருடம் நெறைய படிக்கிறோம், தட்டுறோம், தூக்குறோம்  ன்னு என்ன புத்தகத்தோடு ஆரம்பிக்கலாம்ன்னு யோசிக்கும் போது தான் ராஜேஷ்குமாரின் கடைசி தீக்குச்சி சிக்கிச்சு. இப்போ நீங்களும் என்கிட்டே சிக்கி இருக்கீங்க. வாங்க விமர்சனத்துக்கு போவோம். 

கடைசி தீக்குச்சி














ஆசிரியர்: ராஜேஷ்குமார்

பதிப்பகம்: RK பப்ளிஷிங்

விலை: 280 ரூபாய்

பக்கங்கள்: 332

புத்தகம் அறிமுகமானது எப்படி:

கோவிந்தராஜனுக்கு நெறைய முன்கதைகள் உண்டு. அதை சுருங்க சொன்னாலும், 12-ஆம் நூற்றாண்டு வரையிலாவது போக வேண்டும்ன்னு தசாவதாரத்துல கமல் சொல்லுவாருல, அப்படி ஒரு முன்கதை உண்டு எனக்கும் ராஜேஷ்குமார் நாவல்களுக்கும். என் அக்காவிற்கு இந்த கிரைம் திரில்லர் நாவல் படிக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் நேரம் போகவில்லையே என்று கல்லூரி விடுமுறையில் அவங்களிடம் இருந்து வாங்கிய புத்தகம் தான் ராஜேஷ்குமார் திரில்லர் நாவல். அப்போதுலாம் வாரம் ஒருமுறை ஒரு பாக்கட் சைஸ் நாவல் வரும் 10 ரூபாய்க்கு. சில பழைய புத்தக கடைகளில் 2.50 ரூபாய்க்கு ராஜேஷ்குமாரின் பழைய நாவல்கள் விற்கும். அதை வாங்குவதும், படிப்பதும் ஒரு பெரிய பொழுதுபோக்கவே மாறியது. யாரோ யாரையோ கொலை செய்து இருப்பார்கள், அல்லது ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கும். அதை தனியார் துப்பறியும் ராஜாக்களான விவேக், விஷ்ணு கண்டுபிடிப்பார்கள். ராஜேஷ்குமார் நாவல்கள் படிக்கும் அனைவர்க்கும் இந்த விவேக், விஷ்ணு, ரூபலா கதைமாந்தர்கள் அத்துப்படி, பிடித்த கதைமாந்தர்கள் கூட. இன்றும் என்னிடத்தில் புதுசு, பழையது என 50-க்கும் மேற்பட்ட ராஜேஷ்குமாரின் பாக்கெட் சைஸ் நாவல்கள் உள்ளன. இப்போதும் வருகிறது. ஆனால் 15 ரூபாய் ஆகிவிட்டது.  இப்படி பழக்கப்பட்ட எனக்கு, இந்த புத்தக கண்காட்சியில் ஆச்சரியம். எப்போதும் 100 பக்கத்திற்கும் குறைவாய் வரும் சிறிய பாக்கெட் சைஸ் நாவலுக்கு இடையில், கொஞ்சம் பெரியதாய், 300 பக்கங்களுக்கு மிகையாமல் ஒரு நாவல் வந்தால் வாங்காமல் விட மனசு எப்படி ஒத்து வரும். அதன் வாங்கியாச்சு. இப்படி படிச்சு படிச்சு எனக்குள்ளவே ஒரு துப்பறியும் புலி தூங்கிட்டு இருக்கு. யாருக்காவது துப்பறிய வேண்டுமென்றால் என்னை கூப்படவும். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் மாதிரி இல்லாவிட்டிலும், நம்ம புரட்சி தளபதி விஷால் அளவுக்காச்சும் முயற்சி பண்ணுவேன். 

(தூரத்தில், இவனுக்கு காலையில நைட் கழட்டி வெச்ச கண்ணாடியை கண்டு புடிக்கவே நாங்க வேண்டும், இவன் போய் எதையோ கழட்ட போறானாம் என மனைவி மற்றும் அம்மாவின் கோரஸ் குரல் கேக்குறது. சோகமான இசை வாத்தியங்கள் ஒலிக்கப்படுகிறது)

விமர்சனத்திற்குள் போவோம், வாங்க!

விமர்சனம்:

பொதுவாவே ராஜேஷ்குமாரின் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதால், கதை களங்கள் கோவையை சுற்றியே அமையும். என் கல்லூரி கால வாழ்வும், நான் வாக்கப்பட்ட ஊரும் கோவை என்பதால், கதையோடு சுலபமாக ஒன்றிவிட இயலும். இந்த கதையிலும் அப்படியே. 

அத்திபாளையம் பிரிவில் கதை ஆரம்பிக்கிறது. காவல்துறை சோதனையில் ஒரு வேனில் இரண்டு குரங்குகள் இறந்த நிலையிலும், ஒரு குரங்கு மயக்கமான நிலையிலும் கிடைக்கிறது. மருத்துவ சோதனையில், ஆக்குலார் இம்பிளான்ட்(Ocular Implant) முறையில் மூன்று குரங்குகளுக்கும் செயற்கை கண் பொருத்தப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கும் நிமிடங்களில், மூன்றாவது குரங்குகிற்கும் உறுப்புகள் செயலிழந்து இறக்கும் தருவாயை அடைகிறது. இதான் கதையின் கரு. யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பதற்காகவே இந்த 332 பக்கங்களும். 

எங்கடா நம்ம கதாநாயர்கள் விவேக், விஷ்ணு தேடிட்டு போன, அவர்கள் இல்லாமல் காவல்துறையின் போக்கிலேயே கதை விரிகிறது. சரி, இந்த கதைலாச்சும், தனியார் துப்பறியும் மாந்தர்கள் இல்லாமல், காவல்துறையே கண்டுபிடிக்கட்டும் ன்னு விட்டுட்டாரு போல ராஜேஷ்குமார். விவேக், விஷ்ணுவை காவல்துறையிலாச்சும் சேர்த்து விட்டு இருக்கலாம். பச். 

இது ஒரு ஆபத்தான பரிசோதனையின் விளைவுகள் தான் என்று காவல்துறை கண்டுபிடிக்கும் போது, கதைநாயகன் சபரி என்ட்ரி. அவன் தான் இந்த பரிசோனாதையை பண்ணவனே. பேசிக்கலி, ஹீ ஹிஸ் த ஹீரோ அண்ட் ஹீ ஹிஸ் த வில்லன் டூ. கமல் பேன் போல. 

இந்த பரிசோதனை காவல்துறையிடம் இருந்து மறைக்க முயலும் வேளையில், இந்த பரிசோதனையை பண்ண சொன்னவன், அதை மேற்பார்வை செஞ்சவன் ன்னு ஒருத்தன் ஒருத்தன சாக, வீட்டுலயும் சில குழப்பங்கள் ஏற்பட, சபரிக்கு தலைவலி மேல் தலைவலி. திடீர்ன்னு அவன் வீட்டுல தூங்க வந்த அவன் மனைவியின் தோழியும் மர்கயா. தோழி ஏன் வந்தா ன்னு கேக்காதீங்க. அது வேற ஒரு தெய்வீக காதல் கதை. சப் பிளாட். யார்டா இந்த கொலைகள் பன்றானு தெரியாம, காவல்துறைக்கும் போக முடியாம, சோ, வாழ்க்கையே ஒரே சேட் ன்னு பொலம்பிட்டே யார் டா இதுக்கு காரணம், யார் கொலைகளை செஞ்சாங்க, அதற்கான காரணங்களை யார் கண்டுபிடிச்சாங்க, காவல் துறையா, சபரியா, ஏன் இந்த பரிசோதனை பண்ணாங்க என்பதே மீதி கதை.

எப்போதும் 100 பக்கங்கள் எழுதறவர், 300 பக்கங்கள் எழுத சொல்லிட்டாங்களே ன்னு, 100 பக்கங்களுக்கு எழுதின கதையை, கதைக்குள் கதைன்னு மனைவிடோட தோழி, தோழிக்கு ஒரு காதலன், அவன் ஒரு டூமாங்கோலி ன்னு நீட்டி முழக்கிட்டார். சில லாஜிக் விதிமீறல்கள். அட யாருய்யா இப்போ லாஜிக் லாம் பாக்குறது ன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. இருந்தாலும் பரவால்ல, த்ரில்லர் விரும்பிகள் தாராளமாய் படிக்கலாம். கடைசி 75% வரை சொய் ன்னு போகும்.  சங்கர் படத்துக்கு ரவிக்குமார் திரைக்கதை எழுதுனா உங்களுக்கு பிடிக்குமா, பிடித்தால் படியுங்கள். 

இருந்தாலும் ஏன் யா விவேக், விஷ்ணுவ கழட்டி விட்டுட்ட. மறுபடியம் பச்.

சரி, 2021 வருடத்தை ஒரு புத்தகத்தோடு ஆரம்பிச்சாச்சு. வருட தொடக்கத்தில் இந்த மாதிரியான புத்தங்களையே நான் படிக்க விரும்புவேன். சீக்கிரம் படித்து முடிக்கலாம், அடுத்த புத்தகத்தை சீக்கிரம் ஆரம்பிக்கலாம் என்ற என் எண்ணம். 

இந்த வருடத்தில் உங்களால் படிக்கப்பட்ட முதல் புத்தகம் என்ன?

அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.


அன்புடன்

-பிரபு கந்தசாமி

Monday, January 21, 2019

கரன்சி காலனி - புத்தக விமர்சனம்

என்ன டா இவன், சனிக்கிழமை தான் ஒரு புத்தகம் படிச்சிட்டேன் ன்னு போட்டான். அதுக்குள்ள திங்கட்கிழமை மறுபடியும் இன்னொரு புத்தகம் படிச்சிட்டேன் ன்னு போடுறான். உண்மைய சொல்றானா, இல்ல அவ்ளோ வெட்டியா இருக்கானா ன்னு உங்களுக்கு பல கேள்விகள் வர்றது எனக்கும் தெரியுது. அது ஒன்னுமில்லைங்க. போன தடவை விமர்சனம் எழுதும் போது சொன்னேன்ல. புத்தகம் மூன்று வகை படும் ன்னு. ஜில் ஜங் ஜக் ன்னு. ஓ, நீங்க இன்னும் அத படிக்கலையா? படிச்சிருங்க இந்தாங்க (நிறக்குருடு - புத்தக விமர்சனம்). அதுல முதல் வகை தான் இந்த புத்தகம். மறுபடியும் மொக்கைய போட ஆரம்பிச்சுட்டான் நினைக்கும் நல்ல உள்ளங்களுக்காக விமர்சனத்துக்கு போயிரலாம்.

கரன்சி காலனி



























ஆசிரியர்: 'அந்திமழை' ந.இளங்கோவன்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ்
விலை: 70 ரூபாய்
பக்கங்கள்: 88

புத்தகம் அறிமுகமானது எப்படி:
நாங்க நாலு பேரு, எங்களுக்கு பயமே கிடையாது ன்னு காக்க காக்க-ல சொல்ற மாதிரி. நாங்களும் நாலு பேரு(ஹரிராமன்,லட்சுமி நாராயணன், சபீர் ஜாவித்,நானு), எங்களுக்கு பயம் லாம் இருக்கு, என்ன கொஞ்சம் புத்தகம் அதிகமா படிப்போம். ஒவ்வொரு வருடமும் நாங்கள் நால்வரும் வாங்கும் புத்தகங்களை படித்து முடித்தவுடன் அடுத்தவங்களுக்கு படிக்கச் கொடுத்துருவோம். அப்படி, ஹரிராமன் கிட்ட வாங்கி வந்தது தான் இந்த புத்தகம் கரன்சி காலனி.

விமர்சனம்:
கரன்சி காலனி ன்னு பேர் பார்த்த போது, ஏதோ பொருளாதாரம் சம்மந்தம் பட்ட புத்தகமா தான் இருக்கும் ன்னு நினைச்சுட்டே படிக்க ஆரம்பித்தேன். பின்னாடி தான் தெரிஞ்சுது. புத்தகம் பொருளாதாரம் பேசுல. அந்த பொருளாதாரத்தை ஆட்டி படைத்த சில சிறிய/பெரிய நிறுவனங்களை ஆரம்பித்த சில அற்புத மனிதர்களை பற்றிய புத்தகம் ன்னு. எப்போதுமே, நம் மனசு வெற்றி கதைகளை கேட்கும் போதும் சரி, படிக்கும் போதும் சரி, அதை வெகு வேகமாய் இயல்பாய் ரசிக்க ஆரம்பித்துவிடும். அப்படி பட்ட வெற்றி கதைகளை கொண்ட புத்தகம் தான் இது. இயல்பாய் நானும் வியாபாரம் பற்றிய செய்திகளில் அதிகம் ஆர்வம் காட்டுவேன். அதற்கு காரணம், இந்த நாசமாய் போன IT வேலையை விட்டுவிட்டு, சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற என்னுடைய பல நூற்றாண்டு கனவு தான். கனவு மட்டும் தான். இதுவரைக்கும் ஒன்னும் புடுங்கவில்லை என்பதே உண்மை. சரி அத விடுங்க, புத்தகத்திற்கு போவோம்.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் ஆசை இருக்கும். இந்த தொழில் பண்ணனும். அதுல புரட்சி பண்ணனும். அந்த தொழில்ல முதல் இடத்துக்கு வரணும் ன்னு நெறய ஆசை இருக்கும். இப்படி ஆசை மட்டுமே பட்டுட்டு இருக்காமல், அந்த ஆசையை தன்னுடைய உழைப்பாலும், சாமர்த்தியத்தாலும், நிர்வகிக்கும் திறனாலும் வென்று எடுத்த பதினைந்து முதலாளிகளின் கதை. முதலாளி ன்னு சொன்ன உடனே, உழைப்பாளிகளின் உழைப்பால் உயர்ந்த முதலாளிகள் ன்னு நினைச்சுற போறீங்க. கஷ்ட பட்டு, துயர பட்டு, உழைப்பாளிகளோடு வாழ்ந்து முன்னுக்கு வந்த முதலாளிகளின் கதை. பதினைந்து கதை தான். ஒன்னு ஒன்னும் 5 இல்ல 6 பக்கங்கள் தான். படிக்க ரொம்ப சுவாரசியமான கதைகள் ஒவ்வொண்ணும். நியூஸ் 18 தொடங்குவதற்கு காரணமான கதை, உலகத்தில் அதிகமாய் விற்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் அப்பளத்தை உருவாக்கிய படிப்பறிவில்லா, பணபலம் இல்லாத 7 பெண்களின் கதை, ஏர்டெல் உருவான கதை, மைண்ட் ட்ரீ உருவான கதை, MRF உருவான கதை ன்னு வெற்றி கதைகள் மட்டுமில்லாமல், வெற்றி பாதையிலிருந்து 85 வங்கிகளிடமிருந்து 2700 கோடி கடன் வாங்கி, அதை கட்ட வழி இல்லாமல், திவாலாகும் நிலைமைக்கு போய், விஜய் மல்லையா மாதிரி ஓடி ஒளிந்து கொள்ளாமல், மீண்டும் போராடி தவறுகளை சரி செய்து, மறுபடியும் வெற்றி பாதையில் வந்த அரவிந்த் மில் ஜெயித்த கதையும் கூறுகிறது.  பூஜ்யமிலிருந்து 100 க்கும், 100 லிருந்து மறுபடியும் பூஜ்யம் வரை சென்று மறுபடியும் 100 க்கு வந்த கதைகள் ன்னு புத்தகம் முழுவதும் அப்டியே உத்வேக கதைகள் தான்.

இந்த புத்தகத்தை படிச்சுட்டு, முழு உத்வேகத்தோட இருக்கேன். நாளைக்கே தொழில் தொடங்குறேன். 2020-ல பிரபு விமான நிலையம், ரயில் நிலையம், சட்டசபை, பாராளுமன்றம் ன்னு ஆரம்பிக்கிறேன். ஒரு சூறாவளி புறப்பட்டதே!


அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.

அன்புடன்
-பிரபு கந்தசாமி

Saturday, January 19, 2019

நிறக்குருடு - புத்தக விமர்சனம்

2019 முதல் நாம் படித்த புத்தகத்திற்கு விமர்சனம் போடலாம் என்று ஒரு உத்தேசம். இவன் என்ன பெரிய இவனா, புத்தகத்திற்கு விமர்சனம் போட என்று இதை படிக்கும்போது உங்களுக்கு தோன்றலாம். எனக்கும் அதே இஷ்க் இஷ்க் என்று தான் தோனியது. ஒன்றுமில்லை, இந்த விமர்சனம் படித்து விட்டு, என் வாசிப்பு நடையுடன் ஒத்துப்போகும் சில அறிய நண்பர்களை அறிந்து, அவர்களின் பரிந்துரைகளை வைத்து வாசிப்பு பழக்கத்தை மேலும் தொடர ஒரு அவா. அப்புறம் வலைப்பதிவு எழுதும் என் கடந்தகால பொழுதுபோக்கையும் புதுப்பிக்கவும் ஒரு ஆசை. கடைசியா 2013ல எழுதுனதுங்க. :( அவ்வளவு தாங்க!

நிறக்குருடு


























ஆசிரியர்: க.சுதாகர்
பதிப்பகம்: வம்சி
விலை: 100

புத்தகம் அறிமுகமானது எப்படி: 
இந்த எழுத்தாளர் சுதாகரின் முதல் நூல் 6174 செக்க போடு போட்டது. அருமையான அறிவியல் புனைகதை. இன்றும் எனக்கு பிடித்த நாவல்களுள் அதுவும் ஒன்று. அவரின் அடுத்த நாவலான 7.83 ஹெர்ட்ஸ்-ம் விறு விறு நடையுடன் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைக்கதையே. இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவன் என் நண்பன் சபீர் ஜாவித் தான். சரி, இவரின் எழுத்து நடை பிடித்துப்போனதால் இவரின் அடுத்த நூல்களை படிக்கும் ஆர்வமும் அதிகமானது. ஆனால், சபீர் அப்பவே சொன்னான். கொஞ்சம் இழுவை மாதிரி ன்னு பேசிக்கிட்டாங்க. பார்த்து எடு ன்னு. சரி எடுத்து தான் பாப்போம் ன்னு எடுத்தேன் 2019 புத்தக கண்காட்சியில். வாங்க, புத்தக விமர்சனத்திற்கு போவோம்.

விமர்சனம்:
ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஒலி இருக்கும்.
1). சில புத்தகங்கள், "டேய், விட்டுறாத டா தம்பி" ன்னு தனுஷ் குரலில் சொல்லி சொல்லி, ஒரே மூச்சில் நம்மை படிக்க வைத்து விட்டு விடும்.
2). சில
புத்தகங்கள், "பாஸ், ஒன்னும் பிரச்சனை இல்ல, கொஞ்சம் வெச்சு வெச்சு செஞ்சாலும், வீட்டுக்கு மட்டும் அனுப்பிருங்க பாஸ்" ன்னு வடிவேல் குரலில் சொல்லி, தினமும் படிக்க வைத்து முடித்து வைத்துரும்.
3). கடைசியா சில புத்தகங்கள் இருக்கு, தொறந்தாலே காஞ்சனா படத்துல இருட்டுல யாரோ அழுகிற மாதிரி கேக்கும்ல, அதே மாதிரி. "வாயேன் டா, வந்து படி டா" ன்னு அழுதுட்டே கூப்டுற மாதிரி இருக்கும், படிக்கவும் கொஞ்சம் சலிப்பாக இருக்கும். இந்த நிறக்குருடு அதுல மூணாவது வகைங்க.

அந்த அற்புத அறிவியல் புனைகதைகளை எழுதிய ஆசிரியரின் புத்தகமா இது ன்னு யோசிக்க வைத்த ஒரு புத்தகம். சரி டா, அப்படி என்ன தான் புத்தகத்துல இருக்கு ன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்காமல் இல்லை மக்களே.

நாம பள்ளி படிக்கும் போது(நாம ன்னா 90's கிட்ஸ் ங்க), தமிழ் படத்துல நற்றிணை, குறுந்தொகை ன்னு சில சங்க கால பாடல்களும், அதுக்கு விளக்கமும் கொடுத்து இருப்பாங்க. இந்த தலைவன் தலைவியை காணாது ன்னு சொல்வாங்கல. அதே தாங்க. அதோட பெரிய விரிவாக்கம் தாங்க இந்த நிறக்குருடு.

ஆசிரியர், தான் சந்தித்த இந்த உலக மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கை கதைகளையும், சங்க கால இலக்கியங்களோடு தொடர்புபடுத்தி பேசுகிறார். எனக்கு எப்பவும் இந்த சங்க இலக்கியங்கள் படிப்பவர்களை கண்டாலே வியப்பாக இருக்கும். அதை அவர்கள் பொறுமையாக படிக்கும் விதமும், அதை தொடர்பு படுத்திக்கொள்ளும் விதமும் ஆச்சிரியம் தரும். அதே ஆச்சிரியம் தான் இந்த புத்தகம் படிக்கும் போதும். ஒவ்வொரு பாடலுக்கும், ஆசிரியர் அதை நிகழ்கால நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தும் விதமும் அருமையோ அருமை. ஆசிரியர் ஒரு கதையில் சொல்லி இருப்பார். நம் வாழ்வின் ஒவ்வொரு  நிகழ்வுக்கும், ஒவ்வொரு சங்ககால பாடல் இருக்கிறது. அதை அவர் கோடிட்டும் காட்டி இருப்பார் ஒவ்வொரு கதையிலும். ஆனால், புத்தகம் முழுவதும் ஒரு மெல்லிய சோக இழைய ஊஞ்சலாடியது. எல்லா கதைகளும், ஒரு சோக நிகழ்கால முடிவோடு, சங்ககால பாடலோடு தொடர்பு படுத்தப்பட்டிருந்து. ஆனால், புத்தகம் உங்களுக்கு படித்து முடித்தவுடன் எந்த ஒரு தாக்கத்தையும் தராது.

உங்களுக்கு எந்த புத்தகமும் படிக்க இல்லாமல், இந்த ஒரு புத்தகம் தான் படிக்க இருக்கிறதென்றால்,  இந்த புத்தகத்தை எடுப்பதில் தவறேதுமில்லை. கொஞ்சம் பொறுமையாக,இல்ல ரொம்ப பொறுமையாக கையாள வேண்டிய புத்தகம் இது.

அட, என்னடா இது நிறக்குருடு ன்னு கேக்குறீங்களா, நிறங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை அறிய இயலாது போல், மனிதர்களும் சில வேறுபாடுகளை அறிய இயலாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் புத்தகம் உணர்த்தும் சேதி.

அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.

அன்புடன்
-பிரபு கந்தசாமி