என்னடா இவன், வாரம் ஒரு புத்தக விமர்சனம் போடுறானே, இவ்வளவு வெட்டியா இருக்கானா, வேலைக்கு ஏதாச்சும் போறான்னா? புத்தகம் படிச்சிட்டு தானே போடுறான் இல்ல சும்மா மேலோட்டமா படிச்சிட்டு போடுறானா ன்னு கேள்வி கணைகள் நாலா பக்கமும் இருந்து வருகிறதை எனக்கும் தெரிகிறது. 2021 வருடத்தில் ஒரு மாதத்திற்கு 3 புத்தங்கங்கள் கண்டிப்பாக படிச்சியாக வேண்டும் என்ற குறிக்கோள் வைத்து இருந்தேன்(ஒண்ணுமில்ல, போன சில வருடங்களில் வாங்கி படிக்காம வைத்து இருக்கிறதே 30 புத்தகங்களை தாண்டுகிறது, அதான்). இந்த மாதம் கொஞ்சம் அதிகமாகிருச்சு, மன்னிச்சு. வாங்க விமர்சனத்திற்கு போகலாம்.
சொல்ல முடியாத அல்லது இயலாத சில உணர்வுகளையும் அனுபவங்களையும் என் நிழலின் மூலம் உரைக்கும் ஒரு களம்....!!! வந்தவர்கள் வெறுமனதுடன் அனுப்பப்பட மாட்டீர்..!!!
Saturday, March 20, 2021
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - புத்தக விமர்சனம்
Friday, March 19, 2021
ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள் - புத்தக விமர்சனம்
தொடர்ந்து நாவல்களா படிச்சிட்டு வர்றோமே, கொஞ்சம் மாத்தி படிப்போம் ன்னு அரசியல் சைடு போலாம் ன்னு பார்த்தால், ஏற்கனவே அரசியல் களம் தேர்தலை எதிர்கொண்டு நெருப்பா எரியுது. ஊடங்களில் வரும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் புரிஞ்சிட்டு படிச்சு பதில் சொன்னாலே போதும். இப்போதைக்கு அதை தொட வேண்டாம் ன்னு மனசு சொன்னாலும், மூளை கேக்கல. சரி மனசுக்கும், மூளைக்கும் தோதுவான ஒரு புத்தகம் ன்னு இதை எடுத்தேன். இந்த புத்தகமும் சும்மா இல்லை. 1990-களில் தமிழக அரசியலை திருப்பி போட்ட படுகொலைக்கான காரணங்களை அதே பதற்றத்தோடு விவரிக்கும் ஒரு புத்தகம். இந்த படுகொலை ஏற்படுத்திய கரும்புள்ளிகள், ஆறாத காயங்கள் இன்னும் அரசியலிலும், தமிழகத்திலும் இருக்கு என்றே சொல்லலாம். சரி வாங்க, புத்தக விமர்சனத்திற்கு போவோம்.
ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்
Tuesday, March 16, 2021
புதியதாய் ஒரு கல்வி
நண்பர் ஒருவர் மாற்று கல்வியை கொண்டுள்ள ஒரு கோயம்பத்தூர் பள்ளி பற்றி கவிதை ஒன்றை எழுதி தர சொல்லி கேட்டிருந்தார். அதற்காக தான் இந்த கவிதையை எழுத முற்பட்டேன்.
நாளொன்றாய் சுமை ஏறிட,
திசைபலவாய் அழுத்தம் கூடிட,
பாடி திரியும் பாலகர்கள்
பாவமாய் பள்ளிகளில் அலைவதேனோ?
மாற்றமாய் ஒரு கல்வி இருக்கு,
மகிழ்ச்சியாய் பல பாடங்கள் இருக்கு,
தாவி குதித்திட தயக்கம் எதற்கு?
வாடியதாய் பூக்கள் இல்லை,
அழுத்தமாய் ஏதும் இல்லை,
பெரும் புத்தகச்சுமையும் இங்கே இல்லை.
வேடிக்கையாய் கற்றலில் வலம் வருவோம்,
பிடித்தவற்றை மட்டும் படித்தறிவோம்,
சிறு பறவையாய் பாடிப் பறப்போம்,
அந்த நிலவையும் எட்டித் தொடுவோம்.
- பிரபு கந்தசாமி
Sunday, March 14, 2021
பதவிக்காக - புத்தக விமர்சனம்
கடைசி புத்தகம் தீக்குச்சி பற்ற வைத்த நெருப்பு கொஞ்சம் தான் அணைந்திருந்தது. சரி, அதே தீக்குச்சி நெருப்பின் வெப்பத்தில், இன்னொரு புத்தகம் படித்து விடலாம் ன்னு எண்ணி தேடி கொண்டு இருந்தபோது புத்தக கண்காட்சியில் வாங்கிய பதவிக்காக புத்தகம் கண்ணில் பட்டது. படிச்சிருவோம் ன்னு எடுத்து படித்தும் முடித்து விட்டேன். வாங்க, நேராக புத்தக விமர்சனத்திற்கு போய்விடலாம்.
பதவிக்காக
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்
விலை: 300 ரூபாய்
பக்கங்கள்: 382
புத்தகம் அறிமுகமானது எப்படி:
தமிழ் நாவல் படிக்கும் எவருக்கும் தெரிந்த ஒருவர், இயக்குனர் சங்கரின் ஆஸ்தான திரைக்கதை ஆசிரியர், சுஜாதா தான் இந்த நாவலின் ஆசிரியரும் கூட. புத்தக கண்காட்சியில் நான் வாங்கும் புத்தகங்களுள், கண்டிப்பாக ஒரு சுஜாதாவின் ஒரு நாவலும் இருக்கும். சுஜாதாவும் பல துப்பறியும் நாவல்களை எழுதி உள்ளார். மறுபடியும் துப்பறியும் நாவலா? யார் டா இவன், சரியான பைத்தியக்காரனா இருப்பான் போலயே நீங்கள் நினைப்பது இங்க வரைக்கும் கேக்குது. பதறாதீங்க. பதவிக்காக நாவல் சுஜாதாவின் அரசியலை ஒட்டி எழுதப்பட்ட நல்ல நாவலுள் ஒன்று என்ற சமூக ஊடகம் வாயிலாக அறிந்த நான், இந்த புத்தகத்தை இந்த புத்தக கண்காட்சியில் வாங்கி விட்டேன். என் உறவினரும் இதை தான் வாங்க நினைத்து இருந்ததாய் சொன்னது, அப்பாடா ஒரு நல்ல நாவலை தான் வாங்கி இருக்கோம் என்ற மனதிருப்தியை தந்தது.
விமர்சனம்:
எப்படி ராஜேஸ்குமார்க்கு ஒரு விவேக், விஷ்ணு முக்கியமான கதை மாந்தர்களோ, சுஜாதாவிற்கு கணேஷ், வசந்த். சுஜாதாவின் துப்பறியும் நாவலுக்கு கணேஷ், வசந்தை விட்டால் வேற யாரும் அவ்வளவு செட் ஆக மாட்டார்கள். முன்னரே சொன்னது மாதிரி, இது துப்பறியும் நாவல் இல்லை. அதனால இங்க கணேஷும், வசந்தும் இல்லை. பரவால்ல போகட்டும். சரி சரி மோரை ஊத்து, அதுல பூனை கிடக்குதான்னு பாப்போம் ன்னு நினைச்சிகிட்டயே பக்கங்களை திருப்பினேன்.
சுஜாதாவின் பலமே, நாவல் ஆரம்பித்த ஒரு சில பக்கங்களுள், படிக்கிற நம்மளையும் உள்ளே கொண்டு போயிடுவார். பின்ன சங்கரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது என்றால், இப்படி லாவகமாக கதை சொல்லும் ஒருவர் இருந்தாலொழிய சாத்தியமாகாது. அதற்கு சான்று சுஜாதா இல்லாமால் சங்கர், ஆசான்( சிறிது சிரித்து கொள்ளுங்கள்) ஜெயமோகனுடன் பணியாற்றிய கடைசி சில இரண்டு படங்களில்( ஐ, எந்திரன் II ) சங்கர் சற்றே சறுக்கி இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். சுஜாதாவின் சாப்ட் சங்கி தனங்களை விட்டு பார்த்தால், சுஜாதாவை போல் சுவாரசியமாக நாவல் எழுதும் ஒருவர் இந்த உலகில் இல்லை என்பேன் நான்.
இந்த பதவிக்காக நாவல் எழுதி 32 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது படிக்கும் போதும், அவர் எழுதிய எழுத்துக்களை நிகழ்கால அரசியல் நிகழ்வுகளோடு பொருந்தி பார்க்க இயலுகிறது.
கதை ராமராஜபுரம் தொகுதியில் ஆரம்பிக்கிறது. அப்படி ஒரு தொகுதி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்றால் இல்லை. ராமராஜபுரம் ன்னு ஒரு கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம் தொகுதியில் வருகிறது. இந்த ஆராய்ச்சிலாம் விட்டுவிட்டு கதைக்குள் போகலாம்.
ராமராஜபுரம் தொகுதி இரவு பன்னிரண்டு மணிக்கும் பரப்பாக அனலை கக்கிக்கொண்டு இருந்தது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை. இப்போ இருக்குற மாதிரி சுலபமாக ஏமாத்திட கூடிய மின்னணு இயந்திரங்கள் அப்போது இல்லை. வாக்கு சீட்டு மட்டும் தான். அடுத்த அடுத்த சுற்றுகளில், சோழர் பரம்பரையிலிருந்து ஒரு MLA ன்னு சொல்ற மாதிரி சுயேச்சை வேட்பாளர் தன்ராஜ் முன்னணியில் இருக்கிறார். கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகி விட்டது. இந்த வெற்றி தான் கதையின் கரு. இந்த வெற்றி எப்படி தன்ராஜை ஆளும் அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்கிறது, அதன் பின்னால் வரும் வலிகள், வேதனைகள், தமிழ்நாடு சந்திக்க போகும் அரசியில் இருண்ட காலத்திற்கு எப்படி அடிகோலுகிறது என்பதே மீதி கதை.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவ்வளவு சுலபமாக யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். அம்மையார். ஜெயலலிதா இறந்த பிறகு, முதல்வர் இருக்கைக்கு ஆசைப்பட்டு, சபதம் போட்டு(மூணு முறை), தியானம் பண்ணி, கால்ல குப்பறக்கடியாய் விழுந்து, கூவத்தூர் உல்லாச விடுதிகளில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுக்கொரு கோஷ்டியாய் அடித்து கொண்டு இருந்தார்கள். யார் டா தமிழ் நாட்டின் முதல்வர் என்ற பள்ளி வினாக்களுக்கு கூட, "வீ ஆர் வைட்டிங்" ன்னு பதில் சொல்ல வெச்ச மாதமது.
இப்படி பட்ட நிகழ்வுகளை மீண்டும் ஓட்டி பார்த்தால் எப்படி இருக்கும், அதுவே பதவிக்காக. சுயேச்சை வாக தேர்ந்து எடுக்கப்பட்ட தன்ராஜ், ஆளும் அரசிடம் இருந்து வந்த அழைப்புகளை மறுத்து, வெளியில் இருந்து ஆதரவு தெரிவிச்சாலும், அரசியில் என்ற பலமுனை காந்தம் எப்படி தன்ராஜை ஆளும் அரசியலில் விழ வைத்து, ஆளும் கட்சியின் ஒரு கோஷ்டியை கவிழ்த்து, இன்னொரு கோஷ்டியை ஆட்சியில் அமர வைத்தது, மீண்டும் அந்த கோஷ்டியை மறுபடியம் ஆட்சியை இழந்தது என்ற வளைய நிகழ்வுகளுக்கு எப்படி தன்ராஜ் காரணமாக இருந்தான் என்பதையும் பல துணை கதைகளுடன் வேகமா விரட்டுகிறார் சுஜாதா.
தன்ராஜ் சந்திக்கும் பழைய காதலியின் உறவும், முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஒருவர் பண்ணிய சல்லாபமும், எப்படி பின்னாடி அவர்களை தொரத்தியது, எப்படி அதுவே அவர்களை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றியது ன்னு கதை நகர்கிறது.
முன்னரே சொன்ன மாதிரி, கதைக்குள் நம்மை சீக்கிரம் விழ வைத்து, பின்னர் ஆர்வத்தை தூண்டுகிறார். கதை நிகழ்வுகள், நிகழ் காலத்தை ஒத்தே இருப்பதால், நாமளும் சுலபமாக கதையை பொருத்தி பார்க்க முடிகிறது.
தம்பி, போதும் டா. புல்லா நல்லதா சொல்லிட்டு இருக்க. அவ்வளவு நல்லாவா இருக்கு ன்னு கேட்டா, ஆம், அரசியல் வேடிக்கை விளையாட்டுகளை ரசிப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல தீனி. என்ன, கடைசி முடிவு தான் எனக்கு சரியாய் படல. ஹீரோ வந்து சுபம் ன்னு போட்டு முடிச்சாதானே கதை நல்லா இருக்கும். ஹீரோ பாட்டுக்கு, போங்கய்யா யோவ், உங்க புளியோதரையும் வேண்டாம் உங்க பொங்கச்சோறும் வேண்டாம் ன்னு கதையை விட்டு திடீர்னு விலகிட்டாப்ல.
இன்றைய அரசியல் நிலவரத்தையும், கதையும் வைத்து சிலப்பதிகார வரியை நான் மேற்கோள் காட்டுவது அவசியம்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
பொருள்: ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்.
சங்க கால பொருள்: கர்மா இஸ் பூமராங் டா வெண்ண மவனே
அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.
தெளிவுடன் தேர்வு செய்யுங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினரை!
அன்புடன்
-பிரபு கந்தசாமி
Saturday, March 13, 2021
ராஜேஷ்குமாரின் கடைசி தீக்குச்சி - புத்தக விமர்சனம்
அப்பாடா, கடைசியா மறுபடியம் எழுத ஆரம்பிச்சாச்சு. கடைசியா 2019 ஜனவரி 21 ஆம் நாள் புத்தக விமர்சனம் போட்டேன். அதுக்கு அப்புறம் நெறைய புத்தகம் படிச்சாலும், விமர்சனம் எழுத நேரம் கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கலன்னு சொல்றத விட, சோம்பேறி ஆகிட்டேன்னு தான் சொல்லணும். சோம்பறித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் மறுபடியும் விமர்சனம் செய்ய வந்து இருக்கிறேன்.
கொரோனாக்கு அப்புறம் வந்த புத்தக கண்காட்சி. ஏற்கனவே நம்ம கிட்ட படிக்க நெறைய புத்தகம் இருக்கு, ஒரு 10 புத்தகம் மட்டும் வாங்குன போதும்ன்னு போன நான், கடைசில 21 புத்தகங்களோட வந்தேன். சரி, இந்த வருடம் நெறைய படிக்கிறோம், தட்டுறோம், தூக்குறோம் ன்னு என்ன புத்தகத்தோடு ஆரம்பிக்கலாம்ன்னு யோசிக்கும் போது தான் ராஜேஷ்குமாரின் கடைசி தீக்குச்சி சிக்கிச்சு. இப்போ நீங்களும் என்கிட்டே சிக்கி இருக்கீங்க. வாங்க விமர்சனத்துக்கு போவோம்.
கடைசி தீக்குச்சி
ஆசிரியர்: ராஜேஷ்குமார்
பதிப்பகம்: RK பப்ளிஷிங்
விலை: 280 ரூபாய்
பக்கங்கள்: 332
புத்தகம் அறிமுகமானது எப்படி:
கோவிந்தராஜனுக்கு நெறைய முன்கதைகள் உண்டு. அதை சுருங்க சொன்னாலும், 12-ஆம் நூற்றாண்டு வரையிலாவது போக வேண்டும்ன்னு தசாவதாரத்துல கமல் சொல்லுவாருல, அப்படி ஒரு முன்கதை உண்டு எனக்கும் ராஜேஷ்குமார் நாவல்களுக்கும். என் அக்காவிற்கு இந்த கிரைம் திரில்லர் நாவல் படிக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் நேரம் போகவில்லையே என்று கல்லூரி விடுமுறையில் அவங்களிடம் இருந்து வாங்கிய புத்தகம் தான் ராஜேஷ்குமார் திரில்லர் நாவல். அப்போதுலாம் வாரம் ஒருமுறை ஒரு பாக்கட் சைஸ் நாவல் வரும் 10 ரூபாய்க்கு. சில பழைய புத்தக கடைகளில் 2.50 ரூபாய்க்கு ராஜேஷ்குமாரின் பழைய நாவல்கள் விற்கும். அதை வாங்குவதும், படிப்பதும் ஒரு பெரிய பொழுதுபோக்கவே மாறியது. யாரோ யாரையோ கொலை செய்து இருப்பார்கள், அல்லது ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கும். அதை தனியார் துப்பறியும் ராஜாக்களான விவேக், விஷ்ணு கண்டுபிடிப்பார்கள். ராஜேஷ்குமார் நாவல்கள் படிக்கும் அனைவர்க்கும் இந்த விவேக், விஷ்ணு, ரூபலா கதைமாந்தர்கள் அத்துப்படி, பிடித்த கதைமாந்தர்கள் கூட. இன்றும் என்னிடத்தில் புதுசு, பழையது என 50-க்கும் மேற்பட்ட ராஜேஷ்குமாரின் பாக்கெட் சைஸ் நாவல்கள் உள்ளன. இப்போதும் வருகிறது. ஆனால் 15 ரூபாய் ஆகிவிட்டது. இப்படி பழக்கப்பட்ட எனக்கு, இந்த புத்தக கண்காட்சியில் ஆச்சரியம். எப்போதும் 100 பக்கத்திற்கும் குறைவாய் வரும் சிறிய பாக்கெட் சைஸ் நாவலுக்கு இடையில், கொஞ்சம் பெரியதாய், 300 பக்கங்களுக்கு மிகையாமல் ஒரு நாவல் வந்தால் வாங்காமல் விட மனசு எப்படி ஒத்து வரும். அதன் வாங்கியாச்சு. இப்படி படிச்சு படிச்சு எனக்குள்ளவே ஒரு துப்பறியும் புலி தூங்கிட்டு இருக்கு. யாருக்காவது துப்பறிய வேண்டுமென்றால் என்னை கூப்படவும். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் மாதிரி இல்லாவிட்டிலும், நம்ம புரட்சி தளபதி விஷால் அளவுக்காச்சும் முயற்சி பண்ணுவேன்.
(தூரத்தில், இவனுக்கு காலையில நைட் கழட்டி வெச்ச கண்ணாடியை கண்டு புடிக்கவே நாங்க வேண்டும், இவன் போய் எதையோ கழட்ட போறானாம் என மனைவி மற்றும் அம்மாவின் கோரஸ் குரல் கேக்குறது. சோகமான இசை வாத்தியங்கள் ஒலிக்கப்படுகிறது)
விமர்சனத்திற்குள் போவோம், வாங்க!
விமர்சனம்:
பொதுவாவே ராஜேஷ்குமாரின் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதால், கதை களங்கள் கோவையை சுற்றியே அமையும். என் கல்லூரி கால வாழ்வும், நான் வாக்கப்பட்ட ஊரும் கோவை என்பதால், கதையோடு சுலபமாக ஒன்றிவிட இயலும். இந்த கதையிலும் அப்படியே.
அத்திபாளையம் பிரிவில் கதை ஆரம்பிக்கிறது. காவல்துறை சோதனையில் ஒரு வேனில் இரண்டு குரங்குகள் இறந்த நிலையிலும், ஒரு குரங்கு மயக்கமான நிலையிலும் கிடைக்கிறது. மருத்துவ சோதனையில், ஆக்குலார் இம்பிளான்ட்(Ocular Implant) முறையில் மூன்று குரங்குகளுக்கும் செயற்கை கண் பொருத்தப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கும் நிமிடங்களில், மூன்றாவது குரங்குகிற்கும் உறுப்புகள் செயலிழந்து இறக்கும் தருவாயை அடைகிறது. இதான் கதையின் கரு. யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பதற்காகவே இந்த 332 பக்கங்களும்.
எங்கடா நம்ம கதாநாயர்கள் விவேக், விஷ்ணு தேடிட்டு போன, அவர்கள் இல்லாமல் காவல்துறையின் போக்கிலேயே கதை விரிகிறது. சரி, இந்த கதைலாச்சும், தனியார் துப்பறியும் மாந்தர்கள் இல்லாமல், காவல்துறையே கண்டுபிடிக்கட்டும் ன்னு விட்டுட்டாரு போல ராஜேஷ்குமார். விவேக், விஷ்ணுவை காவல்துறையிலாச்சும் சேர்த்து விட்டு இருக்கலாம். பச்.
இது ஒரு ஆபத்தான பரிசோதனையின் விளைவுகள் தான் என்று காவல்துறை கண்டுபிடிக்கும் போது, கதைநாயகன் சபரி என்ட்ரி. அவன் தான் இந்த பரிசோனாதையை பண்ணவனே. பேசிக்கலி, ஹீ ஹிஸ் த ஹீரோ அண்ட் ஹீ ஹிஸ் த வில்லன் டூ. கமல் பேன் போல.
இந்த பரிசோதனை காவல்துறையிடம் இருந்து மறைக்க முயலும் வேளையில், இந்த பரிசோதனையை பண்ண சொன்னவன், அதை மேற்பார்வை செஞ்சவன் ன்னு ஒருத்தன் ஒருத்தன சாக, வீட்டுலயும் சில குழப்பங்கள் ஏற்பட, சபரிக்கு தலைவலி மேல் தலைவலி. திடீர்ன்னு அவன் வீட்டுல தூங்க வந்த அவன் மனைவியின் தோழியும் மர்கயா. தோழி ஏன் வந்தா ன்னு கேக்காதீங்க. அது வேற ஒரு தெய்வீக காதல் கதை. சப் பிளாட். யார்டா இந்த கொலைகள் பன்றானு தெரியாம, காவல்துறைக்கும் போக முடியாம, சோ, வாழ்க்கையே ஒரே சேட் ன்னு பொலம்பிட்டே யார் டா இதுக்கு காரணம், யார் கொலைகளை செஞ்சாங்க, அதற்கான காரணங்களை யார் கண்டுபிடிச்சாங்க, காவல் துறையா, சபரியா, ஏன் இந்த பரிசோதனை பண்ணாங்க என்பதே மீதி கதை.
எப்போதும் 100 பக்கங்கள் எழுதறவர், 300 பக்கங்கள் எழுத சொல்லிட்டாங்களே ன்னு, 100 பக்கங்களுக்கு எழுதின கதையை, கதைக்குள் கதைன்னு மனைவிடோட தோழி, தோழிக்கு ஒரு காதலன், அவன் ஒரு டூமாங்கோலி ன்னு நீட்டி முழக்கிட்டார். சில லாஜிக் விதிமீறல்கள். அட யாருய்யா இப்போ லாஜிக் லாம் பாக்குறது ன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. இருந்தாலும் பரவால்ல, த்ரில்லர் விரும்பிகள் தாராளமாய் படிக்கலாம். கடைசி 75% வரை சொய் ன்னு போகும். சங்கர் படத்துக்கு ரவிக்குமார் திரைக்கதை எழுதுனா உங்களுக்கு பிடிக்குமா, பிடித்தால் படியுங்கள்.
இருந்தாலும் ஏன் யா விவேக், விஷ்ணுவ கழட்டி விட்டுட்ட. மறுபடியம் பச்.
சரி, 2021 வருடத்தை ஒரு புத்தகத்தோடு ஆரம்பிச்சாச்சு. வருட தொடக்கத்தில் இந்த மாதிரியான புத்தங்களையே நான் படிக்க விரும்புவேன். சீக்கிரம் படித்து முடிக்கலாம், அடுத்த புத்தகத்தை சீக்கிரம் ஆரம்பிக்கலாம் என்ற என் எண்ணம்.
இந்த வருடத்தில் உங்களால் படிக்கப்பட்ட முதல் புத்தகம் என்ன?
அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.
அன்புடன்
-பிரபு கந்தசாமி



