சொல்ல முடியாத அல்லது இயலாத சில உணர்வுகளையும் அனுபவங்களையும் என் நிழலின் மூலம் உரைக்கும் ஒரு களம்....!!! வந்தவர்கள் வெறுமனதுடன் அனுப்பப்பட மாட்டீர்..!!!
மதுரையின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களால் 2017-ம் ஆண்டில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களும், சிறிது புனைவும் கொண்ட ஒரு புத்தகம்.
மேற்குமலைத்தொடர்ச்சிகளால் தேனி அருகே உருவாகும் வைகை ஆறு, பல சிறு ஆறுகளை இணைத்துக்கொண்டு திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அழகன்குளம் வழியாக கடலில் கலக்கிறது.
வருடத்தில் நான்கு மாதங்களுக்கு மட்டுமே நீர்ப்போக்கை கொண்டுள்ள சங்ககால பாடல்களில் வையை என்றழைக்கப்பட்ட வைகை ஆற்றங்கரையில் 2400 ஆண்டுக்களுக்கு முன்னரே ஒரு நாகரிக சமூகம் வாழ்ந்துள்ளனர் என்பதை உங்களால் யோசித்துப்பார்க்க முடிகிறதா?
கீழடி ஒரு தொடக்கப்புள்ளி. வைகை நதிக்கரையில் 293 இடங்களில் இதுபோன்ற தொல்லியல் செய்வதற்கான இடங்கள் என்று கண்டறியப்பட்டு, அதில் கீழடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 19 பகுதிகளில், 13 பகுதிகள் வைகை நதி நாகரித்தின் சிறப்பை பேசுகிறது.
இத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே அந்த நாகரிகத்தில், “கோதை” என்ற ஒரு பெண்ணின் பெயர் தமிழ் எழுத்துகளால் தங்கக்கட்டுகளால் பொறிக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
2000 ஆண்டுகளுக்கு முன்னர் அழகுன்குளம் கடற்கரையில், யாரோ ஒருவர் பானை ஓட்டின் மீது வரைந்த ரோமானிய கப்பல் ஓவியக்கிறுக்கல் இப்பொழுது கிடைத்துள்ளது என்ற ஒரு செய்தி வியப்பல்லவா?
தமிழ்மொழியில் காலத்தால் மிகப்பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் 33 இடங்களில் கிடைத்துள்ளன. இதில் 22 கல்வெட்டுகள் மதுரைப்பகுதிகளில் கிடைத்துள்ளன.
இந்தப்புத்தகத்தை படித்துக்கொண்டே மதுரையையும், வைகையையும், கீழடியையும் நேரில் சென்று பார்க்க நேர்ந்தது. முற்றிலும் ஒரு மாறுப்பட்ட கோணத்தில் பார்க்க நேர்ந்தது.
நான் மதுரையில் நடந்த தெருக்களினூடே ஒரு பொற்கொல்லன் அரண்மனையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறான், வெண்ணிற முத்துமாலையை அணிந்துள்ள ஒரு பெண், ஆப்கானிஸ்தானின் சூது பவள மாலையை அணிந்துள்ள பெண்ணோடு, தொருவோர வீட்டில், யானைத் தந்தத்தால் ஆன தாயக்கட்டடைகளை உருட்டிக்கொண்டுள்ளனர், ரோமானிய வணிகன் ஒருவன், பாண்டிய வணிகனோடு இருவருக்கும் தெரிந்துள்ள ரோமானிய மொழியில் பாப்பரஸ் தாளில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளனர் என்று எண்ணும் போதே பிரம்மிப்பு உருவாகிறது அல்லவா? அதைத்தான சு.வெங்கடேசனும் தன் எழுத்துகளால் கடத்துகிறார்.
மீதியுள்ள 6 பகுதிகளில், தொடக்கக்காலங்களில் கீழடி புறக்கணிக்கப்பட்ட ஆதங்கங்களும், கீழடி ஒட்டி கள அருங்காட்சியம் அமைக்க அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தியதையும் பதிவு செய்கிறார். இன்று அவரது கனவு, அனைத்து தமிழர்களின் கனவு மெய்படுவது போல், கீழடியில் கள அருங்காட்சியம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டே இடத்தில் மட்டுமே கள அருங்காட்சியம் அமைந்துள்ளது. ஒன்று சென்னை கோட்டைக்குள் உள்ளது, இரண்டாவது 2023-ல் கீழடியில் தொடங்கப்பட்டுள்ளது.
பழந்தமிழரின் ஒரு தொன்மை எச்சம் நம் கண்முன்னே நினைவாய் விரிகிறது. புதியதாய் வாங்குங்கள், இரவல் வாங்குங்கள். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். அதன்பிறகு மதுரையை, பாண்டிய நாட்டை வலம் வாருங்கள்.
பெரிய இரண்டாம் நாளின் களைப்புக்களுக்கிடையே, அடுத்த நாளை ராமோஜி பிலிம் சிட்டியில் செலவழிப்போம் என்று முடிவு செய்தோம். பல வீடியோக்கள், blog-கள், காலை 9 மணிக்கு ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் ஆளாக சென்றால் தான், வரவேற்பு நடனம் பார்க்க முடியும், முழுவதுமாக சுற்றிப்பார்க்க முடியும் என்று ஆலோசனைகள் சொன்னதால், அதன்படியே காலை 7:30 மணிக்கு நாங்கள் தங்கி இருக்கும் Oyo ஹோட்டலை விட்டு கிளம்ப முடிவு செய்து இரண்டாவது நாளை முடித்துக்கொண்டோம்.
திட்டப்படியே மூன்றாவது நாளை காலை 7:30 மணிக்கெல்லாம் தொடங்கினோம். தொடர் விடுமுறை என்பதால், ஹைதராபாத்தை விட்டு வெளியே செல்லும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. காலையே கிளம்பியதால், பெரிய டராபிக் நெரிசல் இல்லை.
8:15 மணிக்கெல்லாம் ஹைதராபாத்திலிருந்து ராமோஜி பிலிம் சிட்டியை இணைக்கும் சாலையிலிருந்த ஹோட்டலில் காலை உணவுக்காக காரை நிறுத்தினோம். ஹைதராபாத்திலிருந்து வெளியே வந்து, ராமோஜி பிலிம் சிட்டியை இணைக்கும் சாலையில் இருந்த நல்ல உணவகங்களுள் நாங்கள் சாப்பிட்ட சம்பூர்ணா உணவகமும் ஒன்று. ராமோஜி பிலிம் சிட்டிக்கு அருகில் இந்த உணவகம் இருந்ததால், கூட்டம் அதிகமாகவே இருந்தது. சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு, கிடைத்த இருக்கையில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். நேரம் ஆக ஆக உணவகத்தில், அதை ஒட்டிய சாலையிலும் கூட்டம் கூடிக்கொன்டே இருந்தது.
சம்பூர்ணா உணவகத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் ராமோஜி பிலிம் சிட்டியின் பெரிய நுழைவு வாயில் தென்பட்டது. எங்களுக்கும் முன்பாகவே 30 வண்டிகள் வந்து இருந்தன. கார் நிறுத்திமிடத்தில் வண்டியைப் போட்டுவிட்டு, டிக்கெட் எடுக்குமிடத்திற்க்கு சென்றோம். கணிசமான கூட்டம் இருந்தது. வெவ்வேறு விதமான டிக்கெட்டுகள் இருந்தன. நாங்கள் எடுத்த 1400 ரூபாய் டிக்கெட்டுற்க்கு நீங்கள் காலை 9 மணி முதல் 5 மணி வரை ராமோஜி பிலிம் சிட்டியில் சுத்தலாம், அங்கே இருக்கும் பல்வேறு வகையான சினிமா அரங்கங்களை பார்ககலாம். ஒவ்வொரு அரங்கத்திலிருந்தும் இன்னொரு அரங்கித்திற்கு செல்வதற்கு ராமோஜி பிலிம் சிட்டியின் சார்பாக பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தது.
2500 ரூபாய் டிக்கெட்டுகளும் இருந்தது. இந்த டிக்கெட்டில் நீங்கள் குளிர்யூட்டப்பட்ட பேருந்தில் சொகுசாக பயணிக்கலாம். உங்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதிலிருந்து, ஒரு இடத்தில் இறக்கிவிட்டு, மறுபடியும் ஏற்றிகொண்டு இன்னொரு இடத்தில் இறக்கிவிடும் வேலை முதற்கொண்டு அனைத்தையும் அவர்கள் பார்த்துக்கொள்வர்.
ராமோஜி பிலிம் சிட்டி:
பல அடுக்குகளைக் கொண்ட மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள சினிமா தொடர்பான அனைத்துவித படப்பிடிப்புகளும் நடக்கும் ஒரு இடம். ஒரு இடத்தில் அரண்மனைகள், கோவில்கள் சார்ந்த செட்கள் இருக்கும், இன்னொரு இடத்தில் ஒரு சாதாரணத் தெரு, அதைச் சார்ந்து உள்ள டீக்கடை, மற்ற கடைகள் கொண்ட செட் இருக்கும், மேலைநாடுகளைப் பிரதிபலிக்கும் செட்டும் இருக்கும், விமான நிலையச் செட், மகாபாரத செட், ரெயில் நிலையச் செட், பாகுபலிச் செட் என பல செட்டுகள் பல அடுக்குகளில் தொலைவுகளில் அமைந்து இருக்கும். ஒவ்வொரு செட்டுக்குமான இடைவெளி சில கிலோமீட்டர் தொலைவுகள் இருந்தது. ஒவ்வொரு செட்டுக்கும் ஒரு பொதுவான இடம் இருக்கும். அந்த இடத்திலிருந்து பார்க்க வரும் மக்களை ராமோஜி பிலிம் சிட்டியின் பேருந்துகள் இறக்கி விட்டும், ஏற்றிக்கொண்டும் அடுத்த செட்டுக்கு கொண்டு போய் உங்களை இறக்கி விடும். பேருந்துகள் நிமிட இடைவெளியில் வந்துக்கொன்டே இருக்கும்.
டிக்கெட் வாங்கி கொண்டு உடனடியாக உள்ள நுழைந்தோம். வரிசையாக பேருந்துகள் காத்துகொண்டு இருந்தன. பேருந்துகள் நிரம்பியவுடன் ஒவ்வொன்றாக கிளம்ப ஆரம்பித்தன. டிக்கெட் கொடுக்குமிடத்திலிருந்து ஒரு அரைமணி நேரம் பேருந்தில் பயணம் ராமோஜி பிலிம் சிட்டியின் முதல் அரங்கிற்கு அதாவது மைய அரங்கிற்கு செல்ல வேண்டும். முதலாவதாக மக்கள் வந்து இறங்குமிடமும் இது தான். அனைத்தும் சுற்றி பார்த்தப் பிறகு, வாகன நிறுத்துமிடத்திற்கு பேருந்து ஏறுவதும் இங்கு தான். மணிக்கெல்லாம் நாங்கள் மைய அரங்கிற்கு வந்து விட்டோம். மணி அளவில் மட்டுமே அரங்கின் நுழைவு வாயில் நடனத்தோடு திறக்கப்படும். அதுவரையில் அங்கே இருக்கும் பொழுது போக்கு விளையாட்டுகளில் விளையாடச் சென்றோம். டிகிரியில் சுத்தி வரும் , ஏடாகூடமாக சுற்றி வரும் இன்னொரு பொழுதுபோக்கு , ராட்டினம், பச்சை குத்துதல், பார்த்து படம் வரைதல், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் என மணி நேரம் பொழுதுப்போக்குவதற்கான விளையாட்டு அம்சங்கள் அங்கு இருந்தன. ஒரு அரை மணி நேரம் விளையாடி விட்டு போவதற்கும், வரவேற்பு நடனம் ஆரம்பிப்பதற்க்கும் சரியாக இருந்தது.
வரவேற்பு நடனம் முடிந்ததும் கூட்டமாக உள்ள சென்றோம். அடுத்த நாள் சுதந்திரதினம் என்பதால், மற்றுமொரு நடனமும் நடந்தது. எப்படியும் ஒரு பேர் இந்த நடனங்களை பார்த்துக்கொண்டு இருந்தோம். இன்னும் மக்கள் வந்து கொண்டே இருந்தனர். நடனங்கள் முடிந்ததும், அரங்குகள் அமைந்துள்ள இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம். (எப்படி ஒரு சினிமா எடுக்கிறார்கள் என்பதை பற்றிய நிகழ்ச்சி, நாம் நடிக்கும் சில சீன்கள் உடனே படமாக மாறி வருகிறது), விண்வெளி பற்றிய நிகழ்ச்சி, ஹாலிவுட் படங்களின் சில சீன்களை பிரதிபலிக்கும் சிறிய பொம்மைகள் நிறைந்த அரங்கிற்குள் சுற்றுலா, சண்டை காட்சிகள் படமாகும் விதம் என பலதரப்பட்ட அரங்குகள் இங்கே இருந்தன. ஒவ்வொரு அரங்கிற்கும் செல்ல குறைந்தபட்சம் அரைமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். வரிசையில் நிற்பது, நிகழ்ச்சிகளை பார்ப்பது என இரண்டு மணி நேரம் இங்கே செலவிட்டோம். இன்னுமும் இங்கே இருந்தால், மற்ற அரங்குகளை பார்க்க இயலாது என்று எண்ணி, வேறு அரங்கிற்கு செல்ல மைய அரங்கின் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றோம்.
பேருந்து நிரம்பியவுடன், நம்முடன் ராமோஜி பிலிம் சிட்டியை சார்ந்த ஒரு வழிகாட்டியும் பேருந்தில் ஏறிக்கொள்கிறார். அடுத்த நிமிடங்களுக்கு நாங்கள் பல்வேறு சினிமாக்களில் வந்த தோட்டங்களை பார்த்தோம். பேருந்து சென்று கொண்டே இருக்க, வழிகாட்டி ஒன்னு ஒன்னாக விளக்கி கொண்டே வந்தார். சூர்ய வம்சத்தில் பாடல்களில் வரும் தோட்டங்களை பார்த்த மாத்திரத்திலேயே கண்டுகொள்ள முடிந்தது. அடுத்து கோயில்கள் அமைந்த இடத்தை பேருந்தில் சுற்றி வந்தோம். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், ஷாருக் தீபிகா படுகோனை தூக்கி கொண்டு செல்லும் கோவில், தமிழ் படங்களில் காட்டப்படும் கோவில்கள் என நெறைய இருந்தன. அடுத்த சுற்றிப்பார்த்த இடம், கும்பலாக வீடுகளும், அதை ஒட்டிய மார்க்கெட் போன்ற இடங்களும். இதை நாம் பாட்ஷா, மகதீரா, நெறைய தெலுங்கு படங்களில் பார்த்து இருப்போம். இவை எல்லாவற்றையும் பேருந்தில் இருந்தபடியே பார்த்துக்கொண்டு சென்றோம். வழிகாட்டியும் விளக்கிக்கொண்டு வந்தார்.
கடைசியாக பேருந்தில் இருந்து ஒரு இடத்தில் வெளிநாடுகளாக காட்டப்படும் தெருக்கள், மருத்துவமனைகள் செட்கள், ஏர்போர்ட் செட்கள் இருந்தன. அவற்றை நாங்கள் நடத்தவே சுற்றி பார்த்தோம். தேவையான அளவிற்கு போட்டோக்களை எடுத்து கொண்டோம். ஒவ்வொரு சேட்டும் போலி என்று சொல்லமுடியாத அளவிற்கு அவ்வளவு தத்துரூபமாக இருந்தது. இத்தனை நாள், வெளிநாடு வெளிநாடு என்று நாம் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று புரிந்தது. ஏர்போர்ட் சேட்டும் அப்படி தான். விமான டிக்கெட் வழங்குமிடம், காத்திருப்பு அறை, விமானம் போன்ற மாதிரிகள் இருந்தன. நீங்கள் விமானம் உள்ளே இருப்பது போல பலவித காட்சிகள் இங்கே எடுக்கலாம். விமான நிலைய செட்டை சுற்றி பார்த்த பிறகு மறுபடியும் வரிசையில் நின்றோம் அடுத்த இடத்திற்கு செல்ல பேருந்து ஏற.
காலை 4 மணிக்கு எழுந்து, முதல் ஆளாக நல்லமலா காடுகளுக்கு செல்லும் சோதனைச்சாவடியை கடக்குமாறு முந்தின நாளே நண்பன் நரேஷ் கூறி இருந்தான். அப்போது தான், நல்லமலா காடுகளில் இருக்கும் விலங்குகளை பார்க்க முடியுமென்றும், நேரம் ஆக ஆக, வண்டிகளின் சத்தத்தால் விலங்குகள் ஓடி ஒளிந்து விடுமென்றும் சொல்லி இருந்தான்.
ஆனால், நாங்கள் எழுந்ததோ ஆறு மணிக்கு. ஏழு மணிக்கு ஹோட்டலிருந்து வெளியேறி, மர்க்கபூரிலிருந்து தொரனலா நோக்கி செல்லும் சாலையைப் பிடித்தோம். தொரனலாவில் தான் நல்லமலா காடுகள் செல்லும் மலைப்பாதையின் முதல் சோதனைச்சாவடி உள்ளது.
சாலையின் இருபுறமும் செம்மண் நிலங்கள். நடுநடுவே சிறுசிறு கிராமங்கள் என்று சாலை சென்று கொண்டு இருந்தது.
முதல் நாளிலிருந்து, நாங்கள் மூவரும் பார்த்து வியந்த விசயம், தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் அண்ணாவின் சிலை இருக்கும், கூடவே கொஞ்ச தூரத்தொலைவில் எம்.ஜி.ஆர், அம்பேத்கர் சிலைகளும் இருக்கும். இப்பொழுது கலைஞர், ஜெயலலிதா சிலைகளும் வர ஆரம்பித்து விட்டன. ஆனால், ஆந்திர/தெலுங்கானா மாநிலங்களில் கிராமங்கள்/நகரங்கள் எங்கும் பெரும்பாலும் ஒரே ஒருவருடைய சிலை, அதும் மக்களை பார்த்து கை அசைக்கிற ஒரேவிதத் தோற்றத்தில் செய்யப்பட்ட ஆள் உயர சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதைப்பற்றி பேசிக்கொண்டும், ஆராய்ந்தும் கொண்டும் செல்லும்போது தான், அருண் அந்த சிலைகள் ஆந்திர அரசியல் தலைவர் YSR-யின் சிலைகள் என்று சொன்னான். காங்கிரஸ் ஆந்திராவில் எதிர்கட்சியாக இருந்த போது, காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான YSR மாநிலம் முழுவதும் நடைப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து, மக்களிடமிருந்தே குறைகளைப் பெற்று தேர்தல் வாக்குறுதிகளாக மாற்றி பெரும் வெற்றிக்கண்டு முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். 2009 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருக்கும்பொழுது, இப்பொழுது நாங்கள் போய்கொண்டு இருக்கும் நல்லமலா காடுகளில் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இறந்து போனார். சாலைகளில் உள்ள சிலைகள் அனைத்தும் அவர் நடைப்பயணம் செல்லும் போது, மக்களைப் பார்த்து கையசைத்த தோரணையைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ஆந்திர/தெலுங்கானா வளமையோடு, எங்களோடு இந்தப் பயணம் முழுவதும் பயணம் செய்தவர் YSR-ம் தான். வரலாற்றை படிக்க ஆர்வம் இல்லாதவர்கள் Amazon Prime-ல் , மம்முட்டி YSR-ஆக நடித்த YSR Yatra படத்தை பார்க்கவும். தமிழிலும் இருக்கிறது. பயணத்தை முடித்து நான் செய்த முதல் வேலை படத்தைப் பார்த்ததே.
7:30 மணிக்கு தொரனலா சோதனைச்சாவடியை 50 ரூபாய் கொடுத்து கடக்கும்பொழுதே சூரியன் பல்லைக்காட்டி கொண்டு தென்பட ஆரம்பித்துவிட்டார். சரி, விலங்குகள் எதுவும் தென்படாது, வா, ஶ்ரீசைலமாச்சும் போவோம் என்று மலை ஏற ஆரம்பித்தோம். சிறு மலை அளவுக்கே இருந்தது. நடுநடுவில் மலைக்கிராமங்களும், குரங்களும், எருமையுமே தென்பட்டன. ஆந்திர/தெலுங்கானா கிராமங்களில் இன்னொரு விசயத்தையும் கவனித்தோம். பெரும்பாலும் எருமை மாடுகளே இருந்தன. காளை மாடுகள் வயல்வெளிகளில் உழுது கொண்டு இருந்தன. மலை ரோடுகளில் சென்றுகொண்டு இருக்கோம் என்ற சொன்னால்தான் தெரியும் என்ற அளவுக்கு, பெரிய வளைவு, நெளிவு, பயமுறுத்தும் கொண்டை ஊசி வளைவு ன்னு ஏதும் இல்லாமல் தேமே என்று சென்று கொண்டு இருந்தது.
தொரனலாவிலிருந்து கிமீ தூரத்தில் ஶ்ரீசைலம் இருந்தது. ஶ்ரீசைலமும் ஒரு சிவன் கோவிலை மையமாக கொண்டு வணிகமயமாக்கப்பட்ட ஒரு சிறுநகரம். நகரின் ஆரம்பத்துலேயே ஶ்ரீசைலம் தேவஸ்தானம் உங்களை வரவேற்கிறது என்று ஒரு பெரிய நந்தியுடன் வரவேற்பு வளைவு வைக்கப்பட்டு இருந்தது. வளைவில் இருந்து பார்த்தால், ஶ்ரீசைலம் நகரத்தின் அழகும், ஶ்ரீசைலம் அணையும் அழகாக தெரியும்.
8 மணிக்கு ஶ்ரீசைலத்தை அடைந்து பொழுது கூட்டம் சேர ஆரம்பித்து இருந்தது. மாலை ஆறு மணிக்கு மேல், கீழே இறங்க அனுமதி இல்லாததால், இரவு தங்குவதற்க்கு நிறைய நிறைய தங்குமிடங்கள் உள்ளன. முந்தைய நாள் மாலை ஶ்ரீசைலம் வந்தவர்களும் சிவனைப் பார்த்து விட்டு கிளம்பும் வேகத்தில் இருந்தனர். காலஸஸ்தி போலவே இங்கும் செல்போனகளுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை. 10 ரூபாய் கொடுத்து பாதுகாப்பு அறைக்குள் வைக்க வேண்டும். வணிகமயமாக்கப்பட்ட நகரினுள் இருந்த கோவில் என்பதால், பலதரப்பட்ட வரிசைகள் இருந்தன. இலவச வரிசை, வேகமான வரிசை, மிகவும் வேகமான வரிசை, மிக மிக வேகமான வரிசை என்று பல வரிசைகள். வேகமான வரிசையில் போகலாம் என்று ஆளுக்கு 200 ரூபாய் கொடுத்து சென்றோம். வரிசையிலேயே ஒரு 1/2 கிமீ சுத்தி வரச்செய்து சிவன், பார்வதியைப் பாரத்தோம். பூஜை, சிறப்பு பூஜை, மிகச்சிறப்பு பூஜை என்று தனியே ஒரு கூட்டம். வேகமாக கோவிலுக்குள் சென்று, வெளியேறிய வெகு சிலருள் நாங்களும் இருப்போம். நான்கு கோபுரங்களும் அன்மையில் கட்டப்பட்டது போன்று அழகாகவும், மூல கோபுரம் தங்க தகட்டிலும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பின்ன, இவ்வளவு வரிசையும், வரிசைக்கேற்ற பணமும் இருந்தால், கோவிலையே தங்கத்தகட்டில் வடிவமைக்கலாம்.
வெளியே வந்ததும், கையளவு புளியோதரை அன்னதானத்தை வாங்கி கொண்டு, லட்டு வாங்கும் வளாகம் தென்பட்டதும், அங்கே போனோம். டெம்போலாம் வச்சு கடத்தி இருக்கோம், ரெண்டாயிரம் ரூபாயாச்சும் கொடுங்க டா ன்னு செந்தில், கவுண்டமணிகிட்ட கேக்குற மாதிரி, 200 ரூபாய் டிக்கெட் லாம் வாங்கி இருக்கோம், ஒரு லட்டாச்சும் இலவசமா கொடுங்க டா ன்னு கேட்டும், 1000 ரூபாய் டிக்கெட்டுக்கே நாங்க லட்டுத்தர மாட்டோம், நீ யார் டா கோமாளி மாதிரி சொல்லாமல் பார்க்க, பின்ன 20 ரூபாய் ஒரு லட்டு ன்னு பத்து வாங்கி போட்டு வந்தோம்.
காலணி, மொபைல் ன்னு வாங்கிட்டு வெளிய வரும்போது செமையா பசிக்க, ரோட்டோரம் இருந்த கடைலேயே சாப்பிடுவோம் ன்னு சாப்பிட்டோம். காலைச்சாப்பாட்டுக்கே பேல்பூரி வச்சு வியாபாரம் பாக்கிறத இப்பதான் பார்க்கிறேன்.
சாப்பிட்டு அடுத்த எங்க டா போலாம் ன்னு யோசிச்சுகிட்டு இருக்கும்போது, சங்கர் பக்கத்துல தான் ரோப்கார் இருக்கு, பாத்துட்டு போய்ரலாம் ன்னு சொல்லவும் அதுக்கு போனோம். கோவிலிருந்து ஒரு 500மீ தூரத்திலேயே ரோப்காரும், படகு சவாரியும் இருந்துச்சு. இந்த ரோப்கார், படகு சவாரிலாம், ஒரு பெரிய ஹோட்டலின் கீழ இருந்ததால், கார் நிறுத்த, எடுக்க ன்னு ஒரு பெரிய கூட்டம் எப்போதும் இருந்துகிட்டே இருந்தது. நாங்கள் ரோப்கார்க்கு மட்டும் 60 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு உள்ள போகும்போதே 30 நிமிடம் காத்திருப்பு நேரம் ன்னு போட்டு இருந்தது. காத்திருந்து ரோப்காரில் போனோம். ஶ்ரீசைலம் மேடான பகுதி என்பதால், அங்கு இருந்து கீழே இருக்கும் ஶ்ரீசைலம் அணைக்கு ரோப்கார் சவாரி அமைத்து இருக்கின்றனர். ரோப்கார் இல்லாமலும், சிறிது தூரத்தில் படி கீழ்நோக்கி செல்கிறது. என்ன ஒரு 500 படி மட்டும் தான். படிக்கட்டில் இறங்கி வரும் வழிகளில், பாதாளகங்கை அம்மனுக்கு என்று சொல்லி பலவித பூஜைகள் நடந்துகொண்டு இருந்தன.
கீழே போனதும் தான், படகு சவாரிக்கும் சேரத்து டிக்கெட் எடுத்து இருக்கலாம் என்று தோன்றியது. ஏன் என்றால், கீழே அது மட்டும் தான் ஒரே பொழுதுபோக்கு நிகழ்வு. கீழேயும் ஒரு டிக்கெட் எடுக்குமிடம் இருக்கு ன்னு கேள்விபட்டதும், ஆளுக்கு 60 ரூபாய் டிக்கெட் எடுத்துகிட்டு உடனே கிளம்பிட்டோம். ஒரு 50 பேர் அமர்வதற்கான படகில்(படகா? கப்பலா? எதோ ஒன்னு) கடைசி வரிசையில் அமர்ந்துவிட்டோம்.
படகில் ஒரு அரை மணி நேரம் அணையின் மதகு பகுதிக்கு எதிர்பகுதியில் சவாரி செய்தோம். படகு ஓட்டுனர் சொல்லும்போது தான் தெரிந்தது, ஒரு நாளுக்கான சுற்றிப்பார்ப்பதற்க்கு இடங்கள் உள்ளன என்று. காலை 6 மணிக்கே குகைகளை பார்க்க செல்லும் 4 மணி நேர படகு சவாரியும் இருக்கிறது போல. படி வழியே கீழே இறங்கி வரும் வழியில், வேகமான படகு, பரிசல் படகுகள் என பல சவாரிகள் உள்ளன.
மறுபடியும் ரோப்கார் வழியே மேலே வந்து, ஶ்ரீசைலம் அணையின் மதகு பகுதிக்கு சென்று தண்ணீர் வெளியேறும் அழகைப் பார்க்கலாம் என்று கேட்டால், அது ஹைதராபாத் போகும் வழிலேயே வரும் என்று சொல்ல, அடுத்த பயணம் ஹைதராபாத்தை நோக்கி. ஶ்ரீசைலமிலிருந்து வெளியே வந்ததும், உடனேயே இடது பக்கத்தில் ஹைதராபாத்துக்கு மலைகளினூடே வழிச்செல்கிறது.
ஶ்ரீசைலம் ஒட்டிய சிறு கிராமங்கள் ஊடே சென்ற வழியானது, கடைசியாக நாங்கள் மிகவும் எதிர்பார்த்த அணையின் முழு வடிவத்தையும் காட்டிடும் பகுதிக்கு வந்தோம். அழகு என்றால் அழகு, கொள்ளை அழகு. 12 மதகுகள் கொண்ட அணை, 10 மதகுகள் வழியே 4 லட்சத்திற்க்கும் அதிகமான கனஅடி தண்ணீரை வெளியேற்றியது. மேட்டூரில் வெளியேற்றிய அதிகபட்ச தண்ணீரின் அளவே 2 லட்சத்து சொச்சம் தான். அதுவே கடல் போல காட்சியளித்தது என்றால், நினைத்துக்கொள்ளுங்கள் இது எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்று. மலையிலிருந்து அணையின் ஊடாக சென்று, அணையிலிருந்து வரும் தண்ணீரை பாலம் வழியாக கடந்து, அணையின் அந்த பகுதியின் ஊடாக சென்று, அடுத்த மலையை ஏற வேண்டும். அணையிலிருந்து கீழே சென்ற தண்ணீர் பட்ட வேகத்தில் 100 அடிக்கும் மேலே வந்து அந்த சாலைகளில் சென்ற அனைத்து வாகனங்களையும் மழைப்போல் நனைத்தது. முடிந்த அளவுக்கு எங்களால் எங்கெல்லாம் நிறுத்த முடியுமோ, அங்கெல்லாம் நிறுத்தி போட்டோ எடுத்தோம்.
இந்த ஆக்ரோச தண்ணீரிலும் உள்ளூர் மக்கள், மீன் பிடித்துக்கொண்டும், அதை சமைத்தும், விற்றும் கொண்டு இருந்தனர். அணையின் அடுத்த பகுதிக்கு சென்று, அங்கும் சிலபல போட்டோக்கள் எடுத்துவிட்டு, அடுத்த மலைக்கு ஏறத்தொடங்கினோம். நடுவே இரண்டு வனத்துறை சோதனைச்சாவடி வேறு. இரண்டிலும் தலா 50 ரூபாய் வாங்கிக்கொண்டார்கள்.
இந்த நல்லமலா காடுகளில் 2018-ஆம் ஆண்டு கணக்கெடுக்கின்படி 68 புலிகள் உள்ளனவாம்.
நடுநடுவே வியூபாய்ண்ட் என நிறைய இடங்கள் வந்தன. நாங்கள் ஏற்கனவே நிறைய வியூகளைப்பார்த்து விட்டால், அதையெல்லாம் பார்க்காமல் ஹைதராபாத்தை நோக்கி ஓட்டினோம். மேலே வரும் வாகனங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில், ஶ்ரீசைலம் போகும் கார்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகமாக இருந்தது. ஹைதராபாத்தை நோக்கி சென்ற வெகுசில கார்களுள் எங்களுடைய காரும் ஒன்று. முன்னரே சொன்ன மாதிரி வளைவு நெளிவு பெரிதாக இல்லாவிட்டாலும், காடுகளின் ஊடே சாலைகள் சீராக சென்று கொண்டு இருந்தது.
இந்த நல்லமலா காடுகளிருந்து, ஹைதராபாத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 765-ல் பயணம் செய்து கொண்டு இருந்தோம். ஸ்ரீசைலமை நோக்கி செல்லும் எதிர் சாலையில் மட்டுமே போக்குவரத்துக்கு இருந்தது. நடுநடுவே இந்த வேகத்தடைகளும் வந்து இம்சை பண்ணியது. சாலையின் இருபுறமும் பச்சை பசேலென இருக்கும் நிலங்களை பார்த்துக்கொன்டே, சிறுசிறு கிராமங்களையும், நகரங்களையும் தாண்டி 765 சென்று கொண்டு இருந்தது.
தண்டி என்ற ஊர் வந்ததும், சாப்பாடுக்கு இடம் தேடிக்கொண்டு இருந்த போது, பெரிய நீர்த்தேக்கத்தையும், அதை பார்க்க மக்கள் பெரும் கூட்டமாய் கூடி இருந்ததை பார்த்ததும் வண்டியை ஓரம் கட்டினோம். அதன் பெயரும் தண்டி நீர்த்தேக்கம் தான். நீர்த்தேக்கம் பெரிய கடல் போல இருந்தது. தண்ணீர் வந்து கொன்டே இருந்ததால், நீர் வழிந்து ஓடியது, பார்க்கவே அற்புதமாக இருந்தது. நீர்த்தேக்கத்தை மேலே ஏறி பார்ப்பதற்கும் படிக்கட்டுகள் இருந்தது. கொஞ்ச நேரம், நீர்த்தேக்கத்தில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
அடுத்து சாப்பிட கடையைத் தேடிக்கொன்டே வந்ததில், VHR பேமிலி உணவகத்தை பார்த்தோம். பிரியாணி, சாப்பாடு இருக்கும்ன்னு தான், தாபா மாதிரியான உணவகத்தை விட்டுவிட்டு பேமிலி உணவகத்திற்கு வந்தோம். கடைசியில் இந்த உணவகத்திலும், தாபா மாதிரியான உணவுகளே இருந்தது. இல்லை இல்லை அந்த சர்வர் பிரியாணி, சாப்பாடு வெச்சுக்கிட்டே இல்லைன்னு சொல்லி, நான், ரொட்டி, கறி ன்னு தலைல கட்டிட்டான். நான், ரொட்டி ன்னு வாங்குனாதானே எக்ஸ்ட்ராவா ஏதாச்சும் வாங்குவான் ன்னு சொல்லி மத்த ஏதும் இல்லை ன்னு சொல்லிட்டான். தெலுகுவோடு, எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்து இருந்தது. நாங்க தமிழ், தெலுகு, கன்னடா, ஹிந்தி ன்னு எங்களுக்கு தெரிந்த எல்லா வார்த்தைகளையும் ஒரு கலைவையா போட்டு சர்வரோடு பேசிக்கொண்டு இருந்தோம்.
சாப்பிட்டுவிட்டு, ஹைதராபாத்தை நோக்கி மறுபடியும் பயணத்தை தொடர்ந்தோம். ஹைதராபாத்துக்கு 50 கி.மீ இருக்கும் போதே, ஹைதராபாத்திற்கான ட்ராபிக்கை உணர்ந்தோம். ஹைதராபாத்தை தொட்டதும், ஜவர்ஹலால் நேரு அவுட்டர் ரிங் சாலையை அடைந்தோம். 8 வழிச்சாலை. முடிந்த அளவுக்கு வேகமாய் சென்றோம். நாங்கள் புக் செய்து இருந்த ஹோட்டல், பஞ்சாரா ஹில்ஸிலிருந்து, பேகும்பேட்டில் இருந்தது. ஹைதராபாத்தில் ட்ராபிக்கை சமாளித்துகொன்டே பேகும்பேட்டை அடைந்தோம். ஹோட்டலை அடைந்ததும் தான் தெரிந்தது, நாங்கள் ஹைதராபாத் வரும் வழியில் புக் செய்தது, அவங்களுக்கு வரவே இல்லை என்று. அப்புறம் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு, வேற ஹோட்டல் மாற்றி வாங்கி, அதே பேகும்பேட்டில் உள்ள இன்னொரு Oyo ஹோட்டலிருக்கு சென்றோம்.
ஹோட்டலிருந்து அடுத்த என்ன செய்யலாம் ன்னு யோசித்து கொண்டு இருக்கும் போதே, பக்கத்தில் ஹுசைன் சாகர் ஏரி, சாப்பிடும் இடங்கள் ன்னு கொஞ்சம் சுத்தி பாத்திட்டு வருவோம் ன்னு கிளம்பினோம். ஹுசைன் சாகர் ஏரிக்கு செல்லும் போது, ஏரியே விழாக்கோலம் கண்டு இருந்தது. நேரத்தைப்போக்குவதற்கு அவ்வளவு நிகழ்வுகள் அந்த ஏரியை சுற்றி நடந்துக்கொண்டு இருந்தது. படகு சவாரிக்கு செல்லலாம் னுக்கு சொல்லி, ஏரிக்கு போக உள்நுழைவு டிக்கெட் வாங்கி கொண்டு, படகு சவாரிக்கு போனால், அவ்வளவு கூட்டம். ஒரே நேரத்தில் ஒரு 1000 பேர் விதவித படகுகளில் சவாரி செய்துக்கொண்டு இருந்தனர். நாங்களும் கூட்டம் குறைவாய் இருந்த, வேகப்படகு சவாரிக்கு 3 பேருக்கு 350 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துவிட்டு எங்கள் முறை வரும்வரை வரிசையில் காத்து இருந்தோம். அந்த இரவிலும், அவ்வளவு ஆர்வம் மக்களிடையே படகு சவாரிக்கு.
எங்கள் முறை வந்ததும், படகில் ஏறினோம். ஒரு 5 நிமிட பயணம் தான். வேகமாய் போய், அந்த புத்தர் சிலையை சுற்றி வரும். அவ்வளவு தான். இருந்தாலும் அது ஒரு அனுபவம் தான். இரவில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக, வண்ண ஒளியில் மின்னிய புத்தர் சிலையும், ஹைதராபாத்தையும் பார்பதற்க்கே அவ்வளவு அழகாக இருந்தது. அதுவும் தண்ணீரில் இருந்து பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருந்தது.
ஏரியின் சுற்றி நடந்துகொண்டு இருந்த, வேறு நிகழ்வுகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அடுத்து சாப்பிடும் இடத்திற்கு நகர்ந்தோம். ஹைதராபாத்தில் பக்லவா சாப்பிட வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. அதற்காக ஹைதராபாத்தில் ரொம்ப பாப்புலரான, Gourmet பக்லவா கடைக்கு சென்றோம்.
துருக்கியில் உருவானதாக சொல்லப்படும் பக்லவா ஒரு இனிப்பு வகை. ஹைதராபாத், சென்னை போன்ற பெரு நகரங்களில், இதை செய்து விற்பதற்காக சில நல்ல கடைகள் உள்ளன. அதில் ஒன்னு தான் இந்த Gourmet பக்லவா. முடிஞ்ச அளவுக்கு சாப்பிட்டு, தேவையான அளவுக்கு அவரவர் வீடுகளுக்கு வாங்கி கொண்டோம். இந்த பக்லவா கடைகள், ஆன்லைனில் ஆர்டர் செய்தால், இந்தியா முழுவதும் அனுப்பியும் வைக்கின்றன. சாப்பிட்டு தான் பாருங்களேன்.
பக்லவாவை சாப்பிட்ட பிறகு, அடுத்த போன இடம் தான் சார்மினார். மணி 9 ஆகி விட்டது. இதற்கு அப்புறமும் சார்மினார் போக வேண்டுமா, என்ன இருக்கிறது என்று அருணும், சங்கரும் கேட்டுக்கொன்டே வந்தனர். சார்மினார் போவது, சார்மினார்க்கு அருகில் இருக்கும் நிம்ரா சிற்றுண்டி கடையில் டீ குடிப்பதற்கும், அங்கே செய்யப்படும் 25க்கும் அதிகமான பிஸ்கட் வகைகளை சாப்பிடுவதற்கு மட்டுமே. ஹைதராபாத்தில் இருக்கும் மிக பாப்புலரான ஒரு கடை.
நாங்கள் சார்மினாரை நெருங்கும் போதே, மணி 10ஐ காட்டியது. எங்கள் பயணத்தின் மிக மோசமான ஒரு மணி நேரம் பயணத்தை சார்மினாரை நோக்கி செல்லும் சாலைகளில் செலவிட்டு இருப்போம். அவ்வளவு நெருக்கடி. புள்ளிங்கோ என்னங்க வண்டி ஓட்டுறது, அங்க வந்து பாருங்க, அவன் அவன் வண்டி ஓட்டுறத. எப்போ உள்ள வருவான், எப்போ வந்து இடிப்பான் ன்னு தெரியாத அளவுக்கு ஓட்டிட்டு இருந்தாங்க. பொண்ணுங்க, பசங்க, ஆட்டோ டிரைவர் ன்னு எல்லோரும் இப்படி தான் ஓட்டிட்டு இருந்தாங்க. எப்படியோ சமாளிச்சு ஓட்டிட்டு போய் நிம்ரா கடையில் டீ குடிக்கும் போது மணி 10:30. சில பிஸ்கட் வகைகளை சாப்பிட்டுவிட்டு, டீ குடித்து விட்டு, ஒரு ஒஸ்மானியா பிஸ்கட் டப்பாவை பார்சல் வாங்கிக்கொண்டு ரூம் க்கு வந்தோம்.
ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டு இருந்த ஒரு பயணம். சென்னையை தாண்டிய ஆந்திராவின் பயணம், பெங்களூரை தாண்டிய ஆந்திராவின் பயணம் என்பது ரொம்ப நாள் யோசனை. தென்னிந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை ஓரளவு சுற்றி முடித்த எங்களுக்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானா எப்போதும் திட்டமிட்டு தள்ளிப்போகிற ஒன்றாககவே இருந்தது. அதனால் இந்த முறை ஆந்திர-தெலுங்கானா மண்ணை தொட்டுபார்த்திடுவோம் என்ற ஒரு நம்பிக்கையோடு கிளம்பினோம். சுதந்திர தின விடுமுறையோடு கூடுதலாக ஒரு நாள் விடுமுறையை வெள்ளிக்கிழமை எடுத்துக்கொண்டு பயணிப்போம் என்ற முடிவுக்கு வந்தோம்.
எங்களின் பயணத்திட்டம் ரொம்ப எளிது. எது பார்ப்பது, எங்கே தங்குவது என்ற எந்தவொரு திட்டமே இல்லாமல் பயணிப்பதுதான் எங்களின் திட்டம். நான், அருண் மற்றும் சங்கர்கணேஷ் மூவரும் தான் பயணிக்க போகிறோம்.
நான், அருண் கடலூரிலிருந்து கிளம்பி, சென்னை சென்ட்ரலில் பொள்ளாச்சியில் இருந்து வரும் சங்கர்கணேஷை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு மேலே செல்வது தான் ஆரம்ப திட்டம். பயணம் மேற்கொள்ளும் நாட்களோடு, எங்கிருந்து தொடங்குவது என்பது மட்டுமே நாங்கள் போட்ட சில திட்டங்கள்.
கடலூரில் இருந்து சென்னை செல்லும் போது, தனியாக செல்லாமல் BlaBla(Car Pooling App) மூலமாக யாரையாச்சும் ஏற்றி சென்று சென்னையில் விட்டால் பாதிக்கு பாதி டீசல் செலவு கைக்கு வந்து விடும் என்று முந்தின நாள் மாலையில் சென்னை செல்ல பதிவு போட்டு, ஒரு பெண் தான் குடும்பத்தாருடன் சென்னை போக வரேன்னு சொல்லி, கடைசி நிமிடத்தில் வராமல் போக, நானும் அருணும் மட்டும் சென்னைக்கு அன்று காலை 4 மணிக்கு கடலூரிலிருந்து கிளம்பினோம்.
எங்களுக்கு முன்பாகவே 6:30 மணிக்கு சங்கர்கணேஷ் சென்னை சென்ட்ரல் வந்துவிட, நாங்கள் 7:30 மணியளவில் அவரை சென்ட்ரலிலிருந்து ஏற்றிக்கொண்டு பயணித்தோம்.
சென்னை சென்ட்ரலை விட்டு வெளியேறிய சிறிது தூரத்தில், ஆசிய மற்றும் இந்தியாவின் ஒரு முக்கிய நெடுஞ்சாலையான NH-16(AH-45) நெடுஞ்சாலையை அடைந்தோம். இந்த நெடுஞ்சாலை முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் என துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு முழுவதுமாக பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நெடுஞ்சாலை நான்கு முக்கியப் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கிறது. நாங்கள் சென்று கொண்டு இருந்தது, சென்னை - கொல்கத்தாவை இணைக்கும் தங்க நாற்கர சாலையில்.
காலை உணவு:
இந்த நெடுஞ்சாலையில் சென்னைக்கு வெளியே ஆந்திராவிற்கு முன்பாக நெறைய உணவகங்கள் இருந்தாலும், இரண்டு முக்கிய உணவகங்கள் A2B மற்றும் சாய் சரவணா. A2B உணவகம் சோழவரத்தில் உள்ளது. A2B போவதற்கான வளைவை மறந்ததால், அடுத்த உணவகத்தை தேடி சென்று, பெரவள்ளூர் சாய் சரவணாவில் நிறுத்தினோம். காலை உணவு நன்றாகவே இருந்தது.
சாய் சரவணாவில் சாப்பிடும் போது, பக்கத்தில் பார்ப்பதற்கு என்னவெல்லாம் இருக்கிறது என்று பழைய Blog, youtube பதிவுகளில் தேடும் போது தான், கைலாச கோனா நீர்வீழ்ச்சி நாங்க சாப்பிடும் சாய் சரவணாவில் இருந்து 67km தூரத்தில் இருந்து தெரிய வந்தது.
சரி, நீர்வீழ்ச்சியில் ஒரு குளியலை போட்டுவிட்டு பயணத்தை சிறப்பாக ஆரம்பிப்போம் என்று கைலாச கோனாவிற்கு கிளம்பினோம். கைலாச கோனாவிற்காக, தங்க நாற்கர சாலையை விட்டுவிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் வழிய சித்தூர் செல்லும் மற்றோரு தேசிய நெடுஞ்சாலையான 716A அடைந்தோம். இந்த 716A தேசிய நெடுஞ்சாலை தமிழ்நாடு எல்லைக்கோடு மாவட்டமான திருவள்ளூரில் ஆரம்பித்து ஆந்திரா மாநிலம், புத்தூர் வரைக்கும் செல்கிறது.
பெரியபாளையம்:
சாய் சரவணாவில் இருந்து பெரியபாளையம் 15km தொலைவு மட்டுமே. பெரியபாளையம் என்றதும், அருண் சிறுவயதில் பார்த்த பெரியபாளையத்து அம்மன் படங்களை நினைவு படுத்தினார். வேப்பிலையை ஆடையாக அணிந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் பழக்கம் இங்கு உள்ளது. அந்த படத்திலும் இந்த வேப்பிலை ஆடை நேர்த்திக்கடனை நாம் பார்த்திருப்போம். வழிநெடுகிலும் அம்மனின் பக்தகோடிகள் மஞ்சள் சேலையில் நடந்து செல்வதை காண முடிந்தது. பெரியபாளையத்து பவானி அம்மன் கோவில் பெரியபாளையம் - சித்தூர் முக்கிய சாலையிலே இருந்தது. ஆடி மாசத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. பக்தர்கள் கூட்டம் வேற அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதனால் பெரியபாளையத்து அம்மனை பிறகு சந்திப்பதாக முடிவெடுத்தோம்.
இந்த பெரியபாளையம்-சித்தூர் சாலையின் வழியாகவே திருப்பதிக்கும் போகலாம். சிறிது நேரத்திற்கெல்லாம் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைக்கோடு வந்தது. ஆந்திராவின் வளமையெல்லாம் பார்த்துக்கொண்டு பயணம் தொடர்ந்தது. இரண்டு மாநிலங்களை இணைக்கும் தேசிய சாலை என்பதாலும், திருப்பதி போவதற்கு இதுவும் ஒரு வழி என்பதாலும், இந்த தேசிய சாலை நன்றாக இருந்தது, ஆனால் வேகத்தடைகளும் அதிகம். ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு, கைலாச கோனா நீர்விழிச்சி செல்லும் வளைவை அடைந்தோம்.
கைலாச கோனா நீர்வீழ்ச்சி:
கைலாச கோனா நீர்வீழ்ச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3km தொலைவு செல்ல வேண்டும். நீர்விழிச்சி க்கு முன்பாக பல சாலை அடையாள பலகைகள் பாத்தாலும், அதன் வளைவு வரும் போது அடையாள பலகை இருக்காது. கூகுளை நம்புவதே நன்று. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு வளைந்ததும், ஆந்திரா காவல்துறை சோதனை சாவடி நம்மை வரவேற்றது. வண்டியில் சரக்கு இருக்கிறதா என்ற சில சோதனைகளுக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டோம். நீர்விழிச்சி வண்டி நிறுத்துமிடத்தில் பெரிய கூட்டம் இல்லை. ஆள் ஒன்றுக்கு 30 ரூபாய் நுழைவு சீட்டும், கார் நிறுத்துவதற்கு 50 ரூபாயும் செலுத்தி உள்ளே சென்றோம்.
கைலாச கோனா நீர்வீழ்ச்சி எல்லா பருவநிலைகளிலும் நீர் கொட்டும் ஓர் நீர்வீழ்ச்சி. பெரிய அளவில் சடசட என்று நீர் கொட்டாவிட்டாலும், ஒரே சமயத்தில் 4-5 பேர் வரை நின்று குளிக்கும் அளவிற்கு நீர் 40 அடி உயரத்தில் இருந்து கொட்டிக்கொன்டே இருந்தது. நாங்கள் சென்ற போது பெரிய அளவில் கூட்டம் இல்லாததால் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் நீர்வீழ்ச்சியில் குளித்தோம். நீர்வீழ்ச்சியில் அருகிலேயே சிவன்-பார்வதி கோவிலும், பெண்கள் உடைமாற்றும் அறை ஒன்றும் உள்ளது.
நீர்வீழ்ச்சியில் குளித்த புத்துணர்வோடு, அடுத்த இடம் தேடியதில், திருப்பதிக்கு அருகே குடிமல்லம் என்ற ஊரில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் பாதுகாக்கப்படும் ஒரு கோவிலை பற்றிய தகவலை அறிந்து அதற்கு பயணத்தை தொடர்ந்தோம்.
கோனா நீர்வீழ்ச்சியிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் 12 கிமீ தொலைவில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை அடைந்தோம். அதே நெடுஞ்சாலையில் 16 கிமீ தொலைவு சென்று, குடிமல்லம் செல்லும் குறுகிய கிராமங்கள் வாயிலாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தோம்.
குடிமல்லம் சிவன் கோவில்:
திருப்பதிக்கு அருகில் இருக்கும் கோவில் இது. மாநில நெடுஞ்சாலைகள் வழியே வளைந்து வளைந்து 6 கிமீகள் சென்றால் வரும் இந்த கோவில் சித்தூர் மாவட்டத்தில் எர்பேடு மண்டலத்தில் உள்ளது. இந்த கோவிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட கிராமங்களுக்கிடையே கூகுள் மேப் உதவியுடன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். கார் நிறுத்துவதற்க்கு 50 ரூபாய் வசூலிக்கின்றனர்.
இந்த கோவிலின் சிறப்பம்சே சிவலிங்கம் ஆணுறுப்பு வடிவில் இருப்பதே. அருணுக்கு ஏற்கனவே இந்த கோவிலைப் பற்றிய தகவல்கள் தெரிந்து இருந்ததால், இலவச வழிகாட்டியாக வந்தார்.
வாசலில் நுழைந்ததுமே, அம்மன், கால பைரவர், முருகர் சிலைகளின் சிறுசிறு மண்டபங்கள் வரவேற்றன. இந்த கோவில் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வெகு சில சிவன் கோவிலில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்களுக்கெல்லாம் முன்னோடி ன்னு கூடச் சொல்லலாம். அதற்கு ஏற்ற மாதிரியே கோவிலின் கோபுரத்தில் விமானம் போன்ற அமைப்பு லாம் இங்கு இல்லை. மேலும், கோவிலின் மூல சன்னதி, மற்ற கோவில்கள் போல் இல்லாமல், நின்று வணங்கும் மட்டத்தில் இருந்து 5 அடிக்கு மேல் கீழே இருந்தது. முன்னதே சொன்ன மாதிரி, சிவலிங்கம் ஆணுறுப்பு வடிவில் இருந்தது. நாங்கள் சென்றது ஆடி மாதம் கடைசி வெள்ளி என்பதால், சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவலிங்கத்தை போட்டோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும், குடிமல்லம் சிவலிங்கம் தொடர்பான பல போட்டோக்கள், விவரங்கள் இணையத்தில் உள்ளன.
கருவறையின் வடிவமும், மற்ற கோவில்களில் உள்ளது போல் சதுர/செவ்வக வடிவில் இல்லாமல், வட்ட வடிவில் இருந்தது. கோபுரங்களில் வரிசைகளில் செதுக்கப்படும் சிற்பங்களும், மற்ற கோவில்களை காட்டிலும் வித்தியாசமாக இருப்பதாக அருண் சொல்லிக்கொண்டு வந்தார். இந்த கோவிலில் இருந்து சிறு தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுவதாகவும், அதன் பொருட்டு பல கிளைக்கதைகளும் இந்த கோவிலைப்பற்றி சொல்லப்படுகின்றன.
இந்தியாவில் அகழ்வாய்வு துறையினரால் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான, வித்தியாசமான ஒரு சிவன் கோவிலை பாரத்த அனுபவத்தோடு, அடுத்த பக்கத்தில் இருக்கும் இடங்களை தேடும் போது காலஸஸ்தி 46 கிமீ என்று காட்டவே, காலஸ்ஸ்தியை நோக்கி பயணமானோம்.
சுவர்ணமுகி ஆறு வறண்டு இருந்தாலும், நாங்கள் காலஸ்ஸ்தியை நோக்கி சென்ற மாநில நெடுஞ்சாலைகள் இருபுறமும் இருந்த வயல்வெளிகள் பச்சை பசேலென்று இருந்தன. 300 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைப்பதாகவும், முக்கால்வாசி நிலங்கள் போர் தண்ணீரால் விளைந்து கொண்டு இருக்கின்றன என்று அறிந்து கொண்டோம்.
காலஸஸ்தி:
காலஸஸ்தியை அடைந்த போது, மணி ஒன்றை காட்டியது. காலஸஸ்தியில் பார்ப்பதற்க்கு பெரிய சிவன் கோவில் மட்டுமே இருக்கிறது. சரி, கோவிலை பார்த்துவிட்டு சாப்பிடலாம் என்று கோவிலுக்கு சென்றோம். செல்போன்கள் கோவிலுக்கு தடைச்செய்யப்ட்டு உள்ளதால், வெளியவே அதற்கான பாதுகாப்பு அறையில் பணம் செலுத்திவிட்டு செல்போன்களை கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினாலோ என்னவோ, பெரியதாக சோதனையும் இல்லை. பெரும்பாலானோர் தங்கள் மொபைல்களை கோவில் உள்ளேயும் வைத்து இருந்தனர்.
முன்னரே சொன்னது போல், கோவிலில் கூட்டம் இல்லை. இலவச தரிசனத்தில் சென்றோம். தமிழ்நாடு எல்லை மாவட்டம் என்பதால், இந்த கோவிலிலும் அறிவிப்புகள் தெலுங்கிலும் சேர்த்து தமிழிலும் இருந்தன. வெள்ளிக்கிழமை என்பதால் எல்லா உப தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பாதள கணபதி, சிவன், பார்வதி, உப தெய்வங்கள் என்று பார்த்திவிட்டு அன்னதானத்திற்க்கு சென்றால் பெரிய காத்திருப்பு வரிசை. சரி, வெளியே சாப்பிடுவோம் என்று கோவிலை விட்டு வெளியே வந்து காரில் நெல்லூரை நோக்கி கிளம்பினோம்.
காலஸஸ்திலிருந்து சென்னை-கொல்கத்தா தங்க நாற்கர சாலையை அடையும் மாநில நெடுஞ்சாலை கொஞ்சம் மோசமானதாகவே இருந்தது. சாப்பிடும் நேரம் தாண்டியதால், அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்தது. இந்த 4 நாட்கள் பயணத்தில், மதிய நேரத்தில் ஒரு சாப்பாடு சாப்பிடுவதற்கு ஆந்திரா/தெலங்கானா நெடுஞ்சாலையில் ஒரு சரியான உணவகத்தை மட்டும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் பெரும்பாலும் தாபா ஸ்டைல் உணவகமாகவே இருந்தது. நான், ரொட்டி, நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் போன்ற உணவுகளே தாபாவில் கிடைத்தது.
நங்கள் சாப்பிட்ட க்ரீன் சில்லீஸ் தாபாவும் நன்றாகவே இருந்தது. தாபாவிலிருந்து சிறிது தூரத்திலேயே தங்க நாற்கர சாலை தென்பட்டது. குண்டூர் போகலாமா, இல்லை நல்லமலா காடுகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று தங்கலாமா என்று யோசித்து கொன்டே இருக்கும்போது, பழைய அலுவலக நண்பன் நரேஷ் நியாபகத்துக்கு வந்தான். குண்டூரை பிறப்பிடமாக கொண்ட அவன், நல்லமலா காடுகள், ஸ்ரீசைலம் போக, குண்டூர் வராமல், நேராக மார்க்கப்பூர் என்ற பகுதியில் சென்று தங்குமாறும், அதுவே ஸ்ரீசைலம் போக நெருங்கிய பகுதி என்றும் சொல்ல, மார்க்கப்பூர் நோக்கி பயணித்தோம்.
ஸ்ரீசைலம் நல்லமலா காடுகள் பகுதியில் இருந்தது. நல்லமலா காடுகள் சாலையில் செல்ல காலை 4 மணி முதல், மாலை 6 மணி வரையே அனுமதி வழங்கப்படும். மணி இரவு 7 தாண்டி சென்று கொண்டு இருந்ததால், நரேஷ் சொன்னபடியே, மார்க்கபூரில் தங்கி, அடுத்த நாள் காலை ஸ்ரீசைலமுக்கு கிளம்புவதாக முடிவு.
மார்க்கபூரை அடைந்த போது, மணி இரவு 8:30 ஐ காட்டியது. நரேஷ் மார்க்கபூரில் தங்குவதற்கு நல்ல தங்குமிடம், உணவகம் என அனைத்தையும் முன்னரே கூறி இருந்தான். அவன் சொன்னபடியே மார்க்கபூரில் செவன் ஹில்ஸ் தங்குமிடத்தில் காலியாக இருந்த ஒரே ஒரு ரூமை எங்களுக்காக பதிவு பண்ணி, அன்றைய நாளின் பயணத்தை முடித்தோம்.
முதல் நாளின் பயணத்தொலைவு : 660km
முதல் நாளில் நாங்க பயணம் செய்த வழியின் கூகிள் map:
என்னடா இவன், வாரம் ஒரு புத்தக விமர்சனம் போடுறானே, இவ்வளவு வெட்டியா இருக்கானா, வேலைக்கு ஏதாச்சும் போறான்னா? புத்தகம் படிச்சிட்டு தானே போடுறான் இல்ல சும்மா மேலோட்டமா படிச்சிட்டு போடுறானா ன்னு கேள்வி கணைகள் நாலா பக்கமும் இருந்து வருகிறதை எனக்கும் தெரிகிறது. 2021 வருடத்தில் ஒரு மாதத்திற்கு 3 புத்தங்கங்கள் கண்டிப்பாக படிச்சியாக வேண்டும் என்ற குறிக்கோள் வைத்து இருந்தேன்(ஒண்ணுமில்ல, போன சில வருடங்களில் வாங்கி படிக்காம வைத்து இருக்கிறதே 30 புத்தகங்களை தாண்டுகிறது, அதான்). இந்த மாதம் கொஞ்சம் அதிகமாகிருச்சு, மன்னிச்சு. வாங்க விமர்சனத்திற்கு போகலாம்.
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம்
விலை: 200 ரூபாய்
பக்கங்கள்: 221
புத்தகம் அறிமுகமானது எப்படி:
எஸ்.ராவின் எழுத்துக்களுக்கு நான் ஒரு மிகப்பெரிய விசிறி. எந்தவொரு பயண திட்டங்களும் இல்லாமல், எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல், வழியில் சந்திக்கும் மனிதர்களின் கூடவே பயணித்து, அவர்களுடன் தங்கி, அவர்தம் வாழ்க்கை சூழ்நிலையை பதிவு செய்யும் அவரின் பயணக்குறிப்புகள் படிக்கவும் சரி, அனுபவிக்கவும் சரி அவ்வளவு அற்புதமாக இருக்கும். பயண கதைகளை அவர் பதிவு செய்யும் போது, உங்களையும் கூடவே அவருடன் கூப்பிட்டு செல்வார். நானும் ஒவ்வொரு முறை பயணம் திட்டமிடும் போது, எஸ்.ராவை போலவே திட்டமில்லாத பயணங்கள் செய்ய வேண்டும், புது அனுபவங்கள் பெற வேண்டும் என்று நினைப்பேன். நம்முடைய அவசர வாழ்க்கையில், அவரை போல் நிதானமாக பயணித்து பதிவு செய்யும் பயணங்கள் எப்போதும் ஒரு கனவே. அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர் ஒரு காதல் கதை எழுதியுள்ளார் என தெரிந்ததுமே, அந்த புத்தகத்தை எடுத்து விட்டேன். காதல் ன்னா, விண்ணை மட்டுமென்ன, இந்த பால்வழி மண்டலத்தையே தாண்டி வரலாம்.
விமர்சனம்:
இந்த காதல் கதையும் ஒரு பயணத்தில் ஆரம்பிக்கிறது. கதையின் நாயகன் குளிரான பனிக்காலத்தில், கர்நாடக மாநிலம் சித்தாபுரா என்ற ஒரு ஊருக்கு பேருந்தில் செல்வதாக ஆரம்பிக்கிறது. கதைக்களமானது சித்தாபுராவிற்கும், கோவில்பட்டி கரிசல் காட்டிற்கும் மாறி மாறி பயணிக்கிறது. சுப்ரமணியன், இல்லை இல்லை, சுப்பி, அப்படி தான் நாயகி சில்வியா கூப்பிடுவாள்.
கோடைவிடுமுறை நியாபகம் இருக்கிறதா, அந்த கோடைவிடுமுறையில் போகும் விடுமுறை பயணங்கள் நியாபகம் இருக்கிறதா. அப்படியான ஒரு கோடைவிடுமுறையில், கிராமத்து ஆண்-பெண் இருபாலர் அரசு பள்ளியில் படித்து இருந்தாலும், பெண் பிள்ளைகளிடம் பேசாத, பழகிராத சுப்பி, மறுபுறம் நகர பெண்பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் படித்த நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும், அசாத்திய குறும்புக்காரி சில்வியா.
சுப்பி, சில்வியாவை சந்தித்தது, பழகியது, அவளால் பல இடத்தில மாட்டியது என முதல் விடுமுறையில் போதுமென்ற அளவுக்கு பழகிய அவர்கள், பின்வரும் விடுமுறையில் சந்தித்தார்களா, விடுமுறையில் வந்த பிரச்சனைகள் என்ன, இப்பொது யாரை பார்க்க சுப்பி போய் கொண்டு இருக்கிறான் என்பதே மீதி கதை.
நண்பர்கள் காதலர்கள் ஆனால், அந்த காதலர்களுக்கு இடையில் காலத்தினால் பிரிவு ஏற்பட்டு வேறு வேறு திசையில் பயணித்தால், அவர்கள் வேறு ஒருவரை கல்யாணமும் செய்து கொண்டால், அப்படியாக கல்யாணம் செய்த பிறகு நடந்த வாழ்க்கை சுழலுக்கு அப்புறம் மீண்டும் சந்தித்தால், மறுபடியும் நண்பர்களாய் தொடர்ந்தால். அவ்ளோதாங்க கதை. இதை மாஸ்டர் எப்படி சொல்லி இருக்கார் என்பதே முக்கியம்
எஸ்.ராவை விட்டுவிட்டால் பூமி, பாறை, பாறைக்குள் இருக்கும் கல் , கல்லுக்குள் இருக்கும் மண், மண்ணுக்குள் இருக்கும் மண்புழு, மண்புழுவுக்குள் இருக்கும் உயிர், உயிருக்குள் இருக்கும் உணர்வு ன்னு வருணித்து கொன்டே இருப்பார். சில சமயம் அவருடைய வருணனைகள் அவ்வளவு அழகா இருக்கும். இந்த புத்தகத்திலேயே அவர் கரிசல் காட்டு வெயிலை அவ்வளவு அழகாக வருணித்து இருப்பார். இன்னொருபுறம் வருணித்து வருணித்து படிக்கும் நம்மளையே அயர்ச்சி அடைய செய்து இருப்பார். சினிமாவிற்கு போகும் சில சமயங்களில், நேரம் தவறி முதல் 15 நிமிடங்களை தவற விட்டு இருப்போம். ஆனால் படம் முடியும்போது தவறவிட்ட முதல் 15 நிமிடங்கள் பெரிதாய் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்காது. அதே மாதிரி தான் இந்த புத்தகமும், முதல் 25 பக்கங்களை தாண்டி நீங்கள் கதைக்குள் நுழையலாம். பெரியதாய் ஒன்றும் தவற விட்டு இருக்க மாட்டிர்கள்.
பதின்பருவ காதலில் நீங்கள் வீழ்ந்து இருந்து இருந்தால், அந்த காதலை, முதல் காதலை தவற விட்டு இருந்தால்(நெறைய "தால்" போட்டுட்டேன் போலயே, பரவால்ல), அட குறைந்தபட்சம் காதலை நேசிக்கிறவராக இருந்தால் போதும், அந்த காதல் ஏற்படுத்தும் வேதியல் மாற்றங்களுக்கும், அதன் குறும்புகளுக்கும், அதன் அழகியலுக்கும் நீங்களும் அடிமை என்றால், இந்த புத்தகம் உங்களுக்குள் பல புன்முறுவல்களை கொண்டு வரும்.
தொடர்ந்து நாவல்களா படிச்சிட்டு வர்றோமே, கொஞ்சம் மாத்தி படிப்போம் ன்னு அரசியல் சைடு போலாம் ன்னு பார்த்தால், ஏற்கனவே அரசியல் களம் தேர்தலை எதிர்கொண்டு நெருப்பா எரியுது. ஊடங்களில் வரும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் புரிஞ்சிட்டு படிச்சு பதில் சொன்னாலே போதும். இப்போதைக்கு அதை தொட வேண்டாம் ன்னு மனசு சொன்னாலும், மூளை கேக்கல. சரி மனசுக்கும், மூளைக்கும் தோதுவான ஒரு புத்தகம் ன்னு இதை எடுத்தேன். இந்த புத்தகமும் சும்மா இல்லை. 1990-களில் தமிழக அரசியலை திருப்பி போட்ட படுகொலைக்கான காரணங்களை அதே பதற்றத்தோடு விவரிக்கும் ஒரு புத்தகம். இந்த படுகொலை ஏற்படுத்திய கரும்புள்ளிகள், ஆறாத காயங்கள் இன்னும் அரசியலிலும், தமிழகத்திலும் இருக்கு என்றே சொல்லலாம். சரி வாங்க, புத்தக விமர்சனத்திற்கு போவோம்.
ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்
ஆசிரியர்: நக்கீரன் புலனாய்வு குழு
பதிப்பகம்: நக்கீரன் பதிப்பகம்
விலை: 225 ரூபாய்
பக்கங்கள்: 192
புத்தகம் அறிமுகமானது எப்படி:
அரசியல் பேசும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன் நான். அப்பா தீவிர திராவிட பற்றாளர். 15 வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்பொது பார்க்குற மாதிரி செய்தி சேனல்களும், இணைய வசதியும் கிடையாது. ஒரு பரபரப்பு செய்தியை, புலனாய்வு செய்தியை, திரைமறைவுக்கு பின்னால் நடக்கும் செய்திகளை தாங்கி வரும் நக்கீரன், ரிப்போர்ட்டர் புத்தகங்கள் வெகு பிரபலம். அப்பாவும் ஒவ்வொரு வாரமும் மறக்காமல் வாங்கி படிப்பார். அப்பாவினால் நானும். அப்படி ஆரம்பித்த நக்கீரனின் சகவாசம் இன்று தொடர்கிறது. திரைமறைவுக்கு பின்னால் நடக்கும் நிகழ்வுகளை நக்கீரனை போல் வெளிக்கொண்டு வந்தவர்கள் யாரும் இல்லை. ராஜிவ் படுகொலையாய் இருக்கட்டும், வீரப்பனை சந்தித்து அவன் சார்பான செய்திகளை கொண்டு வருவதாகட்டும், ஜெயலலிதா சம்மந்தமான கொடநாடு பங்களா, தருமபுரி பேருந்து எரிப்பு, சந்திரலேகா ஆசிட் வீச்சு செய்திகளாகட்டும், சமீபமாக வந்த பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு செய்திகளாகட்டும் நக்கீரனை மிஞ்ச ஆள் இல்லை இந்த தமிழ் பத்திரிகை உலகத்தில். அப்படியாகப்பட்ட ஒரு நக்கீரனிடம் இருந்து ஒரு புத்தகத்தை இந்த 2021 வருடம் புத்தக கண்காட்சியில் பார்த்தேன். அது தான் ராஜிவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள். ராஜிவ் படுகொலையின் செய்திகளை பல விடீயோக்கள், பதிவுகள், செய்திகள் வாயிலாக படித்து இருந்தாலும், நக்கீரன் வாயிலாக படிக்க ஒரு ஆர்வம். அதான் உடனே வாங்கிவிட்டேன்.
விமர்சனம்:
புத்தகம் அறிமுகத்தில் நக்கீரன் இதுவரை சிறப்பாக கையாண்ட புலனாய்வு செய்திகள் சிறு தொகுப்பாய் கொடுக்கப்பட்டு இருந்தது. அவை அத்தனையுமே தமிழகத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள், தமிழகத்தை ஆட்டி படைத்த நிகழ்வுகள். இன்று பொய்யை மட்டுமே கக்கிக்கொண்டு இருக்கும் ஊடகங்களுக்கு மத்தியில், உண்மையை வெளிக்கொண்டு வர நக்கீரன் எடுத்த முயற்சிகள் சிறப்பு. மாட்டிராத டா கைப்புள்ள ரேஞ்சுக்கு கஷ்டப்பட்டு செய்தி சேகரித்து இருப்பார்கள் போலிருக்கு.
பக்கங்களும் மாறுகின்றன, காட்சிகளும் விரிகின்றது. 1991 ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி இரவை அப்படியே செய்திகள் வாயிலாக கண்முன்னே கொண்டு வருகின்றது நக்கீரன். ஒரு இளம் தலைவர், இப்பொது ராகுல் மாதிரியே, அப்போதைய ராஜீவ் காந்தி, துடிப்பும், ஆற்றலும் உள்ள ஒரு முன்னாள் பிரதமர். அவருடைய தமிழக வருகையில் கடைசி நிமிடங்களில் நடந்த குளறுபடிகள், அவர் இறந்த போது, தமிழக காங்கிரசு தலைவர்கள் ஒருவரும் அவர் கூட இல்லாமல் ஒருசேர தப்பித்தது, அதை ஒட்டிய கலவரங்கள், அரசியல் நிகழ்வுகள் அவர் படுகொலை வேற ஒருவரால் நடத்தப்பட்டு இருந்தாலும், அதை இயக்கியவர்கள் கூட இருந்தவர்களே என்ற பல்வேறு விதமான சந்தேகங்களை அரசியல் உலகில் கிளப்பி விட்டு இருந்தது.
இன்றும் பொதுமக்களை நோக்கி, யாருங்கய்யா ராஜீவை கொலை செஞ்சாங்க ன்னு கேட்டால், எல்லோரும் ஒரு சேர, அதுவாங்க, அது இலங்கையில் ஒரு அமைப்பு இருந்துச்சே, தடை கூட பண்ணாங்களே தமிழ்நாட்டுல, ஆங், விடுதலை புலிகள் ன்னு தெளிவாக சொல்லுவார்கள். இது மக்களால் படிச்சு அறியப்பட்ட செய்தி அல்ல. மாறாக, படுகொலையை சார்ந்து ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தங்கள் வசதிக்கேற்றார் போல் அந்த பழியை விடுதலைப்புலிகள் மேல் போட்டுவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
நக்கீரன் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இந்த படுகொலையை அலசி இருக்கிறார்கள். படுகொலைக்கு பிறகு நடந்த விசாரணைகள், விடுதலைப்புலிகளின் தலையமகத்திலிருந்து வந்த மறுப்பு செய்தி, மேற்கு இந்தியா என்ற அமெரிக்க வார இதழ் அலுவலகத்திற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு, படுகொலையில் இறந்தாலும் உதவிய பாபுவின் கேமரா (இதே மாதிரி தான் கே.வி. ஆனந்த் இயக்கிய கோ படத்தில் குண்டுவெடிப்பில் கேமரா கொண்டு துப்பு துலக்கி இருப்பாங்க. நாமளும் ஒரு புலனாய்வு புலி தான்) , படுகொலை நடந்த காலத்தில் இந்தியாவில் இருந்த புலிகளின் வெடிகுண்டு நிபுணர் இளையதம்பி கிருபாளன், சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி தொடர்பு, கூட இருந்த வாழப்பாடி, ஜெயந்தி நடராஜன், மூப்பனார் போன்றோரின் தகவல்கள், இலங்கை சென்று விசாரித்தது என ஒரு பெரிய வட்டத்தையே இந்த படுகொலையின் பொருட்டு இந்திய உளவுத்துறையும், சி.பி.ஐ யம் உருவாக்கி இருந்தது. அதை அத்தனையும் நக்கீரன் சேகரித்து கொடுத்துள்ளது.
மேலோட்டமான விசாரணையில் பார்ப்பதற்கு, விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட படுகொலை மாதிரி தெரிந்தாலும், இது சர்வதேச சதிகளோடு நடைபெற்ற ஒரு மாபெரும் தாக்குதல் என்ற கோணத்தையும் நக்கீரன் வைக்கிறது. CIA அமெரிக்காவின் முக்கிய உளவு துறை அமைப்பு, அது என்றைக்கும் இந்தியாவில் ஒரு நிலையான அரசு அமைவதை விரும்பாது, அதும் இடதுசாரி உடனான கூட்டணி ஆட்சி எனில் அதை விரும்பவே விரும்பாது(ஜோதிபாசுவும், ராஜீவும் கூட்டணி), அதுனாலயே அவர்கள் ராஜீவை கொன்று இருப்பார்கள், அதற்கு அவர்கள் விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி கொண்டார்கள் என நக்கீரன் எடுத்து வைக்கும் வாதம் முக்கியமானது.
சி.பி.ஐ யின் பல கேள்விகளுக்கு விடைகள் தெரிவதற்கு முன்பாகவே, சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினால், ஏனோ தானோ என்று விசாரித்தது, தொடக்கம் முதல், இறுதி வரை விடுதலைப்புலிகளை தாண்டி சிந்திக்காதது, படுகொலையில் சம்மந்தப்பட்டவர்கள், விடுதலைப்புலியின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற ஒரு புள்ளியை வைத்துக்கொண்டு அதை சுற்றியே விசாரித்தது, கைது செய்தது, இதோடு தொடர்புடைய தமிழக அரசியல்வாதிகளை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வராதது எப்படி பல கேள்விகளை இந்த புத்தகம் உங்கள் கண்முன்னே வைக்கும்.
ஒருவேளை கொகுணகுண்டா துப்பாக்கி சூட்டில், சிவராசனும், சுபாவும்(முக்கிய கொலையாளிகள்/கூட்டாளிகள்) இறக்காமல் இருந்து இருந்தால், இந்நேரம் பல கேள்விகளுக்கு விடை தெரிந்து இருக்கும். பல அரசியல் சூழ்ச்சிகள் தெரிந்து இருக்கும். ஆனால் அரசியல்வாதிகள் அதை வெளிய வரவிடாமல் செய்து இருப்பார்கள் என்பது வேற விஷயம். எப்படி பேரறிவாளன், நளினி இந்த படுகொலை சார்ந்து விசாரணை வளையத்திற்குள் வந்தார்கள், எப்படி கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் நக்கீரன் விவரிக்கிறது.
நக்கீரன் கோபால் இந்த புத்தகத்தை முடிக்கும் முன் இப்படி குறிப்பிட்டு இருப்பார்,
ராஜீவ் படுகொலை... செய்தியாகவும் வரலாறாகவும் மட்டுமே அறியும் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்தது ஒரே ஒரு கோணம்தான்; ஒரு கோட்பாடுதான். அது அந்தப் படுகொலை, புலிகளால் நிகழ்த்தப்பட்டது என்ற அந்தக் கோட்பாடு. ஆனால், கூரை இல்லாத வீட்டில் வாசற்கதவை அடைந்துவிட்டேன், இனி திருடன் வரமாட்டான் என்று நம்புவதைப் போலத்தான் இந்த விசாரணையின் முடிவுகள் நம்பப்படுகின்றன. விடுதலைப்புலிகள் என்ற ஒரே கோட்டில் சென்று இலக்கை எட்டிவிட்டோம் என்று கூறிக்கொள்கிறார்கள். அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. சி.ஐ.ஏ... சந்திராசாமி... காங்கிரஸ்... அ.தி.மு.க. புள்ளிகள்... இன்னும் பல முடிச்சுகள். நக்கீரனின் இந்த விசாரணை வரலாற்றை வாசிப்பவர்களுக்கு மனதில் எழும் அத்தனைக் கேள்விகளும் இன்னும் உயிருடன் இருக்கின்றன.
இன்றும் இந்த படுகொலை பற்றி பேசும் போதுலாம் அரசியலில் ஒரு தீக்கனல் உருவாகுவதை காணலாம். இந்திய அரசியல் வரலாற்றில் நடந்த படுகொலைகளில் இது மிக முக்கியமானது. மற்ற கொலைகளில், காரணம், செய்தவர்கள் பற்றிய ஒரு மேலோட்ட தகவல்களாவது இருக்கும். ஆனால், இந்த படுகொலையில் வேண்டுமென்றே பல தகவல்கள் மறைக்கப்பட்டு, போலியாக செய்திகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கும் இந்த படுகொலை பற்றி தெரிய வேண்டுமானால், இது ஒரு முக்கியமான புத்தகம். படிக்க தவறாதீங்க.